எண்ணங்களும் உணர்ச்சிகளும் நமக்குள் எப்படி இயங்குகின்றது? அதனுடைய விளைவுகள் என்ன? என்பதைக் காட்டுகிறது “இராமாயணம்”

Ramayanam

எண்ணங்களும் உணர்ச்சிகளும் நமக்குள் எப்படி இயங்குகின்றது? அதனுடைய விளைவுகள் என்ன? என்பதைக் காட்டுகிறது “இராமாயணம்”

 

மனிதராக உள்ள நாம் இந்த வாழ்க்கையில் கோபமான உணர்வுகளையே நம்முள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டிருப்போம் என்றால் நமது அடுத்த சரீரம் புலியின் ரூபமாகத்தான் அமையும் என்பதை இராமாயணத்தில் காண்பித்தார்கள்.

 

அதாவது இராவணன் தான் மூன்று லோகத்தையும் அடக்கவேண்டும், தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று அதற்கான ஆற்றலைப் பெறுவதற்காக வேண்டி விஷ்ணுவை நோக்கிக் கடுந்தவம் இருந்தான் என்று இராமாயணக் காவியம் கூறுகின்றது.

 

இந்திரலோகம் என்பது இன்பம் நிறைந்ததாக இருக்கும் லோகம். ஆனால் இராவணன் அரக்கத்தன்மை கொண்டு தான் அனைத்தையும் அடக்கவேண்டும் என்று இந்த உயிரை வைத்துத்தான் எண்ணுகின்றான்.

 

விஷ்ணுவை நோக்கி இராவணன் தவம் இருந்தான் என்றார்கள். விஷ்ணு என்பது யார்? விஷ்ணு என்பது நமது உயிர்.

 

இந்த உடலில் அனைத்தையும் மகிழ்ச்சியாக இருக்கச் செய்வது ஆறாவது அறிவு. இதனைத்தான் கன்னியர்கள் இந்திரலோகத்தை மகிழ்ச்சி நிறைந்திருக்கும்படி வைத்திருந்தார்கள் என்றனர் ஞானிகள்.

 

மகிழ்ச்சி நிறைந்திருக்கும் இந்திரலோகத்தை அடக்கவேண்டும், தனக்குக் கீழ் கொண்டு வரவேண்டும் என்று எண்ணிய இராவணன் கடுந்தவம் மேற்கொண்டான் என்றும் தனக்குக் கீழ்படியாதவர்களைக் கொல்லவேண்டும் என்றும் எண்ணினான் என்று காவியத்தில் கூறினார்கள்.

 

1.நாம் பிறிதொருவரிடம் உள்ள தீய குணங்கள் அகல வேண்டும் என்று எண்ணினால் நல்லது.

2.ஆனால் தீய குணம் கொண்டவர்களை அழித்துவிட வேண்டும் என்று எண்ணினால்

3.நமக்குள் கொல்லும் உணர்வுகள்தான் விளையும்.

 

இதைத்தான் இராமாயணத்தில் தசரதச் சக்கரவர்த்தி

1.பத்தாவது நிலையை அடையக் கூடிய உயிரும்

2.உயிரால் நுகரப்பட்ட உணர்வுக்கொப்ப உடலும்

3.உடலின் தன்மை பெற்றபின் உடலை வளர்க்க உணர்வுகள் என்ன செய்கின்றது என்றும்

4.நல்ல நிலைகள் பெறவேண்டும் என்ற எண்ணத்தால் வளர்ந்த இராமனும்

5.இராமனிடத்தில் நன்மையை நாடும் உணர்வுகள் எப்படி இயங்குகின்றதென்ற நிலையை ஞானிகள் காட்டியுள்ளனர்,

 

அதே சமயத்தில் இராவணனிடத்தில் அசுர குணங்கள் எப்படி இயங்குகிறது என்பதையும் மனிதர்கள் பத்தாவது நிலையை அடைவதற்குத் தடைகள் எப்படி வருகின்றது என்பதையும் இராமாயணத்தில் தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

 

இராவணன் பிரம்மாவை நோக்கித் தவம் இருந்தான். பிரம்மாவும் இராவணனுக்கு வரம் கொடுத்தார்.

 

பிரம்மா விஷ்ணுவின் மகனல்லவா. ஆகவே பிரம்மாவும், இராவணனின் தவத்திற்கேற்ப… “நீ அனுபவி…” என்று வரம் கொடுத்துவிடுகின்றார்.

 

இராவணனும் தன் தவத்திற்கேற்ப இந்திரலோகத்தைக் கைவல்யப்படுத்தினான்.

 

உதாரணமாக நாம் பிறிதொருவரைக் “கொல்ல வேண்டும், கொல்ல வேண்டும்”என்று எண்ணினால் இந்த உணர்வின் தன்மையை உயிரான ஈசன் நமக்குள் இந்திரலோகமாக மாற்றி விடுகின்றது.

 

1.“கொல்ல வேண்டும்”என்ற உணர்வு நமக்குள் வந்தவுடனே என்னவாகிறதென்றால்

2.இந்திரலோகத்தில் கொல்லக்கூடிய உணர்வின் தன்மை கொண்டு அணுவாக மாறுகின்றது – இது பிரம்மா.

3.கொல்லக்கூடிய உணர்வின் தன்மை கொண்டு விளைந்த அணு

4.நம்முள் தீமைகளை வளர்த்திடும் சக்தி பெறுகின்றது.

 

நாம் மனிதராக இருக்கக்கூடிய நிலைகளில் மனிதராக உருவாக்கிய நல்ல குணங்களை மாற்றும் தன்மை வந்து எமலோகமாக மாறுகின்ற பொழுது மனிதர்கள் என்ன செய்கின்றனரென்றால் சீதா எனும் மகிழ்வான உணர்வைச் சிறைப்பிடித்து விடுகின்றனர்.

 

அதாவது மகிழ்ச்சியான உணர்வு வெளியே வராதபடி அடக்கப்படுகின்றது. இதை மாற்ற வேண்டுமல்லவா? அதைத் தான் இராமாயணத்தில்

1.உயிரின் இயக்கத்தையும்

2.உடலின் ஆக்கத்தையும்

3.பின் விளைவுகள் என்ன? என்பதையும் தெளிவுபட எழுதினார்கள்.

 

“சீதாராமா”எனும் பொழுது எந்த குணத்தின் சத்தை எடுக்கின்றோமோ அதன் உணர்ச்சியின் எண்ணங்களை இயக்கும், அதனின் உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டும். உணர்வுக்கொப்ப உடலின் அமைப்பு வரும் என்னும் நிலையைத் தெளிவாக இராமாயணத்தில் கொடுத்துள்ளார்கள்.

 

ஆகவே நாம் தீமையான நிலைகளைக் காணும் பொழுது அதிலிருந்து மீண்டிடும் நிலையாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்திடல் வேண்டும். நமது உயிரை ஈசன் என்று மதித்திடல் வேண்டும்.

 

ஈசன் வீற்றிருக்கும் இந்த உடலை ஆலயமாக மதித்துத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இந்த உடல் முழுவதும் படரச் செய்து பரிசுத்தமாக்க வேண்டும்.

 

நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களைக் காத்திடல் வேண்டும் என்பதைத்தான் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றன.

 

இராமாயணம் நமக்குக் கிடைத்த அரும்பெரும் பொக்கிஷம்.  யாம் இப்பொழுது உரைத்ததன் தொடர் கொண்டு இராமாயணத்தை நீங்கள் அனைவரும் படிப்பீர்களென்றால் இராமாயணக் காவியத்தின் அர்த்தங்களைத் தெளிவாக அறியமுடியும்.

 

அதன் வழியில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் சர்வ தீமைகளிலிருந்து விடுபடும் அருள் சக்தி நீங்கள் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திடுங்கள்.

Leave a Reply