மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “தன்னைப் பற்றிச் சொன்னது…!”

Maharishikaludan Pesungal1

இன்றல்ல அன்றல்ல… இந்த உலகம் உதித்த நாள் முதற்கொண்டே உங்களுக்கும் எனக்கும் (நான் சந்தித்த எல்லோருக்கும்) தொடர்பு உண்டு. பல பிறவியிலும் உங்களுடன் நான் இருந்தேன்…. வழி வழியாகத் தொடர்பு உள்ளவர்கள் தான் நாம் எல்லோருமே…!

மனித உடலின் உருவம் பெற்றவுடனே இராமாவதாரத்திலேயே பெரும் தொடர்பு உடையவர்கள் நாம். இராமாவதாரத்தில் வான்மீகி முனிவனாகிவிட்டேன். வான்மீகியாக இருந்த அக்காலத்திலேயே நான் எய்திய தியான நிலையினால் நான் வான்மீகியில் விட்ட குறையினால் அடுத்த அவதாரம் எய்தினேன், கிருஷ்ணாவதாரத்திலும் என் ஆசை பூர்த்தி அடையவில்லை.

அரசனாகவும் அவதரித்தேன். ஆண்டியாகவும் அவதரித்தேன். இம்மக்களுக்கு உணர்த்திடப் பல கதைகள் வழியிலும் செப்பிவிட்டேன். பல பல அவதாரங்களையும் எடுத்திட்டேன்.

எந்த நிலையிலும் எந்த உடலுக்கும் சென்றிடும் பல பாக்கியம் பெற்றேன். பல உடல்களை எடுத்து அந்த உடல்களின் வழியில் பல உண்மை நிலைகளையும் உணர்த்தினேன். இந்த உலகம் முழுவதும் பல உடல்களை.. பல உருவங்களைப் பெற்றிட்டேன்.

1.பார்த்தேன்… பார்த்தேன்…! இந்த உலக மக்களின் உள்ளத்தையும் சுவாசத்தையும் பார்த்தேன்…!
2.பல பாவகள் செய்தவனையும் பார்த்தேன்.
3.பல பஜனைகள் செய்தவனையும் பார்த்தேன்.
4.பரந்தாமனைப் பழித்தவனையும் பார்த்தேன்.
5.உள்ள (மனது) நிலையில் பஜனை செய்தவனும் பரந்தாமனைப் பழித்தவனும் ஒரே சுவாச நிலையில் தான் இருக்கின்றார்களப்பா…!

இம்மனிதர்களை மாற்றத்தான் இக்காலம் தோன்றிய நாள் முதலே இக்கலியில் இங்கு வந்துள்ளேன் பாடம் புகட்ட…! கடைசியில் பைத்தியமாகவும் (ஈஸ்வரபட்டர்) இருந்தேன். பார்த்து எடுத்தேன் ஒரு சிஷ்யனை…! (வேணுகோபால சுவாமிகள் – ஞானகுரு).

அவன் வழியில் உணர்த்துகின்றேன் பல நிலைகளை…! இந்த உலகில் உள்ள பல பாகங்களிலும் ஒவ்வொரு வழியிலும் என் வழியை உணர்த்துகின்றேனப்பா. இப்பொழுது நான் யார் என்று புரிகிறதா…?

நம்பிக்கை வைத்தவனுக்கு நடுக்கடலுமில்லை…! 

நம்பிக்கையிலிருந்து பெறுவது தான் ஜெப அருள்…! எப்படி…?

உன் எண்ணத்தில் உன் செயலில் ஒன்றை நினைத்து ஆண்டவனை எண்ணுகிறாய்.

ஞானிகள் கொடுத்த உருவ அமைப்பில் முருகன் விநாயகர் சரஸ்வதி இலட்சுமி வெங்கடாஜலபதி பராசக்தி என்று இப்படிப் பல நாமங்கள் உடைய ஆண்டவனை எண்ணும் பொழுது நம்பிக்கையின் மூலமாக ஜெப அருளைப் பெற்ற ஞானிகளூம் மகரிஷிகளும் நீ வணங்கும் நிலையில் உன் எண்ணத்தை அறிகின்றார்கள்.

அந்த நிலையில் அவர்கள்
1.உன் சொல்லுக்கு அவர்களாகவே பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திப்
2.பல நிலைகளை உண்டு பண்ணி
3.உன் எண்ணத்திற்கு உன் செயலுக்கு வெற்றியை அளிக்கின்றார்கள்.

சூட்சம உலகில் இருந்து கொண்டே நடக்கும் செயல்கள் தான் இவை எல்லாம். அந்த நிலையில் அவர்களின் பரிபூரண அருளை நீ பெறுகின்றாய்.

ஒரு செயலைச் செய்யும் பொழுதும் வெளியில் எங்காவது செல்லும் பொழுதும் “ஈஸ்வரா…!: என்று உன் உயிரை நினைத்து வணங்கிச் செல். தடைகளையும் வரும் வினையையும் அவர் பார்த்து உனக்கு நல்வழி புகட்டிடுவார்.

நம்பிக்கையுடன் செல்லும் எந்த நிலையும் தோல்வி அடைவதில்லை…!

ஞானிகளாகவோ மகரிஷிகளாகவோ ஆவது எதற்காக…? என்று எண்ணுகிறார்கள் புரியாத பாமரர்கள். எண்ணத்திற்கு செயலுக்கும் இந்த உலக வாழ்க்கையில் இருந்து கொண்டு இவர்களை நல் வழி நடத்திடத்தான்
1.அந்த மகரிஷிகள் பல ஜெப வழிகளைப் பெற்று சூட்சம உலகில் இருந்து கொண்டே
2.நம்பிக்கை வைத்தவனுக்கு நடுக் கடலுமில்லை…! என்னும் வெற்றியை அளிக்கின்றார்கள்.

நடுக்கடல் எனும் பொழுது நடுக்கடலிலிருந்து மீள்வதற்கும் அவர்கள் அவர்களை எண்ணும் பொழுது மீட்கிறார்கள் ஆண்டவனின் ரூபத்தில்…! நம்பிக்கையின் எண்ணம் புரிந்ததா…?

ஆகவே இனிமேல் நீ ஒரு இடத்திற்குச் செல்லும் பொழுது எந்தக் காரணத்தைக் கொண்டும் மனக் கலக்கப்படாமல் பூஜை அறையில் வந்து நீயே நில்.
1.அந்த நிலையில் நீ என்னிடம் வணங்கி வேண்டும் பொழுது
2.நம்பி வேண்டும் பொழுது உன்னுடன் நான் (ஈஸ்வரபட்டர்) வருவேன்…!

எங்கே வெளியில் செல்வதாக இருந்தாலும் எந்தக் காரியமாக இருந்தாலும் சரி புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி ஒரு நிமிடம் ஏங்கி என்னை அழைத்தால் உன்னுடனே நான் வருவேன்.

உன்னுள் இருக்கும் என்னை நீ பார்..!
உன்னையே நீ பார்…!

எந்தக் காரியம் துவங்குவதாக இருந்தாலும் அல்லது எந்தச் சிக்கலாக இருந்தாலும் எத்தகைய கடுமையான நிலையைச் சந்தித்தாலும் அடுத்த கணம் புருவ மத்தியில் ஈசனை எண்ணும் பழக்கம் வந்துவிட்டால் எல்லாமே நல்லதாகத்தான் முடியும்.

ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நம் எண்ணத்தை… நம் மனதை… புருவ மத்தியில் இருக்கும் ஈசனிடம் திருப்பும் பழக்கம் வந்து விட்டால் நம் வாழ்க்கை என்றுமே சீராக இருக்கும்.

Leave a Reply