22.10.2017 கருத்துப் பரிமாற்றம் – அகஸ்தியரை ஏன் “கூழையாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்…?”

22.10.2017 கருத்துப் பரிமாற்றம்

 

4.அகஸ்தியரை ஏன் “கூழையாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்…?”

 

பெரும்பகுதியானவர்கள் நல்லதை அடுத்தவர்களுக்குச் செய்வார்கள். செய்தாலும் அதனால் நன்மை பெறுபவர்கள் பதிலுக்கு ஏதாவது ஒன்றைச் சொன்னாலோ அல்லது செய்தாலோ நல்லது செய்தவர்கள் டென்சன் (TENSION) ஆகிவிடுவார்கள்.

 

அடுத்தவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் சரியான பக்குவம் இல்லாததால் அதே சமயத்தில் எதிர்ப்பதமாகச் சொன்னால் அன்றையே பொழுது

1.மனதே சரியில்லாமல் போய்விட்டது.

2.ஒன்றும் சரியில்லை எதுவுமே சரியில்லை என்று இப்படியே எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

 

தன் மனதைச் சமப்படுத்தவும் முடிவதில்லை. மற்றவர்களையும் நிறுத்த முடிவதில்லை. நல்லதைச் செய்யும் எண்ணத்தையே கேள்விக் குறியாக்கிக் கொள்வார்கள்.

 

நான் நல்லது செய்து நல்லது செய்து என்னத்தைக் கண்டேன்…! எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். நான் மட்டும் வேதனைப்பட்டுக் கொண்டுள்ளேன்.

 

பல தவறுகள் செய்து கொண்டிருப்பவன் கூட நன்றாக இருக்கின்றான். நல்லதே அவன் செய்வதில்லை.

 

ஆனால் எனக்குத் தவறு செய்யும் எண்ணமே இல்லை. எனக்கு இடைஞ்சல் செய்தால் அல்லது என்னை இப்படித் தவறாகச் சொன்னால் நான் அப்புறம் என்ன செய்வது என்று இப்படியே விஷம் குடித்தவன் போல் சுருண்டு சுருண்டு விழுவார்கள்.

 

அதற்குக் காரணம் என்ன? நல்லதைக் காப்பது எப்படி?

 

சாமிகள் அகஸ்தியனின் உருவத்தைப் பற்றி ஞானிகள் சொன்னதைத் தெளிவாக்கியுள்ளார்கள். அதாவது அகஸ்தியனைக் கூழையாகத்தான் ஞானிகள் உருவகப்படுத்தியுள்ளார்கள்.

 

1.அகஸ்தியன் தாயின் கருவில் பெற்ற ஆற்றல் மிக்க சக்தியால் 5 வயதிற்குள்ளேயே பிரபஞ்சத்தின் ஆற்றலை அறியத் தொடங்கினான். மகா சித்து பெற்றான். அகஸ்தியன் துருவத்தின் ஆற்றலை அறிந்து துருவன் ஆனான்.

 

தான் பெற்ற அந்த ஆற்றல்களைத் தன் இன மக்களுக்கும் பாய்ச்சினான்.

 

இதை உணர்த்தும் விதமாக சிறு வயதில் ஆற்றல்களைப் பெற்றதாலும் முதுமையானவர்கள் செய்யும் வேலைகளைச் செய்ததாலும் அகஸ்தியனுக்குப் பின் வந்த ஞானிகள் அகஸ்தியனைக் கூழையாகப் போட்டு தாடி மீசை வைத்துக் காட்டினார்கள்.

 

2.இன்று ஒரு மனிதனைப் பலசாலி பராக்கிரமம் பெற்றவன் என்றால் அவன் உடல் வலிமையை வைத்துத்தான் மதிப்பிடுகின்றோம்.

 

உருவத்தைப் பார்த்துத் தான் அன்றாட வாழ்க்கையில் எல்லாச் செயல்களையும் நாம் செய்து கொண்டிருக்கின்றோம். இவன் சின்னப்பயல் இவனுக்கு ஒன்றும் தெரியாது. இவன் பெரிய ஆள் இவனிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று இப்படித்தான் நம் சிந்தனைகளும் செல்கிறது.

 

ஒருவன் சின்னப் பயலாக இருக்கின்றான் என்றால் அவன் என்ன செய்கிறான்? அவன் என்னவெல்லாம் செய்வான்? அவனுடைய உண்மையான வலு என்ன என்பதை நாம் பெரும்பகுதி கண்டு கொள்வதில்லை.

 

காரணம் அவன் சின்னப்பயல் அவனால் என்னை ஒன்றும் செய்யவே முடியாது என்ற உணர்வு தான் காரணம். அதனால் அசட்டையாகவே தான் இருப்போம்.

 

இதுவே பெரிய ஆள் என்றால் ஒவ்வொரு அங்க அசைவையும் என்ன சொல்கிறார்? என்ன செய்கிறார்? என்ன சாப்பிடுகிறார்? எங்கே செல்கிறார்? எதற்காக இங்கே வந்தார்? நம்மை எதுவும் செய்துவிடுவாரா? நமக்கு இவரால் நன்மையா தீமையா?

 

நன்மை என்றால் இவரை எப்படிப் பயன்படுத்துவது? நம் காரியங்களை இவர் மூலம் எப்படிச் சாதிக்கலாம். இவரை நயந்து நாம் எப்படி நடந்து கொள்வது? இவரிடம் நாம் எப்படி நல்ல பேர் எடுப்பது? இவரைச் சமயத்திற்கு ஏமாற்றக் கூட முடியுமா? ஏமாந்துவிடுவாரா? அந்த விவரம் இருக்கின்றதா? என்று இப்படி ஆராய்வோம்.

 

கெட்டவனாக இருந்தால் இவனிடமிருந்து எப்படித் தப்புவது? அல்லது இவனை எப்படிச் சிக்க வைப்பது? இவனை எப்படி மாட்டி விடலாம்? இவனுக்கு நாம் என்னென்ன இடைஞ்சல் செய்யலாம்? யாரை வைத்து இவனைத் தட்டலாம்? யாரிடம் சொன்னால் இவன் அடங்குவான்? என்று இப்படி ஆராய்வோம்.

 

இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் தெரியாதது ஒன்றும் இல்லை. ஆக மொத்தம் பெரிய ஆள் என்று பேர் எடுத்தால் நல்லது செய்தாலும் அதிக அளவில் சிக்கல் வரும். கெட்டது செய்தாலும் அதிக அளவில் சிக்கல்கள் வரும்.

 

சுருக்கமாகச் சொன்னால் அதிக அளவில் எதிரிகளைச் சம்பாரிக்க வேண்டியது வரும். இது தான் உண்மை.

 

நாம் நல்லதைச் செய்யும் போது அது மற்றவர்கள் அறியாதபடி செய்தால் தான் நமக்கு மிகவும் பாதுகாப்பு.

 

அந்தப் பாதுகாப்புக்காகத்தான் ஈஸ்வராய குருதேவர் பைத்தியக்காரராக இருந்தார். ஞானகுரு வெள்ளை வேஷ்டியும் ஒரு ஜிப்பாவையும் போட்டு எளிமையாக (கிராமத்துக்காரர் போல்) இருந்தார்கள்.

 

ஒன்றுமே அவர்களுக்குத் தெரியாது. மற்றவர்களிடம் கேட்டுக் கேட்டுத்தான் அவர் செய்தார். நான் சொல்லித்தான் சாமிக்கே தெரிந்தது. நான் சொல்லவில்லை என்றால் சாமி அதைச் செய்திருக்கவே மாட்டார் என்று அன்றும் சொன்னார்கள். இன்றும் சொல்லிக் கொண்டுள்ளார்கள்.

 

காரணம் என்ன என்றால் தனக்குத் தெரிந்ததை அவர்கள் தெரிந்ததாகவே சிறிதளவு கூடக் காட்ட மாட்டார்கள்.

 

மீறிக் காட்டினால் (1)யாரும் அருகில் வரப் பயப்படுவார்கள். (2)ஞானிகளின் காரியங்களுக்கு (மனிதர்களின் காரியங்களுக்கு அல்ல) இடைஞ்சலாக இருப்பார்கள் என்று ஞானிகளுக்குத் தெரியும்.

 

உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்களிடம் தான் நான் வரம் கேட்கிறேன் என்று கோடித் தடவை சாமிகள் சொல்கிறார். எதற்காக?

 

சக்தி பெற்றவருக்கு நம்மிடம் வரம் எதற்கு? இதையெல்லாம் நாம் சிந்திப்பதில்லை. ஒரே வரியில் எல்லாம் அவருக்குத் தெரியும் என்று நிறுத்திக் கொள்வோம்.

 

ஞானியர்கள் தன் காரியம் எதுவோ அதை எப்படிச் சாதிப்பது. காரியத்தில் எப்படிச் சித்தி அடைவது என்பதிலே தான் அவர்களுக்குக் குறிக்கோள். அதனால் தான் அதைச் “சித்தாந்தம் – சித்தி” என்று சொல்வது.

 

அணுவின் ஆற்றலை அறிந்தவன் அகஸ்தியன். அகண்ட அண்டத்தையும் அறிந்தவன் அகஸ்தியன். மின்னலின் ஒளிக்கற்றைக்குள் நுண்ணிய நிலைகளை ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல் பெற்றவன் அகஸ்தியன். பல கோடி மின்னல்களின் ஆற்றல்களையும் சேர்த்து 27 நட்சத்திரத்தின் ஆற்றலையும் சேர்த்து இன்று பேரொளியாக துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளான்.

 

மற்றவர்களும் தன்னைப் போல் ஆகவேண்டும் என்று தன் இன மக்கள் அதைப் பெறவேண்டும் என்பதே அவனுடைய ஆசை. அரச மரத்தின் விதை எவ்வளவு பெரிது? ஆல மரத்தின் விதை எவ்வளவு பெரிது.

 

அரச மரம் பெரிதாக இருந்தாலும் அதன் விழுதுகள் அண்டத்திலிருந்து நீர் சக்தியைக் கவர்ந்தாலும் அதன் விதை என்னவோ மிக மிகச் சிறிது தான்.

 

1.அத்தகைய நிலையைக் காட்டுவதற்குத்தான்

2.அத்தகைய பேராற்றல்கள் பெற்றவன் என்பதைக் காட்டுவதற்குத்தான்

3.அத்தகையை சக்தியைப் பெற்று சாதாரண மனிதனும் அகஸ்தியன் கண்ட பிரம்மாண்டத்தைக் காண முடியும் என்பதைக் காட்டுவதற்குத்தான்

4.அத்தகைய சக்திகளை அந்த மெய்யை முழுமையாகப் பெற்ற அறிந்த அகஸ்தியனுக்குப் பின் வந்த மெய்ஞானிகள் அவனைக் கூழையாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

 

அவ்வளவு பிரம்மாண்ட சக்தி கொண்ட அகஸ்தியன் தன் உருவத்தை எளிமையாகக் காட்டும் பொழுது நாம் இன்றிருக்கும் நிலையில் நமக்கு என்ன இமேஜ் (IMAGE) வேண்டிக் கிடக்கின்றது.

 

நான் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் உயரவே முடியாது. நல்லதையும் பெறவே முடியாது. நான் உயர்ந்தவன் நான் நல்லவன் என்று எண்ணினாலும் உயர முடியாது.

 

நம்மிடம் வந்து மோதுவது எதுவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் நாம் (மறைமுகமாக) உயர்ந்த சக்திகளை எடுத்து அதை அவர் பால் பாய்ச்சும் பொழுது தான் அந்த உயர்வை (மறைமுகமாக) அவருக்குக் கொடுக்கும் பொழுது தான் நாம் நல்லதையும் பெற முடியும் உயரவும் முடியும்.

 

அப்படி உயர்ந்தால் நாம் உயர்வதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.

 

1.யாரும் தடுக்க முடியாத அந்த நிலை பெற்றவன் தான்

2.தன் உருவத்தைக் கூழையாகக் காட்டி

3.நீயும் என்னைப் போல் வா என்று

4.பின் வந்த ஞானிகள் மூலம் காட்டுகின்றான் – அந்த அகஸ்தியன்.

 

அவன் அருளைப் பெறுவோம். அவன் வழியைப் பின்பற்றுவோம். உலகுக்கு எடுத்துக் காட்டாக வளர்வோம்.

 

1.அகஸ்தியனுடன் இணைந்து

2.அகஸ்தியனாகி

3.பல கோடி அகஸ்தியர்களை உருவாக்குவோம்.

Leave a Reply