அன்றாட வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய “சில கடமைகள்…!”

spiritual-path

அன்றாட வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய “சில கடமைகள்…!”

நம்மைச் சாராதவர்கள் அல்லது நமக்குப் பிடிக்காதவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்றால் நாம் என்ன சொல்கிறோம்…?

அவர்கள் செய்ததற்கெல்லாம் அவர்களுக்கு நடக்கின்றது…! துன்பத்தை அவர்கள் அனுபவிக்கின்றார்கள் என்று அவர்கள் படுகின்ற கஷ்டத்தைப் பார்த்து நாம் ரசிக்கின்றோம்.

உதாரணமாகப் பாம்பு என்ன செய்கின்றது…? விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவை ரசித்து உணவாக உட்கொள்கின்றது.

ஆகவே பிறருடைய வேதனையை நாம் ரசித்தோம் என்றால் அந்த விஷத்தின் தன்மை நமக்குள் கூடி மனிதனினுடைய சிந்தனைகள் அழிந்து இறந்த பின் பாம்பின் உருவத்தைத்தான் நாம் பெற முடியும்.

மற்றவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து ரசிப்போம். இதே போல தன் குழந்தை மேல் பாசமாக இருக்கும் போது அவன் படும் வேதனையால் நாம் வேதனையின் உணர்வை அதிகமாக எடுக்கும் பொழுது கடைசியில் அதுவும் விஷத் தன்மை அதிகமாகி பாம்பின் ஈர்ப்புக்கே அழைத்துச் செல்லும்.

ஆகவே நாம் எந்தச் சூழ்நிலையிலும் பிறர்படும் கஷ்டங்களையும் துன்பங்களையும் கண்ணுற்றுப் பார்த்து அந்தத் தீமைகளை அறிந்தாலும்
1.அந்தத் தீமையினுடைய அணுக்கள் தனக்குள் விளையாதபடி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஒரு சில நொடிக்குள் அதை எண்ணி
3.மகரிஷிகளின் அருள் சக்தி உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி விட்டு
4.எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்
5.எங்கள் சொல் அனைவரையும் இனிமையாக்க வேண்டும்
6.அனைவரும் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்துக் கொண்டு
7.தீமைகளை நீங்கள் மாற்றி அமைத்துக் கொண்டு செல்லுங்கள்.

குழந்தை தவறு செய்கிறான்… அவனைச் சீர்படுத்த வேண்டும் என்றால்
1.எங்கள் குழந்தை மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்.
2.அவன் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.சிந்தித்துச் செயல்படும் உணர்வுகள் அவனிலே விளைய வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எடுத்துக் கொண்டு
4.அதன்பின் மகரிஷிகளின் அருள் சக்தியால் நீ ஞானியாக வருவாய் என்று சொல்லால் சொன்னால்
5.இந்த உணர்வுகள் அவன் திருந்த உதவும்.

அவ்வாறு இல்லையென்றால் அவன் மேல் வெறுப்பின் உணர்வுகள் வந்து “ஏன்டா இப்படிச் செய்கிறாய்…?” என்ற இந்த உணர்வின் தன்மை கேட்ப்படும் போது இது எதிர் நிலையை உருவாக்கும்.

இதுவே அவனுக்குள் வெறுப்பின் தன்மை ஊட்டும். அவனை வெறுக்கும் செயலைச் செய்ய வைக்கும். அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் நமக்குள் மீண்டும் வெறுப்பின் தன்மையே வளரும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அனுபவத்தைப் பெற்றவர்கள் அனைவருமே எந்த நிலையானாலும் இரவிலே படுக்கும் பொழுது “அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும்…” என்ற எண்ணத்துடனே உறங்குங்கள். இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

“குழந்தை கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான்…” என்று அந்தக் கஷ்டத்தை எல்லாம் நினைத்து இதைச் சொன்னீர்கள் என்றால் முதலில் இது வரும். இது கலந்தவுடன் மறுபடியும் கலக்கங்கள் தான் வரும்.

அதே மாதிரி ஒருவன் நமக்கு இடைஞ்சல் செய்தான் என்றால் அந்த இடைஞ்சல் செய்தவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் அவன் திருந்த வேண்டும் என்று நினைத்தீர்களென்றால் இந்த விஷத்தோடு கலந்து மறுபடியும் இடைஞ்சல் செய்தவன் உணர்வுதான் நினைவுக்கு வரும்.

ஆகையினாலே அதை மறக்க அந்த மகரிஷிகளை எண்ணி
1.நாங்கள் பார்க்கும் அனைவரும் எங்களைப் பார்க்கும் அனைவரும்
2.நாங்கள் நினைக்கும் அனைவரும் எங்களை நினைக்கும் அனைவரும்
3.அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும்
4.அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று தவம் இருங்கள்.

இதை நாம் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஏனென்றால் குருநாதர் எமக்கு (ஞானகுரு) எந்த முறைப்படி சக்திகளைக் கொடுத்தாரோ அதே முறைப்படித்தான் உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளின்பால் செலுத்தச் செய்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஆலயங்களுக்குச் சென்றாலும் அல்லது உறவினர் நண்பர்களுடைய குடும்பங்களுக்குச் சென்றாலும் அங்கே போய் அமர்ந்தவுடனே நாம் களைப்பால் “உஷ்ஷ்…ஷ்ஷ்.. அப்பா…! என்று பெரு மூச்சையும் சோர்வையும் வெளியிடுகின்றோம்.

அப்போது நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் அதை எடுத்து,
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ச்சியின் நிலைகள் இங்கே வளர வேண்டும்
3.இந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

நோயாளியைப் பார்க்கச் சென்றாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
2.அவர் உடல் நலம் பெற வேண்டும்
3.அவர்கள் குடும்பத்தில் மகிழ்ந்திடும் செயல்கள் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப்போல நாம் கடைப்பிடித்து நம் குருநாதர் காட்டிய அருள் வழிகளில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று எல்லோரும் மகிழ்ந்திடும் நிலை பெற நாம் தியானிப்போம்… தவம் இருப்போம்…!”

Leave a Reply