தீமையானவைகளுடன் நாம் என்றைக்கும் நேரடியாகச் சண்டை செய்யவே கூடாது – “சுக்ரீவனைத்தான் (துருவ நட்சத்திரத்தை) அனுப்ப வேண்டும்…!” – விளக்கம்

dhanush

தீமையானவைகளுடன் நாம் என்றைக்கும் நேரடியாகச் சண்டை செய்யவே கூடாது – “சுக்ரீவனைத்தான் (துருவ நட்சத்திரத்தை) அனுப்ப வேண்டும்…!” – விளக்கம்

 

உதாரணமாக ஒருவர் நமக்கு இடைஞ்சல் செய்தால் அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது. அவர் செய்யும் இடைஞ்சல்களிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ளும் நிலையாகப் பதிலுக்கு அவருக்கு நாம் தொல்லைகள் செய்ய ஆரம்பிக்கிறோம்.

அவருக்குத் தொல்லைகள் செய்யும் போது அவ்வளவு தான்…! “அவர் இனி நமது வழியில் வரமாட்டார்… நமக்கு இடைஞ்சல் தரமாட்டார்” என்று எண்ணித்தான் செய்கின்றோம்.

இப்படி மற்றவருக்குத் தீமைகள் செய்து அவரைக் கெடுக்க வேண்டும் என்ற உணர்வுகளை எடுக்கும் பொழுது அதனின் உணர்ச்சிகள் நம்மையும் கெடுக்கும் நிலைக்கு போகின்றது.

பிறரைக் கெடுக்கும் நிலைக்குப் போகும் பொழுது நம்மை நாம் கெடுத்துக் கொள்ளும் நிலைதான் வருகின்றதே தவிர நம்மை நாம் காக்கும் நிலை இல்லை.

இது தான் சிவ தனுசு.

நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை தாக்கும் நிலை வருகின்றது. நம்முள் இருள் சூழும் நிலையே வருகின்றது. இதிலிருந்து நாம் மீள வேண்டுமல்லவா?

“ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் எடுத்து நம் உடலுக்குள் செலுத்தி அதனின் உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது இது விஷ்ணு தனுசு.

உயிர் வழியாக விஷ்ணு தனுசு என்ற உணர்வுகள் ஊட்டப்படும் பொழுது இது விஷத்தின் தன்மையை முறிக்கின்றது.

இதைத்தான் இராமாயணத்தில் “இராமன் வாலியை மறைந்திருந்து தாக்கினார்…!” என்று உரைக்கப்பட்டிருக்கும்.

வாலி யார் என்றால் சூரியனின் பிள்ளை,

உதாரணமாக நம் வியாபாரம் சரியாக நடைபெறவில்லை என்றால் வேதனையாகின்றது. வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வந்தபின் வாலியாகின்றது.

ஏனென்றால் வேதனை வந்துவிட்டால் நம்மிடத்திலுள்ள நல்ல குணங்களைச் செயலாக்க முடிகின்றதா? இல்லை.

ஒருவர் வேதனையான உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அதனைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றன. ஆகவேதான் வாலியை சூரியனின் பிள்ளை என்கிறோம்.

அவருடைய வேதனைப்படும் உணர்வுகளை நாம் உற்றுப் பார்த்து நுகரப்படும் பொழுது அந்த வேதனையின் உணர்வுகள் நமக்குள் வரும் போது வாலியாகின்றது.

வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் சென்று விட்டால் இரண்யன் ஆகின்றது. அது நம்மிடத்திலுள்ள நல்ல குணங்களைக் கொல்கின்றது என்று தெளிவாகக் காண்பிக்கின்றனர்.

இராமாயணத்தில் குகைக்குள் இருக்கும் வாலி வெளியே வராதபடி மேலே இருக்கும் பாறையைக் கீழே தள்ளி மூடிவிடுகின்றனர். அதனால் வாலி வெளியில் வரமுடியவில்லை என்று எடுத்துரைக்கின்றனர்.

வேதனையின் உணர்வைப் பார்க்கும் பொழுது “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணிக் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தும்போது
3.தீமை என்ற வாலியை இங்கே அடைத்துவிடுகின்றோம்
4.உள்ளே புகாது அதாவது புருவ மத்தியைத் தாண்டி உள்ளே செல்லாது தடுத்து விடுகிறோம் என்ற நிலையைத்தான்
5.இராமாயணக் காவியத்தில் தெளிவுப்படுத்தினார்கள்.

அதே சமயம் வாலி எவரைப் பார்த்தாலும் சம வலுவைப் பெறுவார் என்றும் ஆனால் சுக்ரீவன் எல்லோருக்கும் உதவி செய்யும் பண்பு கொண்டவர் என்றும் காவியம் தெளிவாகக் கூறுகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து இப்புவியில் படரச் செய்கின்றது. இது யார்…? சுக்ரீவன். சுக்ரீவனும் சூரியனின் பிள்ளை தான்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வரப்படும் பொழுது இதை நாம் நுகர்ந்தால்
1.நம்மிடம் உள்ள பிடிவாதமான நிலைகள்
2.தவறான நிலைகள் நம்மிடம் செயல்படுவதை நமக்கு உணர்த்தி
3.இது தப்பு… இது குற்றம்…! இதிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்ச்சிகளை ஊட்டி நம்மை நல்வழியில் அழைத்துச் செல்லும்.

சூரியனின் புத்திரன் சுக்ரீவன் என்பது எல்லாவற்றையும் கவர்ந்து யார் எதை எண்ணுகின்றனரோ அவர்களுக்கெல்லாம் அதன் நிலையில் உதவும் பண்பு கொண்டது.

ஆகவே நாம் நம்முள் துருவ நட்சத்திரத்தின் அருளுணர்வை இணைத்துத் தீமைகளை அகற்றி உயிர் என்ற ஒளியின் தன்மையை என்றுமே ஒளியாக வைத்திருக்கும் “விஷ்ணு தனுசு” எனும் நிலையை பெறுவோம்.

Leave a Reply