நம்முடைய குலதெய்வங்களின் உயிராத்மாக்களை “விண்ணின் திருக்கடலான… ஒளிக் கடலிலே.. இணைக்கச் செய்ய வேண்டும்…!”

motcha-deepams

நம்முடைய குலதெய்வங்களின் உயிராத்மாக்களை “விண்ணின் திருக்கடலான… ஒளிக் கடலிலே.. இணைக்கச் செய்ய வேண்டும்…!”

நம்முடைய குலதெய்வங்களைப் பக்தி கொண்டு பூஜித்தாலும் அந்த உயிராத்மாக்கள் நமக்குள் ஈர்க்கப்பட்டு நம் உடலுக்குள் செலுத்தப்பட்டு அவர்களை “அருளாடச் செய்து விடுகின்றோம்….!”

அதைப் போன்று இல்லாதபடி
1.குலதெய்வங்களாக இருக்கும் குடும்பப் பற்று கொண்ட அந்த உயிராத்மாக்களை
2.நாம் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்து
3.அங்கே அழியாத ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

குலதெய்வங்கள் அனைவரும் அங்கே அந்த ஒளிக் கடலில் இணைந்து விட்டால் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நாம் ஏங்கும் பொழுது அந்த அருளாற்றல் நமக்கு எளிதில் கிடைக்கும்.

மனித வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் போக்கும் சக்தியைப் பெறுவதற்கு நாம் விண் செலுத்திய மூதாதையர்களின் உயிராத்மாக்கள் பெரும் உதவியாக இருப்பார்கள்.

குலதெய்வங்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அதனின் துனை கொண்டு அவரவர் குடும்பத்தைச் சார்ந்த உயிராத்மாக்களை எளிதில் விண் செலுத்தலாம்.

ஆகவே ஏக காலத்தில் எண்ணி… ஒளி அலைகளாக ஒளி வெள்ளங்களாக நாம் அனைவரும் திரண்டு…! உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

சப்தரிஷி மண்டலங்களின் சக்தியை நாம் தியானித்து அந்த ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு
1.அந்த எடையற்ற உயிராத்மாக்களை
2.விண்ணின் திருக்கடலான அந்த ஒளிக் கடலிலே கலக்கச் செய்ய வேண்டும்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்மிக்க சக்தி அவர்களுக்கு உணவாகி அந்த உணர்வின் ஆற்றல் பெருக அவர்கள் ஒளிச் சரீரம் பெற ஏதுவாகும்.

குலதெய்வங்களை விண்ணிலே செலுத்திய பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றாலும் அந்த உணர்வின் அலைத் தொடரிலேயே நம் எண்ணங்கள் இருந்து அந்த நிலைகளை நாமும் பெற முடியும். இது தான் விஜய தசமி.

அதாவது உயிர் என்று விண்ணிலே ஒளியாகத் தோன்றியதோ பூமிக்குள் விஜயம் செய்த பின் அந்த உணர்வாலே பல உடல்கள் பெற்று இன்று மனிதனாக வளர்ந்துள்ளோம்.

மனிதனான பின் நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி சிருஷ்டிக்கும் தன்மையாக அழியா ஒளிச் சரீரம் பெறுவதற்கே இந்தத் தவமும் தியானமும்.

மனிதனாக வாழும் நிலையில் இந்த வாழ்க்கைக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்று இதைத்தான் “தியானம்” என்று சொல்கிறோம்.

ஒவ்வொரு நிமிடமும் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து என்றும் பதினாறு என்ற நிலை அடைதல் வேண்டும்

இந்த உடலில் இருக்கும் பொழுது நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றோமோ இந்த மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்து நின்று விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தின் ஆற்றல்கள் அனைத்தையும் புசித்து மகிழ்ச்சி கொள்ளும் நிலையாக நாம் பெறுதல் வேண்டும்.

கருணைக் கிழங்கில் உள்ள விஷத்தை நீக்கி அதனுடன் உப்பு புளி காரம் என்று பல பொருள்களைச் சேர்த்து நாம் இரசித்துச் சாப்பிடுகின்றோம் அல்லவா…!

இதைப் போல உணர்வின் ஒளிச் சரீரமாக ஆன பின் விண்ணிலே தோன்றும் எத்தகைய விஷத் தன்மையான உணர்வாக இருந்தாலும் அதை உணவாக எடுத்து நமக்குகந்த சக்தியாக்கி உணர்வின் ஒளிச் சரீரமாகப் பெறும் தகுதியை நம்மால் பெற முடியும்.
1.மனிதனின் கடைசி நிலை இது தான்.
2.அழியா நிலை இது தான்.
3.அழியாச் சரீரமாக என்றுமே ஒளியாக வாழும் நிலையை இந்த மனித உடலிலிருந்து தான் பெறவேண்டும்.

Leave a Reply