விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்குப் பெயரை வைப்பது போல மெய் ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு காரணப் பெயர்களை ஞானிகள் எப்படி வைத்துள்ளார்கள்…! சாஸ்திரங்களை நாம் எப்படிப் பயன்படுத்துவது…?

sastram

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்குப் பெயரை வைப்பது போல மெய் ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு காரணப் பெயர்களை ஞானிகள் எப்படி வைத்துள்ளார்கள்…! சாஸ்திரங்களை நாம் எப்படிப் பயன்படுத்துவது…?

 

நம் உயிரின் இயக்கத்தை “ஈசன்” என்றும் அதனின் துடிப்பால் ஏற்படும் வெப்பத்தை “விஷ்ணு” என்றும் ஈர்க்கும் காந்தத்தை “இலட்சுமி” என்றும் காரணப் பெயர் வைத்து அழைக்கின்றனர் ஞானியர்.

ஏனென்றால் இயந்திரத்தைப் பார்க்கின்றோம் என்றால் உதாரணமாக ஒரு காரின் இயக்கத்திற்கு ஸ்டேரிங் என்ஜின் பாடி (STEERING, ENGINE, BODY) என்று இப்படிக் காரணப் பெயர் வைக்கின்றோம். ஒரு மோட்டோருக்கும் காரணப் பெயர்களை (STATOR, ROTOR) வைக்கின்றோம்.

அதை வைத்துத்தான் காரையும் மோட்டாரையும் சீராக இயக்குகின்றோம். அவைகளை வைத்து நமக்கு வேண்டிய பணிகளைச் சீராகச் செயல்படுத்திக் கொள்கின்றோம்.

இதே போலத்தான் ஞானியர்…
1.நம் உயிரின் இயக்கம் எவ்வழியில் எவ்வாறு இயங்குகிறது.. என்று
2.அதனதன் சந்தர்ப்பத்திற்கு ஒப்ப இவ்வாறு காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

விஷ்ணு என்றால் எங்கேயோ இருக்கின்றார்… ஈஸ்வரன் என்றால் எங்கேயோ இருக்கின்றார்… சிவன் என்றால் எங்கேயோ இருக்கின்றார்…! என்ற இந்த எண்ணத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால்
1.நம் உயிர் ஈசனாக இருக்கின்றது.
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக மாறுகின்றது.
3.அது உயிரிலே பட்ட பின் அந்தச் சப்தங்கள் கிளம்புகிறது.

உதாரணமாக நாம் கோபப்படுகின்றோம் என்றால் அந்த கோபமான உணர்வுகளை நம் உடல் முழுவதும் பரவச் செய்கின்றது.

நம் இரத்த நாளங்களில் அந்தக் கோபமான உணச்சிகள் பரவும் போது சாந்தமும் ஞானமும் கொண்ட நமது உடலை அமைத்த நல்ல அணுக்கள் இந்தக் கார உணர்ச்சிகளை ஏற்க மறுக்கின்றது.

இந்த உணர்ச்சிகள் வந்த பின் அதுவும் அலறத் தொடங்குகின்றது. நமது எண்ணமும் அதே போல தோன்றுகின்றது.

கோபம் வருகிறதென்றால் அதனுடன் சேர்ந்து நமக்கு ஒருவிதமான நடுக்கம் வருகிறது. அந்த அணுக்கள் இந்தக் காரத்தைத் தாங்காது அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம் உடலிலுள்ள அணுக்களின் இயக்கமும் மாறுகிறது.

ஆனால் நாம் தவறு செய்தோமா…? என்றால் இல்லை…! ஏனென்றால் இயற்கையின் நியதிகள்
1.நாம் நுகர்ந்ததை (சுவாசிப்பதை) உணர்த்துகிறது நமது உயிர்.
2.நடப்பு நிகழ்ச்சியைக் கவர்ந்து கொடுக்கிறது நமது கண்.
3.அந்த உணர்வின் தன்மை ஈர்க்கப்பட்டு உடலாகச் சேருகிறது.

இதை நாம் அறிவதற்காகவே விஷ்ணு வரம் கொடுக்கின்றான்… பிரம்மனோ உருவாக்குகிறான்… சிவனோ அரவணைக்கின்றான்…! என்று தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

நாம் நுகரும் உணர்வுகள் உயிரான வெப்பத்தில் பட்டதும் இயக்குகின்றது. உடலுக்குள் அந்த உணர்ச்சிகள் பரவுகின்றது. விஷ்ணு வரம் கொடுக்கின்றான்.

விஷ்ணு சங்கு சக்கரதாரி.
1.“சங்கு…” உயிரிலே பட்டதும் தான் நமக்குள் எண்ணங்கள் ஒலிகளாக (சப்தமாக) எழும்புகிறது.
2.“சக்கரம்…!” உயிரில் பட்ட உணர்வுகள் உடல் முழுவதும் அந்த உணர்ச்சிகளாகச் சுழலத் தொடங்குகிறது.

இரத்தத்தின் வழியாகச் சுழலும் அந்த உணர்வுகள் அதிலே கருவாகி முட்டையாகி அணுவாக வெடித்து விட்டால் பிரம்மா உருவாக்குகின்றான். அதாவது கோபத்தைச் சுவாசித்திருந்தால் கோப உணர்வைத் தூண்டும் அணுவாக நமக்குள் உருவாகின்றது.

உயிரிலே பட்ட உணர்வுகள் உடலுக்குள் அணுவாக உருவாகும் பொழுது விஷ்ணுவின் மகன் பிரம்மா. தெளிவாக்குகின்றது நம் சாஸ்திரங்கள்.

இப்படி உருவான அணுக்கள் அனைத்தும் உடலுடன் இரண்டறக் கலக்கின்றது. உடலாகின்றது. சிவன் அரவணைக்கின்றான்.

திடப் பொருளாகும் அனைத்தும் சிவம். ஆகவே நம் உடல் நாம் சுவாசித்ததை அனைத்தும் அரவணைத்து ஐக்கியப்படுத்திக் கொள்கின்றது என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

1.நாம் எதை நமக்குள் அரவணைக்க வேண்டும்..?
2.எதை நமக்குள் உருவாக்க வேண்டும்…?
3.எதை இயக்கச் சக்தியாக நமக்குள் ஆக்க வேண்டும் என்பதைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை நம் உடலுக்குள் உருவாகவிடாது மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்திய அருள் உணர்வுகளை நமக்குள் சிருஷ்டிக்க வேண்டும்… அதை உருவாக்கிக் கொள்ள வேண்டும்..! என்று தெளிவுபடுத்துகின்றார்கள்.

விஞ்ஞானக் கருவிகளை நாம் அதனதன் செயலுக்குண்டான பெயர்களை வைத்து அவைகளை நமக்குகந்ததாகத் தேவைக்குத் தக்கவாறு உபயோகப்படுத்துகின்றோம்.

அதைப் போன்று தான் இயற்கையின் உண்மையின் இயக்கங்களை அறிந்துணர்ந்த மெய் ஞானிகள் அவர்கள் கண்ட நிலையை நாமெல்லாம் அறிந்து அவர்களைப் போன்று மெய் ஞானிகளாக ஆவதற்காக இத்தகைய சாஸ்திரங்களாகக் கொடுத்துள்ளார்கள்.

அவர்கள் காட்டிய வழியில் நாம் வழி நடந்தால் அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டலத்தில் நாமும் இணைந்து அழியாத வாழ்க்கை வாழ முடியும்.

Leave a Reply