இந்த உலகையே அடிமைப்படுத்தி ஒரு சாம்ராஜ்யமாக ஆள நினைத்த பிருகு கடைசியில் என்ன ஆனார்…?

Divine Relations

இந்த உலகையே அடிமைப்படுத்தி ஒரு சாம்ராஜ்யமாக ஆள நினைத்த பிருகு கடைசியில் என்ன ஆனார்…? 

இருபத்தியேழு நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து கவர்வதை நமது பிரபஞ்சத்திற்குள் கொண்டு வந்து அந்தச் சக்தியை நமது பூமிக்கு எப்படிக் கொடுக்கின்றது என்பதை ஆதியிலே அகஸ்தியன் கண்டான்.

4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வியாசகனும் அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்து அதை வெளிப்படுத்தினான்.

அந்த இருபத்தியேழு நட்சத்திரத்தின் ஓட்டங்களையும் அதனுடைய இயக்கங்களையும் அதனின் உணர்வுகளைப் பற்றியும் வியாசகன் கூறிய உணர்வுகளை அவனுப்பின் வந்த பிருகு தன் நினைவின் ஆற்றலால் பதிவு செய்து கொண்டான்.

நட்சத்திரங்களின் இயக்கங்களைப் பற்றித் தான் அறிந்து கொண்டவைகளைத் தன் குழந்தைகளுக்குக் கருவில் இருக்கும் போதே உபதேசித்து அந்த உணர்வுகளைப் பதியச் செய்தான்.

தன் சாம்ராஜ்யம் தழைத்திருக்க வேண்டும் என்ற ஆசையில் பிரபாகரன் பார்கவன் என்ற இரு குழந்தைகளுக்கும் தான் கற்றுணர்ந்த வியாசகரின் தத்துவத்தைக் கருவிலேயே உருவாக்கினான்.
1.என்றென்றும் இந்தச் சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும் என்ற பேராசை கொண்டு
2.அந்த ஆசையினால் தான் கண்டுணர்ந்த உணர்வுகளை
3.தன் இனத்திற்குள் (குழந்தைகளுக்குள்) பாய்ச்சிப் பதிவாக்கினான்.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகும் பொழுதுதான் அதன் உணர்வுகள் மின்னலாகப் பாய்கின்றது.

இதைப் போன்ற உணர்வுகளையும் தன் எண்ணத்தால் பாய்ச்சி அதை அடக்கும் நிலைகள் பெற்றவர் தான் பிருகு.

இன்று மற்ற நாடுகளின் மீது லேசர் (LASER) கதிரியக்கங்களை பாய்ச்சி அவர்களை விஞ்ஞான அறிவு கொண்டு அடக்குவது போலத்தான் அக்காலத்தில் பிருகும் செய்தார்.

1.அவருடைய உடலிலே விளைந்த நட்சத்திரங்களின் ஆற்றல் கொண்டு
2.தன் பார்வையால் அதை மற்ற நாடுகளில் பாய்ச்சி
3.எந்த ஒரு நாட்டையும் அடிமைப்படுத்தும் நிலையாகச் செயல்படுத்தப்பட்டு
4.தன் சாம்ராஜ்யமாகப் பெருக்கிக் கொண்டவர்.

பிருகு என்பவர் கடுமையான தவத்தின் தன்மை பெற்றவர்.

வியாசகன் கூறிய நிலையும் நட்சத்திரத்தின் இயக்க ஓட்டங்கள் என்ற நிலையை அதனுடைய விரிவுரைகளை வேத சாஸ்திரங்களாக – மொழியாக மாற்றி அதாவது எழுத்து வடிவிற்குக் கொண்டு வந்தவர்.

அதன் உணர்வுகளைத் தனக்குள் ஆழமாக பதிவு செய்து கொண்ட பின் இந்த உலகையே ஒரு சாம்ராஜ்யமாகத் “தான் ஆள வேண்டும்…!” என்ற வலுவின் தன்மை பெற்றவன் பிருகு.

பிருகு மற்ற நாடுகளை இப்படி அடக்கிக் கொண்டிருந்தாலும் இங்கே தன் சாம்ராஜ்யத்தில் அவன் குழந்தைகள் ரூபமாகப் போர் வருகின்றது.

அதாவது மூத்த மகனும் இளைய மகனும் சகல வித்தைகளையும் நாங்கள் கற்றுக் கொண்டோம். தனித் தனியே எங்களுக்குல் இந்த சாம்ராஜ்யத்தில் பங்குகள் வேண்டும் என்று தந்தையிடமே மோதுகின்றார்கள்.

அரச சட்ட நியதிப்படி மூத்தவன் தான் ஆட்சி புரிய வேண்டும். இளையவன் அவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இருந்தாலும் அது பார்க்கவனுக்குக் கோபத்தை அதிகமாகக் கிளரச் செய்தது.

சகோதரர் ஒருவருக்கொருவர் போர் முறை கொண்டு கடைசியில் கற்றுணர்ந்த உணர்வு கொண்டு இந்தப் பிருகுவையே ஒளி கொண்டு பாய்ச்சி அவருடைய சக்தியை இழக்கச் செய்தார்கள்… சூனியமாக்கினார்கள்.

ஏனென்றால் பிருகு கல்வி அறிவு கொண்டவராக இருந்தாலும் அவர் கற்றறிந்த உணர்வின் அறிவின் ஞானத்தை யாருக்கும் ஊட்டவில்லை.

போருக்காகவும் தன் புகழுக்காவும் மற்றோரை அடக்கி ஆட்சி புரிய வேண்டும் என்று “அந்த ஒன்றைத் தான்” அவனுக்குள் வளர்த்தான். தன் இனமும் அதையே தான் செய்ய வேண்டும் என்று விரும்பினான்.

இதைத்தான் கீதையிலே கண்ணன் சொல்லுகின்றான்… “நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆகின்றாய்…!”

1.உலகையே அடக்கி.. “தான் செயல்பட வேண்டும்” என்று பிருகு நினைக்கப்படும் போது
2.அதுவே வளர்ந்து அவனை அடக்கிடும் நிலையாக அது வருகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் அறிந்து கொள்ள வேண்டும்.

சாஸ்திரங்களை ஞானிகள் எவ்வாறு கொடுத்தார்கள்…? அதிலே திசை மாறிச் செல்லும் போது அவர்களின் நிலைகள் எதுவாக மாறுகிறது…?

ஏனென்றால் இன்று லேசர் இயக்கம் என்று சொல்வது போல மின் அலைகளை வைத்து நாடுகளை அடிமைப்படுத்துவதற்காக அன்றே இவர்கள் ஆயுதம் செய்தவர்கள்.

“நாக(ம்)…!” என்று ஒவ்வொரு விஷத்தின் தன்மைக்கொப்ப ஒவ்வொரு ஆயுதங்களை எண்ணி… அதை எடுத்து… உணர்வின் ஒலி அலைகளை எதிர் அலைகளாகப் பாய்ச்சி.. “மற்ற நாடுகளைச் சூனியமாக்கியவர்கள்…”

இதனால் காற்று மண்டலமும் சூனியமாகி அங்கு வாழும் மக்களையும் அது மடியச் செய்கிறது.

அக்காலங்களில் இத்தகைய போர் மூண்டு அதிலே மடிந்த நகரங்கள் ஏராளம் உண்டு. பூமியிலே மண்ணுடன் மண்ணான அத்தகைய நகரங்கள் பல இருக்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அதை எல்லாம் எமக்குத் (ஞானகுரு) தெளிவாகக் காட்டுகின்றார்.

போர் முறையாகி எல்லாம் மடிந்த பின் அவர்கள் செய்த அந்த அறிவின் ஞானங்கள் வளரப்படும் பொழுதுதான் (இன்றைய) விஞ்ஞான அறிவாக மாறுகின்றது.

தீமையின் நிலைகளை தனக்குள் மடியச் செய்து உணர்வை ஒளியாக மாற்றி விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் “அந்த ஞானங்கள் மறைந்தே போய்விட்டது….!”

இன்றைய உலகில் மனிதனின் எண்ண உணர்வுகள் முழுவதும் நஞ்சாகப் பாய்ச்சப்பட்டு இந்த உணர்வுகள் பெருகி “மனிதர்கள் அனைவரும் நஞ்சான உயிரினங்களாக மாறும் நிலைகளாகத் தான்” விஞ்ஞான அறிவால் வளர்ந்து கொண்டிருக்கின்றோம்.

மனிதன் மனிதனாக இருப்பினும் அசுர உணர்வுகள் கொண்டு அசுரனாக மாற்றிக் கொண்டுள்ளது.

இந்த விஷத் தன்மைகள் பரவி மனிதனின் உணர்வை அழித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நமது குரு காட்டிய அருள் வழியில் செயல்பட்டு “உலகம் நலம் பெற வேண்டும்” என்ற தவத்தை மேற்கொள்ள வேண்டும்.

எந்த ஆலயங்களுக்குச் சென்றாலும் அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானித்து இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா… என்று வேண்டுங்கள்.

பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும்… இங்கே ஆலயம் வரும் குடும்பங்கள் மகிழ்ந்து வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று நாம் வாழ்த்தினால் இதைப் பின்பற்றி வருவோரும் இதைச் செய்யத் தொடங்குவார்கள்.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் இதைப்போல நீங்கள் ஒவ்வொருவரும் செய்து காட்டுங்கள். மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உங்கள் மூச்சலைகளை அங்கே பரப்புங்கள்.

நம்மைக் காப்போம். மக்களைக் காப்போம். எல்லோரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திடத் தவமிருப்போம்…!

Leave a Reply