தசப்பிரியன் – நரகாசுரன் – விளக்கம்

Narakasura vadam

தசப்பிரியன் – நரகாசுரன் – விளக்கம்

 

இராமயாணத்தில் மனிதனின் உயிரின் இயக்கத்தைத் தசரதச் சக்கரவர்த்தி என்று காட்டுகின்றார்கள்.

பத்தாவது நிலையை அடையக்கூடிய இந்த உயிர் சந்தர்ப்பத்தால் மனித வாழ்க்கையில் பிறர் படும் துயரங்களையும் கோபங்களையும் எண்ணி நாம் எடுக்கப்படும் போது அந்த அசுர உணர்வுகளை உருவாக்கும் அணுக்கள் உடலுக்குள் விளைகின்றது.

உதாரணமாக ஆடு மாடுகளை மற்ற வீரிய உணர்வு கொண்ட புலி மற்ற கொடூர மிருகங்கள் உணவாக எடுத்துக் கொள்கின்றது.

அதைப் போல விஷத்தின் தன்மைகளை நீக்கி நல்ல உணர்வை ஊட்டும் நல்ல அணுக்களை நாம் உடலாகப் பெற்றிருந்தாலும்
1.வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் போன்ற உணர்வுகள் நமக்குள் வரப்போகும் போது
2.அவைகள் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களைக் கொன்று புசித்து
3.விஷம் கொண்ட உடலாக (தசைகளாக) மாற்றுகின்றது.

விஷம் கொண்ட உடலாக மாற்றினாலும் நல்ல உணர்வை உருவாக்கிய நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைக் கொன்று விட்டால்… நமக்கும் இந்தத் “தசையின் எண்ணமே” வருகிறது. அதாவது…
1.நல்ல அணுக்களால் உருவான தசைகளை
2.தீய அணுக்கள் கொன்று புசித்து
3.விஷம் கொண்ட தசையாக மாற்றும் பொழுது
4.அந்த எண்ணம் தான் வருகின்றது.

சாகக்கூடிய தருவாயில் இருப்பவர்களைப் பாருங்கள்,,! வேதனை வந்தது என்றால் அய்யோ…! வேதனையாக இருக்கிறதே… வேதனையாக இருக்கிறதே…! நாம் இப்போதே (உடலை விட்டு) போய்விடுவோமோ என்ற இந்த எண்ணத்தைத் தான் உந்துகின்றது.

அப்போது இந்த உடலின் மீது தான் பற்று வருகின்றது. “உடலை விட்டுப் போகக் கூடாது…!” என்ற நிலையில் அப்போது இது “தசப்பிரியனாகின்றது…!”

அந்த உணர்வின் தன்மை வரப்படும் போது… தான் எதிர்பார்த்த ஒரு ஆகாரத்தையோ அல்லது மற்றதைச் சுவையாகச் சாப்பிட வேண்டும் என்று விரும்பினாலும் செல்வங்கள் ஏராளமாக வைத்திருந்தாலும் நமக்குள் அசுர உணர்வுகளைத் தான் உட்கொள்ள வேண்டி வருகின்றது.

ஏற்கனவே சாப்பிட்ட நல்ல உணவை நாம் சாப்பிட முடியாதபடி அது கழித்து விடுகின்றது. உடலில் நோயானபின் சுவையாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வருகின்றதா…? தூக்கி ஏறி…! என்போம்.

ஆடு புல்லை மேய்கின்றது. ஆனால் அந்தப் புல்லை புலிக்குப் போட்டால் எப்படி இருக்கும்…? மேயுமோ…? மேயாது…!”

ஆடு புல்லை மேய்ந்து அந்தப் புல்லில் உள்ள சாறை எடுத்து அணுக்களின் தன்மையாகி ஆட்டின் உடலாக மாற்றுகின்றது.

அதைப் போன்று தான் மனிதன் நாமும் பல சத்துள்ள ஆகாரத்தைச் சுவை கொண்ட நிலையில் உட் கொண்டு மனிதனாக நல்ல நிலையில் வாழ்கின்றோம்.

ஆனால் நாம் வேதனை… வேதனை.. என்ற உணர்வுகளை எடுக்கப்படும் போது நமக்குள் இருக்கக்கூடிய அணுக்கள் விஷத்தின் தன்மையாக மாறி விடுகின்றது.

விஷத்தின் தன்மையானால் இந்த உடலை உருவாக்கிய அந்த அணுக்களை அது கொன்று தின்ற பின் உடலை நலியச் செய்கின்றது. உடலை மாற்றமடையச் செய்கின்றது.

இதனால் தான் நரகாசுரன் என்று சொல்வது…!
1.நரன் என்றால் மனிதன்.
2.நல்ல மனித உணர்வுக்குள் அசுர உணர்வுகள் இணையும் பொழுது
3.அதை நரகாசுரன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள் ஞானிகள்.

அசுர குணங்கள் நமக்குள் இருந்து கொண்டு நம் நல்ல குணங்களை… நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட இந்த உடலை.. நம் நல்ல செயல்களை அது கொன்று சாப்பிடுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ கோடி உடல்களிலிருந்து தப்பித்து வந்து
1.நம்மை மனிதனாக உருவாக்கிய அந்த நல்ல அணுக்களை எல்லாம்
2.சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமையான உணர்வுகள் கொன்று விழுங்குகின்றது என்பதைத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

அதிலிருந்து நாம் மீண்டிட என்ன செய்ய வேண்டும்…?

1.கண்ணின் நினைவு கொண்டு நம் நினைவாற்றலை விண்ணிலே செலுத்தி
2.கண்ணுடன் சேர்ந்த காந்தபுலனின் ஆற்றலால் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து
3.கவர்ந்த அந்தச் சக்திகளை அதே கண்ணின் நினைவு கொண்டு
4.உடல் உறுப்புகளை உருவாக்கிய அந்த நல்ல அணுக்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது தீபத்தின் ஒளியால் இருள் விலகுவது போல் நம் உடலுக்குள் ஆட்டிப்படைக்கும் அந்த அசுர உணர்வுகள் “ஒடுங்கும்…!” என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அக நிலைகளுக்கு ஞானிகள் கொடுத்த நிலைகளை நாம் புற நிலைகளில் தான் (தீபாவளி என்று நரகாசுரனை எரிக்கின்றோம்) செய்து கொண்டிருக்கின்றோம்.

நம்மை அறியாது இயக்கும் இதைப் போன்ற அசுர உணர்வுகளிலிருந்து விடுபட ஞானிகள் காட்டிய வழியில் செயல்படுகின்றோமா..? என்று சிந்தித்துப் பாருங்கள்.

Leave a Reply