தவறு செய்வது நாமா…? அல்லது நாம் நுகர்ந்த உணர்வா…? என்பதை நம்முடைய காவியங்கள் தெளிவாக்குகின்றன
இராமாயணத்தை நாம் எப்படிப் படித்திருக்கின்றோம்…?
இராமன் சாந்தமானவன்… நல்லவன். சின்னம்மா கைகேயி சூழ்ச்சி செய்து தன் மகனுக்குப் பட்டம் கட்ட வேண்டும் என்றும் இராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தசரதனிடம் அவர் கொடுத்த வரப்படி கேட்கிறது.
தந்தையின் வார்த்தையைத் தட்டாத இராமனும் சீதாவும் காட்டுக்குள் சென்றார்கள். காட்டுக்குள் கல்லிலும் முள்ளிலும் அலைந்து மிகவும் சிரமப்பட்டார்கள்.
பின் சீதாவை இராவணன் தூக்கிச் சென்றுவிட்டான். அதனால் இராமன் வேதனைப்பட்டான். சீதா கடுமையான அவஸ்தைகள் பட்டது என்று படித்துவிட்டு
1.அட இராமா.. சீதா…! உங்களுக்கு இந்தக் கதியா…? என்று சொல்லி வேதனைப்பட்டு நாம் அழுவதற்குத்தான் பழகியிருக்கின்றோமே தவிர
2.அந்த இராமன் யார் என்று சொல்ல முடிகின்றதோ..?
3.வான்மீகி மாமகரிஷி உணர்த்திய உண்மைப் பொருளை அறியவில்லை…
4.அறிய வேண்டும் என்று முயற்சிக்கவும் இல்லை.
உதாரணமாக “தடா…புடா தடா…புடா…!” என்று ரோட்டில் சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன சப்தம் என்று வேடிக்கை பார்க்கப் போகின்றீர்கள்.
மிகவும் கோபமாகவும் ஆத்திரமாகவும் பேசுகின்றார்கள். பார்த்தவுடன்.. என்ன….? ரோட்டிலே.. இப்படிச் சண்டை போடுகிறார்கள் பார்…! என்று வேடிக்கையாக நீங்கள் சொல்கின்றீர்கள்.
நினைக்கின்றீர்கள்…! சொல்லக் கூட இல்லை. ரோட்டிலே இப்படிச் சண்டை போடுகிறார்கள் என்று நினைக்கும் பொழுது கொஞ்ச நேரம் அந்தக் கோபம் அங்கேயே நின்று வேடிக்கை பார்க்கச் சொல்லும்.
அடுத்து நேராக வீட்டிற்கு வந்து சமையல் வேலையைப் பார்த்தீர்கள் என்றால் என்ன நடக்கும்…? குழம்பை வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் போதும்.
1.அந்தக் கார உணர்ச்சி இயக்கி
2.இரண்டு மிளகாய் அதிகமாகப் போட்டுவிடுவீர்கள்.
3.ஆனால் நீங்கள் தவறு செய்யவில்லை.
4.அந்த உணர்வு இயக்கிக் காரத்தை அதிகமாகப் போட வைக்கும்.
5.அப்புறம் நீங்களே எடுத்து ருசி பார்க்கும் பொழுது காரமாகத் தெரிகிறது.
உங்கள் பையன் வந்து சாப்பிட்டு “உஷ்ஷ்…!” காரமாக இருக்கின்றது என்று சொல்வான். நீ எப்பொழுது பார்த்தாலும் காரமாகத்தான் இருக்கிறது என்று சொல்வாய். ஒழுங்காகச் சாப்பிடு என்று அவனை மிரட்டுவீர்கள்.
ஆனால் வீட்டுக்காரர் வந்து சாப்பிடும் பொழுது என்ன… குழம்பு காரமாக இருக்கிறது…? என்று கேட்பார்.
நீங்கள் எங்கேயாவது ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு இங்கே வந்து அதே மாதிரி நான் ருசியாகச் சமைக்க வேண்டும் என்றால் அது எப்படி…? என்று சொல்வீர்கள். சண்டை வந்துவிடும்.
1.நாம் செய்த தவறை அதை மறைக்கத்தான் சொல்லும்.
2.நேரடியாக இதைச் சொல்லவிடாது.
ஏன்…! என்ன காரணம்..!
அதனால் தான் ஆஞ்சநேயரை வலுவானவராகக் காண்பித்து இராமனுக்கும் சீதாவுக்கும்… “அவர் தான் காவல்..” என்று தெளிவாகக் காட்டியிருப்பார்கள்.
ஒரு வேப்ப மரம் என்ன செய்கின்றது…? கசப்பான சத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டுள்ளது. தன் கசப்பின் வலுவால் வேறு எந்த மணத்தையும் தன் அருகிலே விடுவதில்லை.
அதே கசப்பான குணத்தை (மனக்கசப்பு) நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் பாக்கி நல்லதை யாராவது உங்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா…? இல்லை.
நாம் வெறுப்பாக இருக்கும் பொழுது யார் எந்த நல்லதைச் சொன்னாலும் நம்மால் கேட்க முடியாது. அந்த வெறுப்பிலேயே தான் இருப்போம். அந்தக் குணத்தை மாற்ற மாட்டோம்…! (உணர்வின் இயக்கம் அது). அதற்குப் பெயர் தான் ஆஞ்சநேயர்.
1.அந்தக் கசப்பான சத்து சீதா
2.கசப்பான உணர்ச்சிகளைத் தூண்டுவது அந்த எண்ணங்கள் இராமன்
3.அந்தக் கசப்பான மணத்தை எண்ணும் பொழுது சீதாராமனாக “சொல்லாக மாறுகின்றது…!
ஆனால் அந்த வலுவான கசப்பான நிலைகள் இயக்கி “சொல்வதையே சொல்லிக் கொண்டு…”
1.என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது
2.என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது என்று
3.அந்தக் கஷ்டத்தையே பிடித்துக் கொண்டிருப்பீர்கள்.
சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கும் சத்துகள் அனைத்துமே சீதாலட்சுமி. உபதேச வாயிலாக இப்பொழுது நான் பேசக்கூடிய சக்தியெல்லாம் சீதா சுவை. சொல்லாக வருவது இராமன். நான் சொல்லக்கூடியதை நீங்கள் காதிலே கேட்டால் இராமனுடைய அம்பு.
ஆனால் அதே சமயத்தில் திருப்பித் திருப்பிச் சொன்னதையே சொல்கிறேன் என்று சொன்னால் ஆஞ்சநேயன்.
இப்படியெல்லாம் நமக்கு அர்த்தம் புரிகிற மாதிரித்தான் காவியங்களைப் படைத்துள்ளார்கள் ஞானிகள். இதை யாராவது நாம் மதிக்கின்றோமா…? மதிப்பதில்லை.
நம்முடைய காவியப் படைப்புகள் சாதாரணமானவை அல்ல.
1.நம் உயிரின் இயக்கத்தையும்
2.மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதையும்
3.இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்ற பேருண்மைகளையும்
4.எல்லோரையும் அறியச் செய்வதற்குப் படைக்கப்பட்டதே நம் ஞானிகளால் உருவாக்கப்பட்ட காவியங்கள்.