கோவில் என்பது குறைகளையும் குற்றங்களையும் வேதனைகளையும் சொல்லி அழுகும் இடமல்ல..!

treasure-in-temple.jpg

கோவில் என்பது குறைகளையும் குற்றங்களையும் வேதனைகளையும் சொல்லி அழுகும் இடமல்ல..!

சீதாவை இராவணன் சிறைப்பிடித்துச் சென்று “எத்தனையோ கொடுமைப்படுத்தினான்..!” என்று வேதனைப்படுகின்றோம். ஏன் இராமனே கர்ப்பிணியான சீதாவைக் காட்டில் கொண்டு போய் விட்டான்..! என்று வேதனைப்படுகிறோம்.

இராமன் நான் மக்களுக்காக வேண்டி இதைச் செய்கிறேன்…! மக்கள் என்னைக் குறையாகச் சொல்கிறார்கள் நீ போ….! என்று கர்ப்பிணியான சீதாவைக் காட்டில் தள்ளி விட்டால் அது என்ன செய்யும்…?

இராமாயணக் காவியத்தைப் படித்துப் பாருங்கள். ஏனென்றால் நாம் நுகரும் உணர்வுகள் சீதா இராமா. அந்த மகிழ்ச்சியான எண்ணங்கள் நமக்குள் அந்த உணர்ச்சியைத் தூண்ட வேண்டும். நாம் தூண்டுகின்றோமா…?

1.கண்ணிலே பார்ப்பது துவைதம்
2.நுகர்ந்து (சுவாசித்து) அறிவது அத்வைதம்
3.சுவாசித்தது நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வின் தன்மை விசிஷ்டாத்வைதம்.

தூய்மையான உணர்வை உன் உடல் ஆக ஆக்கு. இது தான் கோவிலின் தத்துவம். ஆனால்
1.கோவிலுக்குப் போய் எத்தனை பேர் அழுகாமல் வருகின்றார்கள்..?
2.அங்கே குறைகளைச் சொல்லாதவர்கள் யார்…?

“சரணாகதித் தத்துவம்” என்று ஒன்றை மட்டும் பழகி வைத்திருக்கின்றோம். காசைக் கொடுத்து அபிஷேகம் எல்லாம் செய்து பழம் மற்ற பொருள்களை எல்லாம் கொடுத்து அங்கே குறைகளைத் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

கோவிலை மதிக்கின்றோமா…? நம் உடலைக் கோவிலாக மதிக்கின்றோமா…? உயிரை ஈசனா மதிக்கின்றோமா…? ஆக கோவிலுக்குச் சென்று எதை அபிஷேகம் செய்கிறோம்…?

குறைகளையும் குற்றங்களையும் வேதனைகளையும் சொல்லி உயிரால் உருவாக்கப்பட்ட உடலான ஆலயத்தை அசுத்தப்படுத்துகின்றோம். நன்மை ஏதாவது செய்கிறோமா…!

சில குடும்பங்களில் அண்ணன் தம்பிக்குள் ஒற்றுமை இல்லாது போய்விடுகிறது. எத்தனையோ பேர் பஞ்சாயத்துப் பண்ணினாலும் ஒன்றும் அது முடியவே முடியாது

ஒருத்தருக்கு ஒருத்தர் அண்ணன் தம்பிக்குள் வீராப்பு செய்து கொண்டு கடைசியில்…
1.தன் உடலில் நோய்களைத் தான் உருவாக்கிக் கொள்கிறார்களே தவிர
2.இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே போக வேண்டும் என்பதை மறந்து விட்டார்கள்.

ஆனால் நாம் நுகர்ந்த அந்த உணர்வுகளை எல்லாம் நம் உயிர் படைத்தே தீரும். அதை நாம் அனுபவித்தே தான் தீர வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வை எல்லாம் நம் உயிர் இயக்கிக் காட்டுகிறது. அப்பொழுது நம் ஆறாவது அறிவை வைத்து வரும் தீமைகளைத் துடைக்க வேண்டுமா… இல்லையா,..?

1.தீமைகளைத் துடைப்பதற்கு.. நம் ஆறாவது அறிவை எப்படிப் பயன்படுத்துவது…? என்பதைத்தான்
2.ஆலயங்களிலும் காவியங்களிலும் ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிடும் ஆறாவது அறிவைச் சரியான நிலையில் பயன்படுத்துவதற்காக உருவம் அமைத்து தெய்வச் சிலைகளுக்குப் பாலபிஷேகம் சந்தனம் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் செய்து அதைக் காட்டுகின்றனர்.

அதைப் (துவைதம்) பார்த்ததும்…
1.எங்கள் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.குடும்பத்திலுள்ளோர் எல்லோரும் ஒரு ஆனந்த நிலை பெற வேண்டும்
3.எங்கள் வீட்டிற்கு வரும் அனைவரும் ஆனந்த நிலை பெற வேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அந்தப் பாலை போல மனம் பெற வேண்டும்
5.ஒன்றுபட்டு வாழும் அந்த அருள் சக்தியும் பண்புடன் வாழும் அருள் சக்தியும் எல்லோரும் பெற வேண்டும் என்று
6.சாமிக்கு அந்த அபிஷேகம் செய்யும் பொழுது இப்படி எல்லாம் எண்ணினால் (அத்வைதம்) ஒன்றுபட்டு வருமா வராதா…?

அந்த உயர்ந்த உணர்வுகள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் விளையும் (விசிஷ்டாத்வைதம்). இதைத் தூண்டுவதற்குத் தான் ஞானிகள் சிலையை வைத்தார்களே தவிர
1.அங்கே போய் கஷ்டத்தை எல்லாம் சொல்லி
2.நான் அந்த அத்தனை நேரம் உனக்கு விரதம் இருந்தேன்… என்னை ஏன் இன்னும் சோதிக்கின்றாய் என்று அழுது புலம்புவதற்காக அல்ல…!

ஆகவே நம்மைச் சுத்தப்படுத்துவதற்காக ஞானிகள் கட்டிய கோவிலை நாம் அசுத்தப்படுத்தலாமா…?

என் பையனுக்கு அந்த அருள் ஞானம் கிடைக்க வேண்டும். அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அருள் ஞானம் பெறவேண்டும் நாங்கள் பார்க்கும் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று எண்ண வைப்பதற்குத்தான் கோவிலைக் கட்டினார்கள்.

Leave a Reply