அகஸ்தியன் பெற்ற அதிசய ஆற்றல்கள் – “கருமாரி உருமாரி திருமாரி”

Athi Karumaro

அகஸ்தியன் பெற்ற அதிசய ஆற்றல்கள் – “கருமாரி உருமாரி திருமாரி”

 

அகஸ்தியன் ஐந்து வயது இருக்கப்படும் பொழுது அவன் தாய் தந்தையர் இருவருமே சந்தர்ப்பத்தால் இறந்து விடுகின்றார்கள்.

ஏனென்றால் அவர்கள் தங்கள் உடல்களில் பூசிக் கொண்ட தாவர இனச் சத்துகளின் விஷங்கள் உடலுக்குள் ஊடுருவி உயிரான்மாவில் பெருகி அதனால் உயிர்கள் வெளியேறி விடுகின்றது.

ஆனாலும் தன் குழந்தை என்ற பாசத்தால் குழந்தையின் உடலுக்குள் இரு உயிரான்மாக்களும் சென்று விடுகிறது.

அந்தக் குழந்தையோ (அகஸ்தியன்) தாய் தந்தையின் ஏக்கத்தில் சூரியனைப் பார்த்து ஏங்குகின்றது…! கதறுகிறது…! (சூரியனைத்தான் அன்றைய மக்கள் கடவுளாக வணங்கி வந்தனர்)

அகஸ்தியன் அவ்வாறு விண்ணை நோக்கி ஏங்கும் போது சூரியனின் உணர்வின் ஆற்றலால்
1.அன்னை தந்தையர் தனக்குள் ஈர்ப்பாக எவ்வாறு வந்தார்கள் என்று (தனக்குள்ளே) அவனால் உணர முடிகிறது.
2.தன்னுள்ளே நின்று… “என் தாய் தந்தை என்னைக் காக்கின்றார்கள்…!” என்று அறிகின்றான்.

அவர்களின் ஆற்றல்களின் துணை கொண்டு சூரியனைப் பார்க்கப்படும் போது சூரியனுக்குள் எதிர் மறையாக மோதிக் கொண்டிருக்கும் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சு பிரிவதைப் பார்க்கின்றான்.

அதே சமயத்தில் தான் கவர்ந்து கொண்ட உணர்வுகளைச் சூரியன் அமிலமாக… “பாதரசமாக மாற்றி” அதைப் பரவெளியில் உமிழ்த்திக் கொண்டிருப்பதையும் காணுகின்றான்.

1.அந்தப் பாதரசம் மற்றொன்றோடு மோதும் போது (வெப்ப காந்த அலைகள் – வெயில்)
2.அந்தந்த உணர்வுகளை மாற்றி அதைத் தனதாகக் கவர்ந்து
3.அதனதன் உணர்வலைகளாக எவ்வாறு செல்கிறது…? என்ற நிலையும் அகஸ்தியன் கண்டுணர்கின்றான்.

இன்று விஞ்ஞான அறிவால் ஒரு அணுவின் தன்மையைக் கூர்மையாக அறிந்து அறிந்து இத்தனை ஆண்டுகளாக வளர்ந்த பாறை என்று காணுகின்றார்கள்.

அதைப் போல இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை அந்த இளம் பிஞ்சு உள்ளத்திலேயே எளிமையில் கண்டுணர்ந்தான் அகஸ்தியன்.

சூரியன் எவ்வாறு உருவானது என்ற நிலையும் கடவுள் எவ்வாறு உருவானது என்ற நிலையும் அவன் சிந்தனைக்குள் கிளரச் செய்து விண்ணின் நிலையை அவன் நுகருகின்றான்.

ஒவ்வொரு அணுவின் தன்மையைப் பிளந்து பிளந்து ஆரம்பத்தில் அணுக்கள் எவ்வாறு உருவானது என்ற நிலையையும் உணர்ந்து வெளிப்படுத்துகிறான்.

ஆதியிலே பேரண்டம் எவ்வாறு இருண்ட சூழ்நிலைகள் இருந்தது..? அதிலே அணுக்கள் எப்படி உருவானது…? என்று விண்ணுலகின் தோற்றத்தை அகஸ்தியன் கண்டுணர்கின்றான்.

பேரண்டம் இருண்ட நிலையில் இருந்த அக்காலத்தில் நஞ்சு கொண்ட ஓர் அடர்த்தியான ஆவி நஞ்சற்ற நிலைகளில் மோதும் போது (BIG BANG என்பார்கள் விஞ்ஞானிகள்)
1.நஞ்சின் தன்மை கொண்டு அதன் தாக்குதல் தாங்காது வெப்பமாகி
2.அது சுக்கு நூறாகத் தெறித்து சிதறுண்டு ஓடுகின்றது.
3.அவ்வாறு ஓடும் பொழுது அதனின் ஓடும் பாதையில் ஈர்க்கும் சக்தியான காந்தம் உற்பத்தியாகின்றது.
4.விஷம் காந்தம் வெப்பம் இது மூன்றும் சேர்த்து ஒரு அணுவின் தன்மையாக அடைகின்றது
5.முதன் முதலில் ஒரு இயக்க சக்தியாக இது எவ்வாறு உருவானது என்ற நிலையை
6.இந்த ஐந்து வயதுக் குழந்தை அகஸ்தியன் கண்டுணருகின்றான் .

அங்கு நடக்கும் அதிசயங்களையும் அற்புதங்களையும் பார்த்து உணர்கின்றான். அவன் உணர்ந்த நிலைகள் அனைத்தும் அவனுக்குள் விளைகின்றது.

இந்தச் சக்தி அவனுக்கு எப்படிக் கிடைத்தது…?

1.ஆரம்பத்தில் தாயின் கருவில் பெற்ற நஞ்சினை வென்றிடும் சக்தியும்
2.ஐந்து வயதில் அவனுக்குள் இணைந்த அன்னை தந்தையின் இரு உயிராத்மாக்களின் சக்தியும்
3.அந்த நஞ்சின் சக்திகளும் அகஸ்தியனுக்குள் வலு கூடப்பட்டு
4.பேரண்டத்தில் ஒரு அணுவின் தன்மை எவ்வாறு நஞ்சால் இயக்குகிறது என்ற நிலையை அவன் கண்டுணர்ந்தான்.

அவன் கண்டுணர்ந்த உணர்வுகள் அவன் உடலுக்குள் விளைந்து “அவனின் மூச்சலைகளாக…” அது விண்ணுலகிலும் படர்ந்துள்ளது. இந்த மண்ணுலகிலும் (நம் பூமியிலும்) படர்ந்துள்ளது.

அகஸ்தியன் தான் உணர்ந்த பின் எல்லாவற்றுக்கும் பெயரிடுகின்றான்.
1.நெருப்பைப் பராசக்தி என்றும்
2.காந்தத்தை லட்சுமி என்றும்
3.விஷத்தை ஆதிகருமாரி என்றும் பெயரிடுகின்றான்.

ஆதி கருமாரி என்றால் இருண்ட நிலைகள் இருக்கும் போது அதற்குள் நஞ்சு கொண்டது நஞ்சற்றதைத் தாக்கப்படும் போது
1.இருண்டது வெப்பமாகி ஒளியாக மாறுவதும்
2.தாகுதலால் நகர்ந்து போவது ஈர்ப்பின் சக்தி அடைவதும்
3.ஒரு இயக்கச் சக்தியாக எவ்வாறு மாறுகிறது என்று அவன் உணர்ந்தான்.

அதாவது கருமாரி… உருமாரி… திருமாரி.. என்று இருண்ட நிலைகளிருந்து எப்படி “இயக்கச் சக்தியாக – கடவுளாக…!” உருவாகின்றது என்று காரணப் பெயரிடுகின்றான் அகஸ்தியன்.

அவன் எதையெல்லாம் வெளிப்படுத்தினானோ அந்த நினைவலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இங்கு படரச் செய்துள்ளது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அலைகளை நுகரும் பொழுது என்னாலும் அதை அறிய முடிந்தது. உணர முடிந்தது. உங்களாலும் அறிய முடியும்… உணர முடியும்…!

உதாரணமாக இன்று விஞ்ஞான அறிவால் விண்ணுலகில் நக்கும் நிலைகளை இயந்திரத்தின் துணை கொண்டு புகைப்படமாக எடுக்கிறான். அந்த ஒளி அலைகளை இங்கே பதிவாக்கிப் பிரித்துத் தரையிலிருந்து படமாகவும் எடுக்கிறான்.

அந்த உணர்வின் ஒளி அலைகளையும் நாதத்தின் தன்மையும் அதனுடைய அடர்த்தியையும் இன்று விஞ்ஞானி கண்டுணருகின்றான்.

விஞ்ஞானிகள் எத்தனையோ இப்படிக் கண்டறிந்து வெளிப்படுத்தினாலும் மெய் ஞானிகள் கண்டுணர்ந்ததை இன்னும் துரும்பளவு கூடச் சொல்லவில்லை. ஏனென்றால்
1.நான் (ஞானகுரு) படிப்பறிவு அற்றவன்.
2.மூன்றாவது வகுப்பு கூட முழுமையாகப் படிக்கவில்லை.
3.எனக்கு விஞ்ஞான அறிவும் இல்லை.
4.புத்தகங்களையும் படித்ததில்லை.

ஆனால் விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசுகிறேன் என்றால் அந்த மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை எனக்குள் பதிவானது. பதிவானதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து வளர்த்துக் கொண்டேன்.

அப்படி வளர்த்த நிலைகள் கொண்டு தான் என்னால் அறிந்துணர முடிந்தது. அதை உங்களுக்கும் எடுத்துரைக்க முடிகின்றது. இது உங்களுக்குள் பதிவான பின் அண்டத்தின் நிலைகளை நீங்களும் கண்டுணரவும் முடியும்.

அண்டத்தில் உருவானது தான் இந்தப் பிண்டத்திலும் இருக்கின்றது. அதை அறியும் உணர்வுகள் வரப்படும் போது உங்களுக்குள் இது ஒளியாக மாறி அந்த மெய் ஞானிகளின் உணர்வுடன் உங்கள் உயிரான்மாவும் ஒன்றுபடும்.

1.பிறவியில்லாப் பெரு நிலையை நீங்கள் அடைய முடியும்.
2.அதற்காகத் தான் இதை உங்களுக்குள் பதிவாக்குகிறோம்.

அகஸ்தியன் பெற்ற அதிசய ஆற்றல்களை ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறோம்.

Leave a Reply