எமலோகத்தை உருவாக்குவதும் சொர்க்கலோகத்தை உருவாக்குவதும் “நம் எண்ணத்தினால் தான்…”

Two gates to heaven and hell. Choice concept.

எமலோகத்தை உருவாக்குவதும் சொர்க்கலோகத்தை உருவாக்குவதும் “நம் எண்ணத்தினால் தான்…”

 

உதாரணமாக ஒருவர் தன் வாழ்க்கையில் வேதனை தாளாது நெருப்பை விட்டு எரித்துக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். எரிச்சல் தாங்காத நிலையில் உயிர் பிரிகின்றது.

 

அதே சமயத்தில் ஒருவர் ஒருவருக்குத் துன்பத்தை உருவாக்குவார். அதனால் துன்பப்படுபவரோ தன் குடும்பத்தில் எரிச்சலான நிலைகள் கொண்டு துடி துடிப்பார்.

1.“இப்படிச் செய்கிறார்களே… பாவிகள்” என்று எரிந்து விழுந்து

2.அவர்கள் உருப்படுவார்களா…! என்ற ஏக்கத்தில் பேசினால் போதும்.

 

இந்த எரிச்சலின் நிலைகள் கொண்டு ஏங்கப்படும் பொழுது தீயை வைத்து எரித்து இறந்து போன அந்த உயிரான்மா இவர் ஏக்கத்தில் இவருக்குள் வந்துவிடுகின்றது.

 

முதலில் தன்னைத் தான் எரித்துக் கொண்டது அந்த ஆன்மா.

 

இந்த உணர்வின் தன்மையை அடுத்தவர்கள் எண்ணும் பொழுது அந்த ஆன்மா இந்த உடலுக்குள் வந்துவிடுகின்றது. வந்தவுடன் இவர்கள் என்ன சொல்வார்கள்?

 

“ஐய்யய்யோ… எரிகிறதே…எரிகிறதே…” என்பார்கள். டாக்டரிடம் சென்று பரீட்சித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது.

1.இரத்தத்தில் சுழலும் இந்த ஆன்மாவை

2.அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

 

ஆனால் இவர்கள் “எனக்கு எரிகிறது… இங்கே எரிகிறது… அங்கே எரிகிறது…” என்று சொல்வார்கள். அந்த உயிரான்மா இந்த உடலுக்குள் வந்தவுடன் எரிச்சலையூட்டி அதே எரிச்சலான நிலைகளை அங்கே செயல்படுத்துகின்றது.

 

நாம் எடுத்துக் கொண்ட எண்ணம் எமனாகும் பொழுது எமன் என்ன செய்கின்றான்? அங்கே “தீச்சட்டிக்குள் போட்டு வாட்டுகின்றான்…” என்று காட்டுகிறார்கள்.

 

தீச்சட்டிக்குள் போட்டு எரிச்சலாகும் பொழுது  “ஐயோ அப்பா…!” என்றால் முடிகிறதா…? இந்த உடலில் எரிச்சலை எடுத்து “இப்படிப் பேசினார்களே…” என்று எரிந்து எடுத்துக் கொள்ளக்கூடிய எண்ணம் இங்கே எமனாக வருகின்றது.

 

இந்த உணர்வுகள் வந்தவுடன் சீக்கிரம் விளைந்து விடுகின்றது.

 

சித்திரபுத்திரன் என்ன செய்கின்றான்? கணக்குப் பிரகாரம் “நீ முடித்துக் கொள்…” என்று எமனிடம் ஒப்படைத்துவிடுகின்றான்.

 

சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான். நம்முடைய எண்ணம் தான் நம் அடுத்த உடலைச் சிருஷ்டிகின்றது.

 

நாம் எந்தெந்த குணத்தை எடுத்தோமோ அதற்குத் தகுந்த உடலைப் பெற்றுவிடுகின்றோம். மனித உடலோ அல்லது வெறொரு உடலோ பெறுகின்றோம்.

 

“என்ன வாழ்க்கை…!” என்று எண்ணித் தற்கொலை செய்து தன்னை எரித்து மாய்த்துக் கொண்டாலும் இன்னொரு உடலுக்குள் சென்று அங்கேயும் “எரிகிறதே…எரிகிறதே…” என்று எரியச் செய்யத்தான் முடியும்.

 

பின் அந்த உடலையும் மாய்த்து அடுத்து எரிச்சல் உணர்வு கொண்ட ஒரு மிருகமாகவோ எரிப்பூச்சியாகவோ பிறக்கும்.

1.அதை யார் தொட்டாலும் எரிச்சலாகும்.

2.ஆக மொத்தம் எல்லாவற்றையும் எரிக்கும் நிலைகள் தான் வருகின்றது.

 

இது தான் சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்பது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

 

இயற்கையின் உண்மை நிலைகள் அனைத்தும் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் தெளிவாக உள்ளது. இன்று அதையெல்லாம் சாங்கியமாக சாங்கிய சாஸ்திரமாக மாற்றிவிட்டு அதிலுள்ள மூலங்களை அறியாது வாழ்கின்றோம்.

 

நாம் எடுத்துக் கொள்ளும் எண்ணத்திற்குத் தக்கவாறு தான் எமனாவதும் சொர்க்கலோகமாவதும்.

Leave a Reply