ககனமணியின் முக்கியத்துவம் என்ன…?

Astral path and way kakana mani

ககனமணியின் முக்கியத்துவம் என்ன…?

கேள்வி:-
சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விடுத்துச் சூட்சமம் கொண்டு விண்ணுக்குச் செல்லும் செயல் முறைக்குக் ககனமணி உள்ளதப்பா…! என்று ஈஸ்வரபட்டர் சொல்கிறார். ககனமணிக்கு விளக்கம் தேவை.

பதில்:-
நம் குருநாதருக்கு ரசமணிச் சித்தர் என்ற பெயர் உண்டு. அவர் நம் சாமிகளை (ஞானகுரு) ஆரம்பத்தில் சந்திக்கும் பொழுது வெள்ளி உருண்டைகளைக் கொடுத்து “உன் வீட்டில் வைத்துக் கொள்…!” என்று சொல்கிறார்.

ஆனால் சாமிகள் ஈஸ்வரபட்டரின் பைத்தியம் போன்ற தோற்றத்தைக் கண்டு அதை வாங்க மறுத்து விட்டதாகச் சொல்வார்.

வெள்ளி உருண்டை என்பது பாதரசத்தில் பல சாரணைகளை ஏற்றப்பட்டது தான் அது. அன்றைய சித்தர்கள் பலதரப்பட்ட ஔஷதங்களைச் செய்தார்கள். அதிலே அவர்கள் அதிகம் உபயோகப்படுத்திய பொருள் தான் இந்தப் பாதரசம்.

சூரியன் நட்சத்திரங்கள் கோள்கள் சத்தை எல்லாம் எடுத்து அதிலுள்ள நஞ்சைப் பிரித்துப் பாதரசமாகத்தான் மாற்றிக் கொண்டேயுள்ளது. நாம் வெயிலாகப் பார்ப்பது அனைத்துமே அது தான்.

சூரியன் எப்படித் தான் பேரொளியாக ஆகி இந்தப் பிரபஞ்சத்தையும் ஒளிமயமாக மாற்றுகின்றதோ அது போல் நம் உயிருக்கும் அந்த ஆற்றல் உண்டு.

சூரியனைப் போல் நாமும் நம் மீது மோதும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் பெறும் பொழுது பேரொளியாக ரசமணியாக நம் உயிர் மாறுகின்றது. அப்படி ஆன நிலையைக் குறிப்பதற்குத்தான் குருநாதரை ரசமணி சித்தர் என்று அழைத்தார்கள்.

உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றினாலும் “விண் செல்லும் ஆற்றல் தேவை…!”

1.எத்தனையோ ஞானிகளும் தவசிகளும் ஒளியாக ஆகி
2.இந்தப் பூமிக்குள்… தன் உடலுக்குள்… (இறக்காமல்)
3.“சிறைக்குள் அடைப்பட்ட மாதிரி இருக்கின்றார்கள்…!” என்று
4.ஈஸ்வரபட்டர் நம் சாமிகளை கேதார்நாத் பத்ரிநாத் போன்ற இடங்களுக்குச் செல்லச் செய்து நேரடியாக அவர்களைக் காட்டுகின்றார்.

அதாவது கேதார்நாத்தில் ஓ…ம் நமச்சிவாய…! என்றும் பத்ரிநாத்தில் ஹரி ஓ…ம் நமோ நாராயணா…! என்றும் பனிப்பாறைகளுக்குள் அங்கே சொல்லிக் கொண்டே உள்ளார்கள்.
1.ஆனால் ஒளியான உயிராத்மாக்களை விண்ணுக்கு உந்தித் தள்ளவோ
2.அல்லது தன்னிச்சையாக விண் செல்லவோ அவர்களால் முடியவில்லை என்று காட்டுகின்றார்.

உயிரை ரசமணியாக மாற்றினாலும் விண் செல்லும் நிலையைத்தான் ஈஸ்வரபட்டர் அங்கே ககனமணி என்று காட்டுகிறார். அகஸ்தியன் தன்னிச்சையாக விண் சென்றவன். துருவ் நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அகஸ்தியன் உணர்வைச் சீராகப் பின்பற்றியவர்கள் விண் சென்ற அவனுடைய ஆற்றலை எடுத்து அவனைப் போலவே விண்ணுலகில் சஞ்சரித்து ஏகாந்த நிலை கொண்டு அவனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

இந்த உடலை விட்டு எந்த நேரம் அகன்றாலும்
1.நம் உயிராத்மா விண்ணுலகம் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தால்
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்ற பற்று இருந்தால்
3.நாம் அந்தக் ககனமணியைப் பயன்படுத்தியவர்கள் ஆகின்றோம்.
(ஏனென்றால் பலருக்கு இந்த உடல் பற்றும் உலகப் பற்றும் உள்ளது. அந்தப் பற்று இருந்தால் நாம் விண் செல்லவே முடியாது)

நம் உயிர் விண்ணிலிருந்து தான் பூமிக்குள் விஜயம் செய்தது. அது தான் விஜய தசமி. பல கோடிச் சரீரங்கள் பெற்று வளர்ச்சியில் மனிதனாகின்றது. மனிதனான பின் அடுத்த வளர்ச்சியாக எந்த விண்ணிலிருந்து தோன்றியதோ அந்த விண்ணிலே ஒளியாகச் சென்று நட்சத்திரமாக மண்டலப் படைப்பாக ஆகும் நிலையே ககனமணி.

அகண்ட அண்டத்திலே எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். “ஆதி சக்தியின் சக்தியாகச் செயல் கொள்வது என்பதும் அதுவே…!”

Leave a Reply