தில்லை நடராஜா… தில்லை அம்பலத்தாண்டவா…! – திருமூலர் சொன்னது

siva-nataraj

தில்லை நடராஜா… தில்லை அம்பலத்தாண்டவா…! – திருமூலர் சொன்னது

“நெருப்பில் இருந்து தான் நீர் தோன்றியது…!” என்று திருமூலர் அன்று உணர்த்தினார்.

ஆதியிலே எதுவுமே இல்லாது சூனியப் பிரதேசமாக இருந்தாலும் அந்த விஷம் விஷமற்றதைத் தாக்கும் பொழுது வெப்பம் உருவாகின்றது,

வெப்பத்தால் ஒன்றுடன் ஒன்று வேக வைக்கும் பொழுது அந்தச் சத்துகள் இரண்டற இணைந்த பின் ஆவிகள் வெளிப்படுகிறது.

ஆவிகள் அடர்த்தியாகும் பொழுது மேகமாக மாறி மேகத்திற்குள் மாறுபட்ட ஆவிகள் மோதும் போது நீராக வடிகின்றது என்ற நிலையைத் தெளிவாகத் திருமூலர் உரைத்துள்ளார்.

நீராக மாறி அடை கூடி நகரும் பொழுது மற்றதைத் தனக்குள் கவர்ந்து மீண்டும் வெப்பமாகி அது உறையும் பொழுது ஒரு திடப் பொருளாகின்றது.

ஆதியிலே எல்லையே இல்லாத பரந்த வெளியில் முதன் முதலில் ஒரு திடப்பொருள் உருவாகும் பொழுது அது பரம் பொருளாகின்றது. பொருளுக்குள் உள் நின்று இயக்கும் சக்தியைப் “பரமேஸ்வரா…!” என்று அழைத்தார்.

திருமூலர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

எல்லையே இல்லாத இடத்தில் பரம் பொருளாக (உலகம்) உருவாகின்றது. பெரிய கோளாக உருவாகும் போது இது சுழற்சியின் நிலைகள் கொண்டு நிற்காமல் ஓடுகிறது.

1.நிற்காமல் ஓடியதால் அதைத் “தில்லை நடராஜா…” என்று காரணப் பெயர் வைக்கின்றார்
2.அதாவது அது நிற்காமல் ஓடும் போது அரசனாக நின்று இந்த உலகை எவ்வாறு அது உருவாக்கியது என்ற நிலையை நிலைப்படுத்துகின்றார்.

அதிலே உருவான உணர்வின் தன்மை உயிரணு தனக்குள் நுகர்ந்த உணர்வுக்கொப்ப “தில்லை அம்பலத்தாண்டவா…”

1.உயிரினங்கள் தான் நுகர்ந்த அந்தந்த உணர்வுக்கொப்ப உரு அமைவதும்
2.அதற்கொப்ப அதனுடைய நாத ஒலிகளை எழுப்புவதும்
3.இந்த உணர்வுக்கொப்ப ரூபங்கள் அமைவதும்
4.அவைகளின் நடை உடை பாவனைகளைப் பார்த்து ஆயிரத்தெட்டு நடனங்களைக் காட்டினார் திருமூலர்.
5.அதுவே மனிதனுக்குள் வரும் போது நூற்றியெட்டு நடனங்களாக காட்டினார்.

நடனக் கலை என்று இன்று நடராஜருக்கு நாட்டியாஞ்சலி செய்தால் நடராஜர் நமக்கு ஏதோ செய்வார் என்று இப்படி சாங்கியங்களைச் செய்து வரம் கேட்பவர்களாகத்தான் இன்று இருக்கின்றோம்.

இதை எல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.

அந்த ஸ்தலத்தில் சிதம்பரத்திலிருந்து அதை நாம் பெறவில்லை. அங்கே நாம் பூஜை செய்வதும் அதனுடைய வாரிசுகளுக்குக் கொடுத்து விட்டு அருள் வாங்குவது என்ற நிலையில் தான் இருக்கின்றோமே தவிர திருமூலர் உணர்த்திய பேருண்மையை அறிவதற்கு இல்லை.

அவரின் வாரிசுகளாவது இன்று சீராக இருந்து அவர்களாவது அந்த உண்மையைப் பெற்று இருக்கிறாரா என்றால் இல்லை.

கிடைத்த மட்டும் லாபம் என்ற நிலையில் இந்த வாழ்க்கையின் நிலைகளைத்தான் ஓட்டுகின்றாரே தவிர அந்த மகா ஞானி திருமூலர் காட்டிய மெய் வழியைப் பின்பற்றவில்லை.

அவர் பிறவியில்லா நிலைகள் அடைந்தார். அதைப் பெற வேண்டும் என்ற நிலை இல்லை. ஏனென்றால் விஞ்ஞான அறிவால் மனிதனுடைய எண்ணங்கள் முழுவதும் அழியும் இத்தருணத்தில் இதைத் தெளிவுபடுத்துகின்றோம்.

1.திருமூலர் காட்டிய நெறிகள் கொண்டு
2.மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்த அந்த மகரிஷிகள் உணர்வை நமக்குள் எடுத்தால்
3.வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க முடியும்
4.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து நம்மைக் காக்க முடியும்.

இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும். பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும். இந்த வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும். என்று எண்ணி இந்த முறைப்படி தியானியுங்கள்.

எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்த ஆலயத்தில் தவம் இருங்கள்.

ஒவ்வொரு மனிதனும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்தால் இது தான் தவம்.

ஆண்டவனை நான் காணப் போகின்றேன் அவன் அருளை நான் பெறப் போகின்றேன் என்று இருப்பது தவம் அல்ல.

ஒவ்வொரு மனிதனையும் ஆண்டு கொண்டு இருப்பது உயிர். அது தான் தில்லை அம்பலத்தாண்டவா…!

1.ஆண்டவனாக இயக்கிக் கொண்டு இருப்பதும்
2.எண்ணியதை ஈசனாக உருவாக்கிக் கொண்டு இருப்பதும்
3.உணர்வின் அணுவை உடலாக்கிக் கொண்டு சிவனாக்கிக் கொண்டு இருப்பதும்
4.சிவத்துக்குள் சக்தியாக்கி இயக்கிக் கொண்டு இருப்பதும் உயிரே.

ஆகவே அந்த உடலை ஆண்டு கொண்டிருக்கும் உயிர் வீற்றிருக்கும் ஆலயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தச் செய்யும் போது அந்த ஆண்டவனின் அருளை நாம் பெற முடியும்.

எல்லோரும் மகிழ வேண்டும் என்று எண்ணினால் இது தவம். அந்த மகிழ்ச்சியின் தன்மை நமக்குள் போற்றும் நிலை வந்தால் அந்த தவத்தின் பலனை நாம் பெறுகின்றோம். ஆலயங்களில் இந்த முறைப்படி எண்ணிப் பெறுங்கள்.

அந்த மெய் ஞானிகள் காட்டிய வழிகளில் நாம் இதைச் செயல்படுத்துவோம். இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மையை அகற்றுவோம். நமக்குள் அறியாது புகுந்த அந்த நஞ்சின் தன்மையை அதை வளராது தடுப்போம். உலக மக்களைக் காப்போம்.

அடுத்து வரும் சந்ததியினர் கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஞானியருடைய உணர்வைப் போதிப்போம். அதைப் பூர்வ புண்ணியமாக அமைப்போம்.

பிறந்த பின் உலகைக் காத்திடும் ஞானிகளாகக் காப்போம்… வளர்ப்போம்… அதைச் செயலாக்குவோம்… என்று “உறுதி கொள்வோம்…!”

Leave a Reply