நாள் முழுவதுமே மகிழ்ச்சியாக இருந்தாலும் அதற்கடுத்து சங்கடமும் வெறுப்பும் எதனால் வருகிறது…?

Divine spiritual rays

நாள் முழுவதுமே மகிழ்ச்சியாக இருந்தாலும் அதற்கடுத்து சங்கடமும் வெறுப்பும் எதனால் வருகிறது…?

 

சில நேரங்களில் வாழ்க்கையில் தடங்கல்கள் ஏற்பட்டால் நம்மையறியாமலே சோர்வும் வரும். அந்த நேரத்தில் கடுமையான வெறுப்பும் வரும். அப்பொழுது நாம் என்ன நினைக்கின்றோம்…?

ஹு..ம்…! எவன் முகத்தில் முழித்தேனோ…! காலையிலிருந்து இந்த மாதிரி எதை எடுத்தாலும் வெறுப்பாக இருக்கிறது..! என்று அந்த உணர்வுகளைத் தான் பெருக்குவோம்.

பேசுவது யார்…? செயல்படுத்துவது யார்…? சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் பதிவாகி மீண்டும் நினைவுக்கு வருகிறது. நாம் சோர்வடையும் போது அது ஆக்கிரமித்துக் கொள்கிறது.
1.ஆக்கிரமித்துக் கொள்வது எது…?
2.நம் உடலில் உள்ள சந்தர்ப்பத்தால் பதிவான அப்படிப்பட்ட அணுக்கள் தான்.

நாம் சந்தோஷமாக இருக்கும் போது அதற்குச் சாப்பாடு கிடைப்பதில்லை.. அது பட்டினியாக இருக்கிறது. ஒதுங்கி இருக்கிறது. ஆனால் சந்தோஷத்தில் சிரித்து ஆடிப் பாடி முடிந்த உடனே
1.கொஞ்சம் சோர்வடைவோம்.
2.“லபக்…!” என்று அது முன்னாடி வந்துவிடும்.

நீங்கள் சும்மா இருக்கும் போது பாருங்கள்…! என்னைத் திட்டினார்கள்… எனக்கு இடைஞ்சல் செய்தார்கள்… என்னைக் கோபித்தார்கள்… என்ற நிலையில் அந்த அத்தனை நினைவுகளும் வரும். இவை எங்கிருந்து வருகிறது…?

ஏற்கனவே நமக்குள் பதிவு (RECORD) செய்த உணர்வுகள் அது தன் உணவுக்காக ஏங்கும் பொழுது அதே உணர்வுகளைக் காற்றிலிருந்து இழுத்து உணவாக எடுத்துக் கொள்கிறது. உணவைக் கொடுத்து அந்த அணுக்களைப் பிழைக்க வைக்கிறது.

வித்து நிலத்தில் பதிந்தால் தான் அந்தச் செடி முளைக்கும். பதிவு இல்லை என்றால் முளைக்காது. அதைப் போன்று தான் நமக்குள் எந்தெந்த உணர்வுகள் பதிவாகியிருக்கின்றதோ அது அது தன் உணவை எடுக்கத்தான் செய்யும்.

விவசாய நிலங்களில் புல்லையோ மற்ற களைகளையோ நீங்கள் அறுத்து விடுகிறீர்கள். ஆனால் புல்லை அறுத்த பின்னாடி அந்த வித்து மீண்டும் தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டு தான் இருக்கிறது.

அதைப் போல் தான் நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் உங்களுகுள் ஆழமாக ஊன்றிய உணர்வுகள் உடலுக்குள் எத்தனையோ உள்ளது. எப்படி…?

வாழ்க்கையில் எதை எல்லாம் உற்றுப் பார்க்கின்றோமோ அது எல்லாம் வீரிய வித்தாக ஊன்றப் படுகிறது. பிறரைப் பார்க்கும் பொழுது வெறுப்பு கோபம் வேதனை போன்ற எத்தனையோ உணர்வுகள் நம் உடலில் அது பதிவாகி விடுகிறது.

எங்கே கொண்டு போய் பதிவாக்குகிறது…? நம் எலும்புக்குள் உள்ள ஊனில் பதிவாக்குகின்றது. அங்கிருந்து தன் இனத்தை உடலில் தசைகளுக்குள்ளும் மற்ற உறுப்புகளிலும் பெருக்குகின்றது.

இப்படிப்பட்ட அணுக்கள் பெருகினால் உடலில் நோயாகின்றது. நோயாகும் பொழுது அதை நீக்க மேலெழுந்தவாரியாக நீங்கள் மருந்து குடித்தாலும் சரி அல்லது எந்த வைத்தியத்தைச் செய்தாலும் சரி.
1.எலும்புக்குள் ஊனுக்குள் மறைந்திருக்கும் மூல வித்தை மாற்ற வேண்டும்.
2.அதை மாற்றவில்லை என்றால் மறுபடி முளைக்கத் தான் செய்யும்.

அந்த ஊனை மாற்ற வேண்டும் என்றால் விஞ்ஞானத்தால் கொடுக்கப்படும் மருந்துகளால் முடியாது. அதை மாற்ற வேண்டும் என்றால் நம் கண்ணின் நினைவைக் கொண்டு வந்தால் தான் முடியும். ஏனென்றால் கண்ணால் பார்த்துத்தான் எலும்புக்குள் பதிவு செய்கின்றோம்.

“ஈஸ்வரா…!” என்று சொல்லி உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படர வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடலில் உள்ள ஜீவன்மா ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் கண்ணின் நினைவைக் கொண்டு போக வேண்டும்.

நம்மைக் கோபித்தவர்களைப் பார்த்தாலும் அடுத்த நிமிடமே ஈஸ்வரா என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
1.“டக்…! என்று கண்ணை மூடி கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி
2.என் உடலில் உள்ள ஜீவான்மாக்களும் ஜீவ அணுக்களும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நமக்குக் கோபம் வரும் போது என்ன நடக்கிறது…? கண்ணினால் கோபமான உணர்வினை கண்ணிலிருக்கும் கருவிழி ருக்மணி தான் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவு செய்கின்றது.

கண்ணின் நினைவை எங்கே கொண்டு போகிறோம்….? அந்தத் தவறுக்குக் காரணமானவரையோ அல்லது தப்பு செய்பவரையோ மீண்டும் மீண்டும் எண்ணிப் பதிவு செய்கிறோம்.

பதிவு செய்து கொண்டபின் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் “இப்படிச் செய்கிறானே பாவி…!” என்று நினைத்தால் இந்த உணர்வு அந்த நேரம் அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் புரை ஓடுகிறது.

வேலை செய்து கொண்டிருந்தாலோ அல்லது ரோட்டில் சென்று கொண்டிருந்தாலோ சிந்தனைகளைக் குறைக்கச் செய்து எதிர்பாராத சம்பவங்கள் நடக்கக் காரணமாகின்றது.

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் தான் அங்கே வருகிறது. ஏனென்றால் தப்பு செய்த உணர்வின் அணுக்கள் இங்கே இருக்கும் போது இந்த வித்து இருந்து கொண்டே தான் இருக்கும்.

எத்தனை கோடி வித்தை எடுக்கிறீர்களோ இங்கே இருந்து கொண்டே தான் இருக்கும். இதைக் கொஞ்சம் கொஞ்சமாக நாம் மாற்ற வேண்டும்.
1.விவசாயத்தில் எப்படி வீரியமுள்ள மூல வித்துகளோடு
2.வீரியம் குறைந்த வித்துக்களைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து
3.அந்த வித்துக்களை நல்ல வித்துகளாக மாற்றுவது போல நாம் நல்ல வித்துக்களாக மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

மனித வாழ்க்கையில் நாம் பதிவாக்காமல் இருக்க முடியாது. பதிவானால் தான் அவன் தவறு செய்கிறான்… என்று எண்ணுகிறோம். பதிவானால் தான் வேதனை படுகிறோம்… என்று எண்ணுகிறோம். இங்கு பதிவாகவில்லை என்றால் நினைக்க முடியுமோ…? முடியாது.

ஆனால் அந்த உணர்வு இங்கே கவருகிறது. கவர்ந்து நுகரச் செய்கிறது. அந்த உணர்வுகள் உணர்ச்சியாக மாறும். உணர்ச்சிகள் எண்ணங்களாக வரும். உணர்ச்சிகொப்ப நம் அங்கங்கள் இயங்கும்.

அப்போது நம்மை எது இயக்குகிறது…?

ஒரு பாத்திரத்தை வைக்கிறோம். கீழே நெருப்பை வைக்கிறோம். பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் எந்தெந்தப் பொருள்களை எல்லாம் சேர்க்கிறோமோ வேகும் பொழுது அந்தச் சுவை தான் வரும். அந்த மணம் தான் வரும்.

நம் உயிருடைய வேலையும் அதைப் போன்றது தான். உயிர் ஒரு நெருப்பு. சுவாசிக்கும் பொழுது அதில் எந்த உணர்வுகள் படுகின்றதோ அந்த மணமாக… அந்த உணர்வாகத்தான் உடலை இயக்கும்.

இதை எல்லாம் தெரிந்து கொண்டவன் மெய் ஞானியான அகஸ்தியன். அவன் தன் வாழ்க்கையில் இருளை அகற்றினான். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றினான். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அவன் உணர்வை நாம் உயிர் வழியாகச் சுவாசித்தால் வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபடலாம். வேதனைகளையும் துன்பங்களையும் மாற்றி மகிழ்ச்சியாக வாழ முடியும்.

Leave a Reply