சிறிதளவு மரியாதை குறைந்தாலும்… பழி தீர்க்கும் உணர்வுகளாக இன்று ஒவ்வொருவரையும் இயக்குவதற்குக் காரணம் என்ன…?

divine-chracter-of-sages

சிறிதளவு மரியாதை குறைந்தாலும் பழி தீர்க்கும் உணர்வுகளாக இன்று ஒவ்வொருவரையும் இயக்குவதற்குக் காரணம் என்ன…?

அரசர்கள் மக்களுக்கு நல்லது செய்தாலும் தனக்கு மரியாதை வேண்டும் என்று எண்ணும் போது அதிலே சிறிதளவு மரியாதை குறைந்தாலும் பழி தீர்க்கும் உணர்வுடன் அழிக்கும் எண்ணம் கொண்டு அவர்களை அழித்து விடுகின்றார்கள் அரசர்கள். இது அரசனுடைய நியதிகள்.

அரசர்கள் அவர்கள் எதைச் செய்தாலும் மற்றவர்கள் அவர்களை ஒத்துச் செல்ல வேண்டும். மற்றவர்கள் அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் மற்றவர்கள் ஓங்கி வளர்ந்து விட்டால் தன்னை அழித்து விடுவார்கள் என்று இந்தப் பய உணர்வு கொண்டு தான் ஒவ்வொரு அரசரும் செயல்பட்டார்கள்.

இன்று அத்தகைய அரசாட்சி இல்லை என்றாலும் அன்றைய அரசர்கள் தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட அதே நிலைகள் தான் கௌரவப் பிரச்னையாக நம்முடைய மனித வாழ்கையினுடைய நிலைகளிலும் வந்துவிட்டது.

தன் சொல் மற்றவர்களுக்குக் கீழ் அடிபணிந்துவிடக் கூடாது என்ற இந்த உணர்வின் அடிப்படையில் ஒவ்வொருவரும் இயங்கப்படும் போது
1.எதைக் காக்க வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ
2.அதைக் காக்க முடியாமல் அதையே அழிக்கும் நிலைகளுக்கு வந்துவிட்டோம்.

எந்த அரசனும் அவன் இட்ட நிலைகளில் இருந்து நீடித்த நாள் வாழ்ந்ததில்லை. வாழ்ந்து விடுவோம் என்று எண்ணிய உணர்வுகள் கொண்டு அதே விஷத்தின் துடிப்பு கொண்டு கடைசியில் தன்னையே அழித்துக் கொண்டான்.
1.அவன் சென்ற வழிகளில் மக்களை அழித்து விட்டான்
2.அழிக்கும் எண்ணத்தை மக்கள் மத்தியிலும் ஊட்டி விட்டான்.

ஆக மொத்தம் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தாலும் “தான்…!” என்ற நிலைகள் வரும் போது தன்னையும் அழித்து தன்னைச் சார்ந்தோரையும் அழித்து மனித வர்க்கத்தையே இழிவான நிலைகளுக்கு இட்டுச் சென்று விட்டார்கள் அன்றைய அரசரகள்.

ஆனால் மனிதனாகத் தோன்றிய நிலையில் மகரிஷிகள் ஒவ்வொருவரும் தான் மெய்யை உணர வேண்டும் என்ற நிலையில் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்று பெரு வீடான பெரு நிலைகள் பெற்றுச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உணர்வலைகள் இன்று விண்ணிலேயும் நம் பூமிக்குள்ளும் படர்ந்து கொண்டுள்ளது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி அந்த மாமகரிஷிகள் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க சக்திகளை யாம் (ஞானகுரு) சுவாசித்து அந்த உணர்வின் ஆற்றல்களை உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று வாழ்க்கையில் உங்களை அறியாது வரக்கூடிய துன்பங்களிலிருந்து நீங்கள் எல்லோரும் மீள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
1.எனக்குள் இந்த ஆசை தோற்றுவித்ததற்குக் காரணமே அந்த மகரிஷிகளின் உணர்வுகள் தான்.
2.அந்த மகரிஷிகளின் உணர்வின் அலைகள் தான் இங்கே பேசுகின்றது. நான் பேசவில்லை…!

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருப்பதால் தான் அதை நான் பெறுகின்றேன்.

அதைப் போன்று நீங்கள் எதைப் பெற வேண்டும் என்று எந்த ஆசையுடன் வருகிறீர்களோ அந்த ஆசை உங்களுக்குள் இந்த நிலைகளுடன் அதற்கு வழி வகுத்து உங்களை அறியாது வந்த தீமைகளை நீக்கி ஒளியின் சரீரம் பெறுவோம் என்று உறுதி கொள்ளுங்கள்.

அன்று போகமாமகரிஷி எப்படிப் பிரபஞ்சத்தின் நிலையைத் தனக்குள் அடக்கி புவனேஸ்வரி என்ற சக்தியைத் தனக்குள் உணர்த்தினாரோ அதே போல இந்த புவனத்துக்குள் இருக்கக்கூடிய சக்தியும் உங்களுக்குள் ஐக்கியமாகி உங்கள் மூச்சும் பேச்சும் பிறரை மகிழச் செய்யும் உணர்வாகத் தோன்ற வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்திகள் உங்கள் உடலுக்குள் விளைந்து உங்கள் உயிரில் ஒன்றும் உணர்வின் தன்மையை நீங்கள் ஒளியாக மாற்றி
1.உலகத்துக்கு வழி காட்டும் உணர்வின் ஒளி அலைகளாக…
2.”அது பரவ வேண்டும்…!” என்று பிரார்த்திக்கின்றேன்.

Leave a Reply