நம் உடலில் உள்ள தீமைகளை முழுவதும் அழிக்க முடியுமா…?

meditation-results.jpg

நம் உடலில் உள்ள தீமைகளை முழுவதும் அழிக்க முடியுமா…?

வயல்களில் நாம் விளைய வைத்த நல்ல பயிர்களை அறுவடை செய்து முடிந்த பின் அந்த வித்துக்கள் அடியோடு மாய்ந்து விடுகின்றது. திருப்பி அதுவாக முளைத்து வருவதில்லை.

ஆனால் மற்ற புல் பூண்டு தாவர இனங்களின் செடிகள் பூமிக்குள் வெகு ஆழத்தில் பதிந்து இருக்கின்றது. பூமியின் வெப்பத்தால் அந்த விதைகள் அப்படியே பாதுகாக்கப்படுகின்றது.

1.மழை பெய்தால் போதும்…
2.நீர் சக்தியை நுகர்ந்து அந்தச் செடி (களைகள்) பூமியை விட்டு வெளியே வருகின்றது.
3.மழை பெய்த இரண்டு நாளுக்குள் புல் பூண்டுகள் கருவுற்று முளைத்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலில் எலும்புக்குள் தீமை என்ற நிலைகள் ஊழ்வினையாக ஆழமாகப் பதிந்துள்ளது. நாம் நன்மை என்ற நிலைகளில் வளர்த்திருந்தாலும் அது எளிதில் கரைந்து விடுகின்றது. அது ஆழமாக இருப்பதில்லை.

வேதனை கோபம் போன்ற உணர்வுகள் வலுவான நிலைகள் கொண்டு நமக்குள் அந்த ஆழமாக ஊடுருவியிருப்பதனால் நமது வாழ்கையில் சந்தர்ப்பத்தால் வேறொருவரின் உணர்வுகளைக் கேட்கவோ அல்லது பார்த்து நுகர நேர்ந்தால் போதும். அது மறுபடியும் ஜீவன் பெற்றுவிடும்.

உதாரணமாக குடும்பத்தில் திடீரென்று “தந்தை இறந்து விட்டார்…!” என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை எண்ணி
1.அப்பா இருந்தார்… ஆனால் இப்படிப் போய்விட்டார்…! என்றோ
2.அவர் இப்பொழுது இருந்தால் கஷ்டமெல்லாம் இருக்காது… ஆனால் அவர் இல்லையே..! என்று
3.ஏக்கமாக மீண்டும் மீண்டும் அவரை எண்ணினால் போதும்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் எப்படித் துயரங்கள் பட்டாரோ அதே உணர்வின் துயரங்களை நமக்குள்ளும் இயக்கத் தொடங்கி விடுகின்றது. அவர் கடைசிக் காலத்தில் நோயால் மிகவும் அவதிப்பட்டிருந்தால் அந்த நோயும் நம்மை இயக்கத் தொடங்குகின்றது.

ஏனென்றால் நாம் அவரைப் பற்றி நினைக்கும் போது காற்றுக்குள் படர்ந்துள்ள அவரின் உணர்வுகள் கவரப்பட்டு அந்த உணர்வுகள் நமக்குள் வளரத் தொடங்கிவிடுகின்றது.

(1.ஏனென்றால் நமக்குள் அவரைப் பற்றிய பதிவு இருக்கிறது.
2.அவதிப்பட்ட உணர்வும் இருக்கிறது.
3.எண்ணியவுடனே அந்த வித்துக்கள் ஜீவன் பெற்று இயக்கி அது வளரத் தொடங்குகிறது)

இதை போன்ற நிலைகளை நாம் தடைப்படுத்த வேண்டும் என்றால் உடலை விட்டுப் பிரிந்த தந்தையின் உயிரான்மாவை உந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் முதலில் இணைக்க வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அதிகாலையில் துருவ தியானத்தில் எடுக்கப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் அதிகமாகப் பரவத் தொடங்குகின்றது.

அந்த வலிமை பெற்ற பின் அந்த தீமை என்ற உணர்வுகளை இப்ப நாம் என்ன செய்கிறோம்.

நெல்லை நாம் வயலில் பயிரிட்டாலும் அதனுடன் சேர்ந்து புல் பூண்டு எல்லாம் வருகின்றது. வயலிலே தண்ணீர் அதிகமாகக் கட்டியிருந்தால் அந்தப் புல் பூண்டுகள் வளர்வதில்லை. ஏனென்றால்
1.நீரில்லாது காய்ந்து வறட்சியாக இருந்தால் புல் பூண்டுகள் வளர்ச்சி பெறுகின்றது.
2.தண்ணீரை அதிகரிக்கப்படும் போது வளர்ந்து வரும் தழைகள் அழுகிவிடுகின்றது… களைகள் வளர்வதில்லை.

தண்ணீரை நிறுத்திய பின் நெல் வயலைப் பார்த்தால் ஏராளமாகப் பல களைகள் முளைத்து விடுகின்றது. பார்க்கலாம் நீங்கள்…!

இதைப் போன்று தான் நம் உடலிலும் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் நம் ஆன்மாவில் அதிகமாகப் பெருக்கிக் கொண்டால்
1.எத்தகைய தீமையான வித்துக்களையும் வளர விடாது
2.ஒவ்வொரு நிமிடமும் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.

வயல்களைப் பண்படுத்தி அந்த நெல் மணிகளை எப்படி நாம் எடுக்கின்றோமோ இதை போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கிப் பேரருள் பேரொளியாக நம் உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்.

ஏனென்றால் நமக்குள் ஏற்கனவே பதிவானது அழிவதில்லை. பேரருள் உணர்வினை நமக்குள் பெருக்கிய பின் மற்ற தீமைகளைச் சிறுத்து இந்த உணர்வினை ஒளியாக மாற்றினால்
1.உடலை விட்டு நாம் செல்லும் பொழுது
2.தங்கத்திலே திரவகத்தைச் சேர்த்துச் செம்பையும் வெள்ளியையும் கரைப்பது போன்று தொக்கிய நஞ்சுகளைக் கரைத்து விடலாம்
3.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே பேரானந்த நிலையில் ஒளியாக வாழ முடியும்.

Leave a Reply