உங்கள் உயிரான ஈசனுக்கு யாம் (ஞானகுரு) செய்யும் சேவை எப்படிப்பட்டது…?

Om eswara gurudeva

உங்கள் உயிரான ஈசனுக்கு யாம் (ஞானகுரு) செய்யும் சேவை எப்படிப்பட்டது…?

 

மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துப் பழகுங்கள்… உங்கள் கஷ்டம் எல்லாம் போகும்…! என்று யாம் (ஞானகுரு) சொல்கின்றோம். கஷ்டத்தை நீக்கும் வழி முறைகளையும் ஆற்றல்களையும் கொடுக்கின்றோம்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அடுத்தாற்போல் என்ன சொல்கிறார்கள்…?

அதை ஏன் கேட்கின்றீர்கள்…? என் பையன் எதிர்த்துக் கொண்டே இருக்கின்றான். எப்போது பார்த்தாலும் இப்படி இருக்கின்றான். பக்கத்து வீட்டுக்காரன் இடைஞ்சல் செய்கின்றான். நான் கொடுத்த கடன் பாக்கி பணம் வரவில்லை என்று இப்படியே சொல்கின்றார்கள்.

பையன் நல்லவனாக வேண்டும். கடன் பாக்கி பணம் திரும்ப வர வேண்டும் என்று “இப்படிக் கேளுங்கள்” என்று சொன்னாலும் அதற்குத் தானே வந்தேன் என்பார்கள்.

அப்பறம் திருப்பி இரண்டாவது தரம் மறுபடியும் அந்தக் கஷ்டத்தையே சொல்வார்கள்.

யாம் எத்தனை தரம் ஞானிகளின் உணர்வை இணைத்து நல்ல வாக்காகக் கொடுத்தாலும்
1.என் கஷ்டம் எல்லாம் அப்படியேதான் இருக்கிறது என்று
2.நான் சொன்ன நல்லதைத் திருப்பி என்னிடமே விட்டு விட்டு
3.மீண்டும் கஷ்டத்தை எடுத்துக் கொண்டு போகிறார்கள்.

துன்பங்களைப் போக்கும் நல்ல வாக்கை என்னிடமே விட்டு விட்டு கஷ்டத்தைச் சொல்லிக் கஷ்டத்தைத் தான் எடுத்துக் கொண்டு போகின்றார்கள்.

ஏனென்றால் அது அவருடைய குறை இல்லை. காரணம் சாப அலைகளே இதற்கு மூலமாகிவிட்டது.

ஒரு வீட்டில் ஒரு பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்றால் உங்கள் மனது எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறது…!

உங்கள் நண்பருக்கு அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஒன்றைச் செய்து கொடுத்து அது சரியான நிலையில் வரவில்லை… அவர் சரியாகச் செய்யவில்லை… உங்கள் மனம் எப்படிப் புண்படுகிறது…?

“நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்” என்று நான் பல ஆயிரம் பேரிடம் சொல்கிறோம். அப்படி நான் கொடுக்கும் நல்ல வாக்குகளைச் சரி வரப் பயன்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்?

ஏனென்றால் குருநாதர் எத்தனையோ ஆபத்தான நிலைகளில் எம்மைச் சிக்க வைத்து அந்த உணர்வின் எண்ணங்கள் உனக்குள் எப்படி இயங்குகின்றது என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ளச் செய்தார்.

அதே சமயத்தில் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அது எப்படி இயக்குகின்றது என்று மூன்று இலட்சம் பேரைக் காண்பித்தார்.

அவர்கள் ஆரம்பத்தில் நன்றாக இருப்பதும் பின்னாடி நல்லதை இயக்க முடியாமல் எந்த நிலையில் அல்லல்படுகிறார்கள் என்று காட்டி
1.இப்படிப்பட்ட மாய வாழ்வாக இருக்கின்றது…,
2.இதில் நீ எதைக் காணப் போகின்றாய்…?
3. நம்முடைய கடைசி எல்லை எது? என்று வினா எழுப்புகின்றார்.

என்றும் நிலையான நிலைகள் கொண்டு அழியாமல் இருப்பவர்கள் மகரிஷிகள்.
1.ஒளிச் சரீரம் பெற்ற அந்த மகரிஷிகளினுடைய அருள் சக்தியை எடுத்து
2.நாம் அவர்களைப் பின்பற்றி
3.அவர்களுடன் தான் நாம் ஐக்கியமாக வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர்.

“எல்லோரும் நல்லவரே” ஆனாலும் ஒவ்வொரு மனிதரும் சந்தர்ப்ப பேதத்தால் குடும்பத்தில்கள் சிக்கல்களாகி பல இன்னல் படுகின்றார்கள்.

அந்தத் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்று நல்ல வாக்கைப் பதிவு செய்தாலும் ஒரு நூறு பேர் வருகின்றனர் என்றால் அதில் இரண்டு பேர் தப்புவது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.

எம்மிடம் நல்ல வாக்கை வாங்கிய பின் அடுத்தவர் கூப்பிட்டு சாமி (ஞானகுரு) உங்களுக்கு என்ன சொன்னார்…? என்று கேட்டால்
1.நன்றாக இருப்பாய் என்று தான் சாமி சொல்கின்றார்.
2.என் கஷ்டத்தைப் பார்த்தால் பெரிய தொல்லையாக இருக்கின்றது என்கிறார்கள்.
3.சாமி நல்ல வாக்கு கொடுக்கின்றார் – வாஸ்தவம் தான்.
4.ஆனால் என் காலம் நல்லதை எங்கே ஒட்டி வருகின்றது…? என்று
4.கொடுத்த வாக்கை நினைவில் வைக்காதபடி இப்படிச் செய்து விடுகின்றார்கள்.

சாமி கொடுத்த அருள் வாக்கினால் நான் நன்றாக இருக்க வேண்டும். என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். நான் பார்க்கின்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படிச் சொல்கிறார்களா…? என்றால் இல்லை.

குருநாதர் காட்டிய வழியில் துன்பத்தை நீக்கும் அந்த அருள் ஞான விதையை முளைக்க வைத்து விளையச் செய்து மறுபடியும் பல வித்துகளாக உருவாக்கி ஒவ்வொருவருக்கும் குடும்ப வாழ்க்கையில் வந்த இன்னலைப் போக்குவதற்குகாக வேண்டி பதியச் செய்கின்றோம்.
1.நான் அதை முளைக்க வைக்க
2.அந்த வித்தை உருவாக்குவதற்கு “என்ன பாடுபட்டேன்…!” என்று எனக்குத்தான் தெரியும்.

நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் அந்த நல்ல வித்தை ஊன்றுகின்றோம்.
1.அதை முளைக்க வைக்காமல் விட்டால் என்ன செய்யும்?
2.இங்கேயே உதறிவிட்டுப் போய்விடுகின்றார்கள்…!
3.அப்போது என் மனது எப்படி இருக்கும்…?

நாம் சொல்லி அது முளைக்க வைக்காமல் சிதறவிட்டார்கள் என்றால் அதைப் போக்குவதற்காக நான் கடுமையான தியானம் இருக்கின்றேன்.

உங்களை வளர்த்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு உயிரையும் நான் வேண்டுகின்றேன்.
1.இந்த உடல்களை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனே…!
2.ஒவ்வொருவருக்குள்ளும் அறியாமல் இயக்கிக் கொண்டிருக்கும் தீமைகள் அகல வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்
4.மகிழ்ச்சியான உணர்வுகள் அங்கே தோன்ற வேண்டும்
5.அந்த நிலையை நீ அவர்களுக்குக் கொடு என்று
6.உங்கள் உயிரை (ஈஸ்வரனை) வேண்டிச் சதா நான் தியானமிருக்கின்றேன்… தவமிருக்கின்றேன்…!

காரணம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் உங்கள் கஷ்டமான உணர்வுகளை நான் கேட்டறிந்தேன் என்றால் என் உயிர் சும்மா இருக்காது.
1.உங்கள் கஷ்டத்தின் பால் என் நினைவுகள் சென்றால்
2.அதை உயிர் அறியச் செய்து அணுவாக மாற்றி
3.என் உடலாகவே ஆக்கி விடுகின்றது.

ஏனென்றால் உயிரின் வேலை அதுவாக இருக்கின்றது.

ஆகவே ஆறாவது அறிவின் ஞானமாக சேனாதிபதி என்ற நிலையில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு வரும் தீமைகளை என்னால் அகற்ற முடிகின்றது. உங்களுக்கு மீண்டும் மீண்டும் அதை உபதேசிக்கவும் முடிகின்றது.

அதை போன்று நீங்களும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வாழ்க்கையில் எதைச் செய்தாலும் யாம் கொடுத்த ஞானிகளின் அருள் ஞான வித்தை உங்களுக்குள் விளைய வைக்க வேண்டும்.

நிச்சயம் அதனின் பலனைப் பெற முடியும்…!

Leave a Reply