இரயிலில் செல்லும் பொழுது இரக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நடந்த நிகழ்ச்சி

divine-strength

இரயிலில் செல்லும் பொழுது இரக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நடந்த நிகழ்ச்சி 

ஒரு முறை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடன் யாம் (ஞானகுரு) சென்னையிலிருந்து மும்பைக்கு இரயிலில் சென்று கொண்டிருந்தோம்.

அப்பொழுது இரயிலில் ஒரு நோய்வாய்ப்பட்ட பெண்மணியை அவர்களுடைய உறவினர்கள் வேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து மும்பைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

நோய்வாய்ப்பட்ட பெண்மணி வேதனை தாளாமல், உறவினர்களிடம் “தண்ணீர் கொடு… அது கொடு… இது கொடு…” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஆனால் உறவினர்களோ மருத்துவர் சொன்னபடி “உணவோ… தண்ணீரோ.. ஒரு அளவிற்கு மேல் கொடுக்கக் கூடாது…!” என்பதைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நோய்வாய்ப்பட்ட பெண்மணியோ “அடப்பாவிகளா…! எனக்கு நாக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றது உண்ணுவதற்கு எதுவும் கொடுக்கமாட்டீர்களா…?” என்று சாபமிட்டுக் கொண்டிருந்தார்.

உறவினர்கள் நோயாளியைப் பார்த்து… “நீ… சும்மா இருக்க மாட்டாயா…!” என்று மிரட்டுகிறார்கள்.

ஆனால் அருகிலிருக்கும் மற்றவர்கள் நோயான பெண்மணியைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும் அம்மா…!” என்று இரக்கமாகக் கேட்டார்கள்.

அதைக் கேட்ட உறவினர்கள் “ஏனய்யா… அவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா…? நீ ஏன் கேட்கிறாய்…?” என்று சொல்கிறார்கள்.

நோயான பெண்மணி…, “பார்…! உதவி செய்ய வருபவர்களைக் கூட இப்படித் திட்டுகிறார்களே…” என்று எண்ணுகின்றார்.

1.”சந்தர்ப்பம்” – இது போன்ற உணர்வுகளை நுகரும் பொழுது
2.உயிர் அதை ஜீவ அணுவாக அவர்களுக்குள் உருவாக்குகின்றது என்று
3.குருநாதர் இதை எனக்குக் காண்பித்தார்.

ஆனால் அங்கு உள்ள யாரும் தவறு செய்யவில்லை.

மருத்துவர்கள் கூறிய அறிவுரையை உறவினர்கள் கடைப்பிடிக்கிறார்கள். எதற்காக…? நோயான பெண்மணியைக் காப்பாற்ற வேண்டும் என்று…!

ஆனால் நோயான பெண்மணியோ “இப்படி அவஸ்தைப்படுகிறேனே… கேட்டதைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே… கொஞ்சம் கூட இரக்கம் இல்லையே…!” என்று சொல்கிறார்.

இதைக் கேட்டவுடனே உறவினர்கள் வேகம் கொண்டு “நீ பேசாமல் இரு…!” என்கிறார்கள்.

அப்பொழுது “நாம் இவர்களுக்கு எத்தனை உதவிகள் செய்திருப்போம்…? என்னுடைய நோயின் தன்மை தெரியாமல் இப்படி சீறிப் பாய்கிறார்களே… வேதனைப்படுத்துகிறார்களே…!” பாவிகள்…! என்று நோயாளியின் உணர்வுகள் மாறுகின்றது.

இதெல்லாம் சந்தர்ப்பங்கள்.

இரயிலை விட்டு இறங்கியவுடன் நோயான பெண்மணியின் வீடு வரை எம்மைச் சென்று வரச் சொல்லிவிட்டு குருநாதர் ஒரு இடத்தில் இருந்துவிட்டார்.

யாம் அவர்களைப் பின் தொடர்ந்து அவர்கள் வீடு வரை சென்றோம். இரண்டு நாள் அங்கே இருந்தோம். மூன்றாம் நாள் நோயான அந்தப் பெண்மணியின் உயிராத்மா பிரிந்தது.

இரயிலில் வரும் பொழுது
1.நோயான பெண்மணிக்காக “யார் பரிந்து பேசினார்களோ…”
2.அவர்களுடைய நினைவு நோயான பெண்மணிக்கு சாகும் தருவாயில் வந்தது
3.“மகராசி எனக்காகப் பரிந்து உதவி செய்தாளே…” என்ற எண்ணம் வந்தது.

உறவினர்களை நினைத்து “என்னுடைய எல்லா சொத்துக்களையும் வைத்துக் கொண்டு துரோகம் செய்தார்களே…” என்று சாபமிட்டது.

இத்தகைய சாப அலைகளை நுகர்ந்த உறவினர் குடும்பத்தில் சாப உணர்வுகள் விளைந்து பெருகி அவர்கள் தொழில் நசுங்கியது. குடும்பத்தில் பல குழப்பங்கள் விளைந்தது.

எம்மை 48 நாட்கள் அந்த வீட்டிற்கு அருகாமையில் இருந்து இதையெல்லாம் பார்க்கும்படி செய்தார் குருநாதர். ஒரு பக்கத்தில் அமர்ந்து இங்கே என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதே சமயத்தில் நோயான பெண்மணிக்காகப் பரிந்து பேசினார்களே அவர்கள் நோயான பெண்மணியின் வீட்டுப் பக்கம் வந்து பார்த்தவுடனே
1.நோயான பெண்மணியின் உயிராத்மா இவருடைய உடலுக்குள் வந்து
2.தான் எப்படியெல்லாம் நோயால் அவஸ்தைப்பட்டதோ
3.அதே வேதனையின் உணர்ச்சிகளை, இவருடைய உடலுக்குள் ஊட்டுகின்றது.

ஆன்மா இன்னொரு உடலுக்குள் செல்கின்றது. இவரை எப்படிச் சிரமப்படுத்துகின்றது என்று குருநாதர் இதையும் பார்க்கச் சொன்னார்.

தொடர்ந்து இவருடைய வீட்டிலும் ஒருவருக்கொருவர் குழப்பமாகி வியாபார மந்தம் தங்களை அறியாமலே குழந்தைகளைச் சீறிப் பேசுவது, தவறான நிலையில் பேசுவது சங்கடங்கள் போன்ற பல இயக்கங்களை அங்கே இருந்து எம்மைக் கண்டுணரும்படி செய்தார்.

இயற்கையின் இயக்கத்தில்
1.சந்தர்ப்பம் மனிதர்களை எப்படிக் குற்றவாளியாக ஆக்குகின்றது?
2.சந்தர்ப்பத்தால் நோய் எப்படி விளைகின்றது? என்பதையெல்லாம்
3.குருநாதர் தெளிவாகக் காண்பித்தார்.

இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்…!

ஆகவே மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றினால் நாம் இன்னொரு உடலுக்குள் செல்ல மாட்டோம். பிறவியில்லா நிலை அடைவோம்.

Leave a Reply