நாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள் (சுவாசம்) “நமக்குத் தெரியாமல் புகும் தீமைகளையும்… அதனின் விளைவுகளையும்… பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்…!”

divine frequency

நாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள் (சுவாசம்) “நமக்குத் தெரியாமல் புகும் தீமைகளையும்… அதனின் விளைவுகளையும்… பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்…!”

 

நம் உயிர் நெருப்பு. அதில் நாம் என்னென்ன உணர்வுகள் படுகின்றதோ (பொருளைப் போடுகின்றமோ) அதை எல்லாம் வேக வைக்கின்றது. அதை எல்லாம் எண்ணம் சொல் செயலாக இயக்கி நம் உடலாக மாற்றுகின்றது.

நாம் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பொருள்களைப் போட்டு நெருப்பை வைத்து வேக வைத்தால் என்ன செய்கின்றது…? நாம் போட்ட பொருள்களின் ருசியெல்லாம் வரும்.

ஆனால் கை தவறிப் போய் அதிலே உப்பு அதிகமாக விழுந்து விட்டால் என்ன நடக்கும்…?
1.முதலில் சரியாகத் தான் நாம் உப்புப் போட்டிருக்கின்றேன்.
2.இரண்டாவது தவறிப் போய்த் தான் விழுந்தது.
3.அதனால் ஒன்றும் செய்யாது…! என்று சொன்னால் உப்பு கரிக்காமல் இருக்குமோ…?
4.அது உப்பு கரிக்கத்தான் செய்யும்…!

அந்த மாதிரித்தான் நாம் என்ன செய்கின்றோம்…? பிறருடைய துன்பங்களைக் கேட்டு அறிந்து விடுகின்றோம். அவர்களுக்கு உதவிகளும் செய்து விடுகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் அவர்கள் பட்ட துன்ப உணர்வுகளை நாம் கேட்டறியும் பொழுது அது நம் உடலில் விளைந்து விடுகின்றது.
1.அவர்கள் கஷ்டப்படுவதை எண்ணுகின்றோம்.
2.காது கொடுத்துக் கேட்கின்றோம்.
3.கண் அவர்களைப் பார்க்கின்றது. அவர்கள் சொல்லை என்ன செய்கின்றது…?
4.இழுக்கின்றது… எண்ணிச் சுவாசிக்க வைக்கின்றது.

நம் உயிரிலே பட்டவுடனே அவர்கள் சொல்கின்ற கஷ்டத்தை எல்லாம் இரக்கமாகக் கேட்டு அவர்களுடன் சேர்ந்து நாமும் அதை எடுத்துக் கொள்கிறோம். அப்போது நம் உடலும் சோர்வடைந்து விடுகின்றது.

நாம் வயலில் உழுகும் போது நெல்லிற்கு ஒரு மாதிரியாக உழுகிறோம். பருப்புக்கு வேறு வகையாக உழுகின்றோம். சோளத்திற்குப் போடும் பொழுது அதனுடைய பதங்கள் வேறாகச் செய்கின்றோம். ராகி விதைக்கும் போது ஒரு மாதிரியாகப் போடுகின்றோம். கம்பு விதைக்கும் போது ஒரு விதமாகப் போடுகின்றோம்.

அந்த மாதிரித்தான் மற்றவர்கள் கவலையாகச் சொல்லும் போது அது உடலுக்குள் வித்தாகப்போகும் போது நீங்களும் சோர்வாகின்றீர்கள். அந்த விதை முளைத்து விடுகின்றது. அப்புறம் என்ன செய்கின்றது…? ஆழமாகக் கவனித்தீர்கள் அல்லவா…! நீங்கள் சும்மா இருந்தாலும் கூட அப்புறம் உங்களுக்குத் தெரியாமலேயே என்ன செய்யும்…?

வயலில் ஒரு விதையை விதைத்தோம் என்றால் காற்றிலிருந்து தன் இனமான சக்தியை இழுத்துக் கொள்கின்றது. இழுத்து அது விளைகின்றது.

அது போன்று தான் உங்கள் எண்ணத்தில் அவர்கள் சொன்ன கஷ்டத்தை எடுத்துக் கொண்ட பின் விதையாக விளைந்து விடுகின்றது. அப்புறம் அடிக்கடி இந்தக் கஷ்டமான எண்ணம் வரும்.

உங்கள் உடலில் அந்த வாசனை தான் வரும். வேறு யாரிடம் பேசினாலும் இந்த உணர்வு கலந்து போய் அவர்கள் காதிலும் கேட்கின்றது. அவர்களையும் சோர்வடையச் செய்யும்.

சோர்வடைந்த பின் நமக்கு எப்படிப் பதில் சொல்வார்கள்…?

உதாரணமாக உங்கள் வியாபாரத்திற்காக வேண்டிக் கடன் வேண்டும் என்று கேட்டிருப்பீர்கள். வாங்கி நல்ல முறையில் வியாபாரம் செய்யலாம் என்று நினைப்பீர்கள்.

அல்லது வியாபாரத்தில் ஒருவருக்கு நீங்கள் கடனாகக் கொடுத்திருப்பீர்கள். கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கலாம் என்று கேட்கப் போவீர்கள்.

அப்பொழுது நம்மிடம் கஷ்டம் என்று சொன்னவர்கள் உணர்வு இது முன்னாடி வந்துவிடுகின்றது. நீங்கள் கடன் கேட்கப் போகும் போது அல்லது வாங்கப் போகும் பொழுது இந்தக் கஷ்டமான உணர்வு தான் வரும்.

இந்தக் கஷ்டமான உணர்வுடன் நீங்கள் கேட்கப் போனீர்கள் என்றால் உங்களுக்கு எதிர்ப்பாகப் பேசுவார்கள்.
1.ஆனால் அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.
2.உங்கள் மனது அவரை அந்த மாதிரிச் சொல்ல வைக்கின்றது.

அதே மாதிரி திருமணத்திற்காக வேண்டி வந்து நான்கு தரம் பெண்ணைப் பார்த்து விட்டுப் போகிறார்கள். ஏனென்றால் அந்த நான்கு பேருமே ஜாதகத்தில் பொருத்தம் இல்லை என்று போய் விடுகிறார்கள். அதை மனதில் எடுத்துப் பதிய வைத்துக் கொள்கின்றோம்.

இப்படி நான்கு பேர் வந்து விட்டுப் போனவுடன் நாம் என்ன சொல்கிறோம்…? இந்தப் பிள்ளை நேரம் பார்…! பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று சொலிக் கொண்டு வந்து விட்டு… வந்துவிட்டுப் போகிறார்களே…! என்று இதைப் பதிவு செய்து கொள்கின்றீர்கள்.

அதற்கப்புறம் புதிதாக நல்ல நிலைகளில் யாராவது பெண்னைக் கேட்க வந்தால் என்ன நினைக்கின்றீர்கள்…? இவர்கள் வந்து என்ன சொல்லப் போகிறார்களோ…! இவர்களும் சும்மா வந்து விட்டுப் போய்விடுவார்களோ என்று எடுத்து வைத்துக் கொள்வீர்கள்.

கரெக்டா (சரியாக) அது முன்னாடி நிற்கும்.

அவர்கள் வருவார்கள். வந்து எல்லாம் பேசிக் கொண்டே இருப்பார்கள். பெண்ணைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருக்கும் போது நாம் பதில் சொன்னால் நம்மைக் கூர்ந்து கவனிப்பார்கள்.

முதலில் நாம் எதை நினைத்தோமோ அதைச் சுவாசித்தவுடனே
1.அவர்களும் பெண்ணைப் பார்ப்பார்கள்…
2.சரி… நாங்கள் பிறகு சொல்கிறோம் என்று சொல்லி விட்டு
3.அடுத்து வரமாட்டார்கள்…! இது யார் செய்வது…?

நம் உடலிலிருந்து வந்த உணர்வின் மணம் தான் அவ்வாறு இயக்குகின்றது. ஆகவே
1.எதையெல்லாம் நாம் பதிவு செய்கின்றமோ
2.அதையெல்லாம் நம் உயிர் இயக்கிக்கொண்டு தான் இருக்கின்றது.
3.அதையெல்லாம் உடலாக ஆக்கிக்கொண்டு தான் இருக்கிறது
4.அதனதன் மணத்தைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.

சந்தர்ப்பத்தால் வரும் இதைப் போன்ற தீமைகளை நீக்குவதற்கு ஞானிகள் எத்தனையோ வழிகளைச் சொல்லியுள்ளார்கள்…! அந்த ஞானிகள் காட்டிய மெய் வழிகளைத்தான் உங்களுக்கு இங்கே உபதேசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

Leave a Reply