வெப்பம் தான் கடவுள்…! எப்படி…?

light-2

வெப்பம் தான் கடவுள்…! எப்படி…?

ஆதியில் ஓர் விஷம் கொண்ட ஆவி விஷமற்றதைத் தாக்கப்படும் போது அந்தத் தாக்குதல் தாங்காது வெப்பமாகி அணுக்களாகச் சிதறுண்டு பரவுகின்றது,

அவ்வாறு தாக்கி அணுக்களாகப் பரவிய நிலைகளை இந்த உண்மையைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன். அவன் கண்டதை எல்லாம் சாதாரண தன் இன மக்களும் கண்டு கொள்வதற்காக அதற்குக் காரணப் பெயர்களை வைத்தான்.

ஏனென்றால் விஷத்தின் தாகுதலால் ஆரம்பத்தில் ஏற்பட்ட வெப்பம் அது நகர்ந்து செல்லும் போது காந்தமாக அமைகின்றது. வெப்பம் காந்தம் விஷம் இவ்வாறு ஆதியிலே இந்த மூன்றும் ஒன்றாக அது உருபெறும் சந்தர்ப்பத்தைத் தான் “உலகின் இயக்கச் சக்தியாக மாறுகின்றது…!”

1.வெப்பம் உருவாக்கும் சக்தி
2.காந்தம் எப்பொருளையும் தன்னுடன் (கவர்ந்து அல்லது இழுத்து) இணைத்து அணைத்துக் கொள்ளும் சக்தி.
3.அதனுடன் சேர்ந்த விஷமோ இயக்கும் சக்தி

அதாவது எப்பொருள் அதனுடன் கலந்ததோ அப்பொருளின் மணத்தையும் குணத்தையும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி அது இயக்கச் சக்தியாகச் செயல்படுத்துகின்றது என்பதனைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தான் காரணப் பெயரை வைத்தார்கள் அன்று ஞானிகள்.

உதாரணமாக
1.நாம் சமையல் செய்ய வேண்டும் என்றாலும் வெப்பத்தை வைத்துத் தான் பல பொருள்களைச் சமைக்கின்றோம்.
2.மனித உடலில் அந்த வெப்பம் இருந்தால் தான் அணுக்கள் இயக்குகின்றது.
3.ஒரு மரத்திற்கு வெப்பம் இருந்தால் தான் அதுவும் வளர்கின்றது.

அதைப் போல இன்று கடலுக்குள் நீரிலே வாழும் உயிரினங்கள் இருப்பினும் பூமியின் வெப்ப அலைகளால் ஏற்படும் காந்த அலைகள் நீருக்குள் பரவும் போது தான்
1.அந்த மீன்களிலுள்ள உயிரின் நிலைகளுக்குள் வெப்பங்கள் ஊடுருவி
2.அதைத் தனக்குள் கவரும் ஓட்டத்தில் எலக்ட்ரானிக்காக மாற்றி
3.அந்த வெப்பங்களை வைத்து அதுவும் வாழ்கின்றது வளர்கின்றது.

இதைப்போல நம் உயிருக்குள் வெப்பமும் கதிரியக்கச் சக்தியும் இரண்டும் ஒன்றோடொன்று சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றது. அதனால் தான் துடிப்பு ஏற்படுகின்றது.

இது அதைக் கொல்ல ஆரம்பிக்கிறது. அது இதைக் கொல்ல வேண்டுமென்று நினைக்கிறது. இந்தப் போர் முறையினால்தான் துடிப்பாகி அங்கே வெப்பம் ஏற்படுகிறது.

அந்தத் துடிப்புக்குள் ஏற்படக்கூடிய வெப்பத்தினால் ஈர்க்கும் சக்தியான காந்தமாகி மற்ற ஏதாவது ஒரு மணம் (சத்து) இருந்ததென்றால் இழுக்கின்றது.

அந்த வெப்பத்திற்குள் அது பட்டவுடனே அது இயங்குகிறது… உற்பத்தி செய்கின்றது, ஈர்த்த அந்த மணங்கள் வெப்பத்துடன் இணைந்தவுடனே அந்தப் பொருளாக (உடலாக) மாறுகின்றது. சுவாசிக்கும் போது அது என்ன மணமோ அதை எடுத்துக் கொள்கின்றது.

உதாரணமாக ஒரு பையன் அடிபட்டு அதனால் வேதனைப்படுகின்றான். நான் அதைப் பார்க்கின்றேன். அப்பொழுது அதைச் சுவாசித்து என் உயிரில் பட்டவுடனே அவன் உடலில் விளைய வைத்தது என்னுடன் கலந்து உடலில் வந்து ஜீவன் பெறுகின்றது

அ.எனக்கும் உடலில் வேதனை வருகின்ற மாதிரி
2.அதே உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

அடிபட்ட அவன் உடலில் வேதனை வரும் பொழுது, “ஆ..” என்று அலறி அவனிடமிருந்து மூச்சு வெளி வருகின்றது. அப்பொழுது அந்தக் காந்த அலைகள் அதை எடுத்துக் கொண்டதை நான் பார்த்தவுடனே எனக்குள்ளும் அந்த வேதனையாகி அவனைக் காப்பாற்றச் சொல்லுகின்றது.

அப்பொழுது அந்தப் பாச உணர்வுடன் காப்பாற்றுகின்ற எண்ணம் வரும் பொழுது இந்தக் குணம் எனக்குள் பட்டவுடனே பிரணவம், “ஓ..ம்”. எனக்குள் காப்பாற்றுகின்ற சக்தி ஏற்படுகின்றது. அப்பொழுது “ஓ…ம்”.

அதாவது நாம் ஒரு சரக்கைப் போட்டு வேக வைக்கும் பொழுது, அதில் இருக்கின்ற சத்தை என்ன செய்கின்றது…? உறிஞ்சித் தண்ணீருடன் கலந்து விடுகின்றது. நாம் வேக வைத்தால் என்ன செய்கின்றது..? ஒரு பொருளைப் போட்டவுடனே அது கரைந்து மற்றதுடன் கலக்கின்றது.

நாம் குழம்பு வைப்பது போல உயிரான வெப்பத்தில் மோதியவுடனே அவன் வேதனைப்பட்ட அந்த வேதனையான சத்து என்னிடம் உமிழ்நீராக மாறி என் உடலில் சேர்ந்து விடுகின்றது, “இது ஓ…ம்”

என் கண்ணுக்குப் புலப்படாத இந்தச் சக்தி என் உயிரிலே பட்டவுடனே ஜீவனாகி அது என் உடலுடன் சேர்த்து இணையும் பொழுது ஓ…ம் நமச்சிவாய…! நமதாக எனதாக மாறுகின்றது.

இப்படித்தான் நம் உயிர் இயங்கிக் கொண்டுள்ளது. நாம் சுவாசிப்பது அனைத்தையுமே பிரணவமாக்கி நமக்குள் ஜீவன் பெறச் செய்து நம் உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். மெய் ஞானிகள் அவர்கள் தன்னைத்தான் எப்படி அறிந்தார்களோ உயிருடன் ஒன்றி விண்ணின் ஆற்றலைப் பெற்று நஞ்சை வென்று ஒளியாக ஆனார்களோ அதைப் போல நாமும் ஆக முடியும்.

Leave a Reply