உண்மையான அரசியல் எது…?

spiritual-unity

உண்மையான அரசியல் எது…?

 

உலகம் முழுவதிலும் மதம் இனம் என்ற வகையில் ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாது இருப்பினும் அரசியலில் எடுத்துக் கொண்டால் இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று இதிலேயும் பகைமை வளர்கின்றது.

நாட்டைக் காக்கின்றோம் என்று தான் அனைவரும் சொல்கின்றனர். ஆனால் நாட்டு மக்கள் மத்தியிலே பகைமையை உருவாக்கும் நிலைகள் தான் இன்று உருவாகின்றது.

அவன் என் கட்சியைச் சேர்ந்தவன் இவன் உன் கட்சியைச் சேர்ந்தவன் என்று பகைமைகள் உருவாகிவிட்டது.

மாறி மாறி கட்சிகள் நாட்டை ஆட்சி செய்தாலும் ஒருவருக்கொருவர் அவர் என்ன நல்லது செய்தார்…? இவர் என்ன நல்லது செய்தார்…? ஒன்றும் செய்யவில்லையே என்ற இந்தப் பகைமை உணர்வைத்தான் ஊட்ட முடிகின்றது.

அவர்கள் ஆட்சியிலிருந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சியாக மாறினாலும் சரி மாறி மாறிக் குறை கூறும் நிலையைத் தான் வளர்க்கின்றார்கள்.

நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டிய நன்மையைப் பற்றிப் பேசும் நிலையோ அல்லது அதைச் செயல்படுத்த வேண்டிய ஆக்கபூர்வமான நிலைகள் இல்லை.

நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று யார் சென்றாலும் அதைச் செய்ய முடியாத நிலைகள் தான் உருவாகின்றது. இன்று நம் நாட்டிலுள்ள எல்லா மாநிலங்களிலும் பார்க்கலாம். ஏன்..! உலகமெங்கும் இந்த நிலை தான் உள்ளது.

அரசியல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்கள் எப்படி வாழ்கின்றார்கள்..! என்ற நிலையைப் பார்க்கலாம்.
1.மக்களைக் காக்க வந்தார்களா…?
2.தன்னைக் காக்கச் சென்றார்களா…? என்ற வினாக்கள் தான் இன்றைய நிலைகளில் இருக்கின்றது.

உலக ரீதியிலே எடுத்துக் கொண்டாலும் இந்த நிலை தான் தான் இருக்கின்றது. அவர்களைக் காக்கத் தான் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்களே தவிர நம்மைக் காக்க இல்லை…!

தன்னைச் சுற்றி அத்தனை பகைமைகளும் சிக்கல்களும் இருக்கும் போது மற்றவர்களை எங்கே காப்பது…! அவர்களால் முடியுமா…?

எந்த அரசாங்கமாக இருந்தாலும் மக்கள் நாம் அனைவரும் நல்ல நிலையில் இருந்து ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
1.அரசு நன்றாக நடக்க வேண்டும் என்றால்
2.மக்கள் காந்திஜியின் தத்துவத்தைக் கடைப்பிடித்தால்
3.ஒருவருக்கொருவர் பொறாமை என்ற நிலைகளை அகற்ற முடியும்
4.போட்டியையும் பகைமையையும் அறவே ஒழிக்க முடியும்…!

அந்த நிலையைத் தனி மனிதன் நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால் அரசியல் வாழ்வோருக்கும் நாம் எடுத்துக் காட்டும் நிலை வருகின்றது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் எடுத்து நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பகைமைகள் வரும் பொழுது அதைத் தடுக்கும் ஆயுதமாக காந்திஜி சொன்ன வழியில்
1.தவறு செய்பவர்கள் உணர்வை நம்மை இயக்கவிடாது
2.அந்த உணர்வு நமக்குள் வந்து நம்மை அந்நியமாக்க விடாது
3.மகரிஷிகளின் உணர்வைப் பாய்ச்சிப் பாதுகாப்புக் கவசமாகத் தடுக்க வேண்டும்.

நாம் பாய்ச்சும் அந்த ஆற்றல்களை அவர்கள் நுகரும் பொழுது அவர்கள் தவறை உணர்த்திக் காட்டும். அவர்களும் உண்மையை அறியும் சந்தர்ப்பம் உருவாகும். அதைப் பகைமையாக மாற்றாது.

ஆகவே நாம் இந்த நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும். செய்து பாருங்கள். உங்களால் முடியும்…!

Leave a Reply