இன்று பெண்கள் அதிக அளவில் துன்புறுத்தப்படுவதால்… “சாப அலைகளாகி” உலகில் பெரும் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றது

Adhi sakthi - earth change

இன்று பெண்கள் அதிக அளவில் துன்புறுத்தப்படுவதால்… “சாப அலைகளாகி” உலகில் பெரும் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றது

மிருகங்களில் ஆண் பெண் என்ற நிலை இருக்கப்படும் பொழுது, ஆணுக்கு ஆணே போர் செய்கின்றன. பெண் மிருகங்களைப் போரில் இணைப்பதில்லை.

மிருகங்களில் ஆணுக்கு ஆண்தான் மோதுகின்றதே தவிர பெண் பாலை அரவணைத்தே செல்கின்றது. ஆனால் மனிதர்களாக இருக்கும் நாம் பெண்களைத் துன்புறுத்தும் நிலையே இன்று இருக்கின்றது.

1.பெண்களைத் துன்புறுத்தும் நிலையில் வேதனை என்ற உணர்வுகள் கலந்தால்
2.ஆண் பெண் என்று இருவருடைய உணர்வுகளிலும்
3.வேதனை என்ற விஷத்தின் தன்மை கலக்கின்றது என்பதை உணர்வதில்லை.

காரணம் பெண்பாலில் உருவாகும் வேதனை என்ற விஷத்தின் தன்மையினை ஆண்பால் நுகர நேர்ந்தால் வெறுப்பாகவோ வேதனையாகவோ இருந்து அதனின் விஷத்தன்மை அதிகரித்து அங்கே படர்கின்றது.

பெண்பால் வேதனை என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது கேட்போர் மற்றும் வேடிக்கை பார்ப்போரின் உணர்வுகளிலும்கூட அது பதிவாகின்றது.

ஆகவே பெண்களைத் துன்புறுத்தும் நிலையினை விடுத்துப் பழகவேண்டும். ஏனென்றால் பெண்பால் எத்தகைய துன்பங்களை அனுபவிக்கின்றதோ அதன் உணர்வின் தன்மையினை வெளிப்படுத்தும் பொழுது இந்த வேதனையின் உணர்வுகள் “புவியின் காற்றில்” பரவுகின்றது.

பெண்களைத்  துன்புறுத்தும் உணர்வுகள் அதிகரித்தால் ஆண்களும் நரகவேதனை என்ற நிலைகளை அனுபவிக்க நேரும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவர்கள் விடும் மூச்சலைகளெல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் படர்கின்றன.

1.சோகமும் வேதனையும் கொண்ட இத்தகைய உணர்வுகள் காற்றில் படரும்பொழுது
2.நம் பூமியின் நிலைகளில் மாற்றங்களே ஏற்படும்.
3.இங்கு மட்டுமல்ல உலகெங்கிலுமே பெண் இனத்தைத் துன்புறுத்தும் நிலை இருக்கின்றது.

மற்ற உயிரினங்களில் பெண்பாலை அரவணைத்துச் செல்லும் தன்மை இருக்கின்றது. அதனில் அன்பு கலந்த சந்தோஷமும் பெறுகின்றன.

மனிதனானபின் பெண்களைத் துன்புறுத்தும் நிலை அதிகரிக்கும் பொழுது இதனின் உணர்வுகள் நமது உடலில் மட்டுமல்ல வேடிக்கை பார்ப்போரின் உடல்களிலும் கூட வேதனையும் சோகமும் உருவாக்கப்படுகின்றது.

ஆகையால் இணைத்துக் கொண்ட உணர்வின் தன்மைக்கேற்ப இப்படி மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாதபடி புவியின் காற்று மண்டலத்திலும் கலந்திருக்கும் நிலையில் இதனைச் “சாப அலைகள்” என்று சொல்வார்கள்.

துன்புறுத்தும் உணர்வுகளும் சரி வேடிக்கை பார்க்கும் உணர்வுகளும் சரி இன்று மனிதருக்குள் தீய உணர்வின் தன்மை அதிகரிக்கும் நிலைகளில் மனிதர்களிடையே “ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும் நிலையே” வருகின்றது.

இவைகள் அனைத்தையும் நாம் சிந்தித்து
1.பெண்பால் என்ற உணர்வினை அரவணைத்து அன்பு கலந்த உணர்வினைச் சேர்த்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி இருளை அகற்றி
3.நம்மையும் நம் நாட்டு மக்களையும் இனிப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையச்  செய்வோம்.

இன்று விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. இரும்பு உலோகத்தில் தென் துருவம் வட துருவம் என்பது.

வட துருவத்தில் இருக்கக் கூடிய காந்தப்புலன் ஈர்க்கும் சக்தி பெற்றது, தென் துருவத்தில் இருக்கக்கூடிய காந்தப்புலன் ஒதுக்கும் சக்தி பெற்றது.

சூரியனின் நிலைகள் வரப்படும் பொழுது இதனுடைய அளவுகோல்படி மிதக்கும் தன்மை வருகின்றது. இன்று காந்தத்தின் துருவங்கள் ஒன்றைக் கண்டு ஒன்று அழுத்தங்களாக இருக்கின்றன.

ஒரு காந்தப்புலனுக்குள் மறைந்துள்ள இத்தகைய ஆற்றலை மனிதர்கள் கண்டுணர்ந்து அதற்குத் தக்க எந்திரங்களை உருவாக்குகின்றனர்.

நமது பூமி மற்ற பொருள் தனக்குக் கிடைக்கும் நிலையில் தன் வெப்பத்தின் துணை கொண்டு அதனைத் தன்னில் இணைத்து வாழும் தன்மை கொண்டுள்ளது.

ஆண் பெண் என்ற நிலைகளில் பெண்களும் ஆண்களை மதித்து அவர் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கங்களைக் கொண்டால் ஆண்கள் உயரந்த நிலைகள் பெறுகின்றனர், தொழில் வளம் பெறுகின்றனர், “குடும்பத்தில் மகிழ்ச்சி” என்ற நிலை உருவாகின்றது.

மகரிஷிகள் என்பவர்கள் தாங்கள் காட்டிற்குள் வசித்தாலும் கணவனும் மனைவியுமாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து உணர்வின் சக்தியினை வளர்த்தனர்.  அதன் தொடர் கொண்டே நமக்குக் காவியத் தொகுப்புகள் கிடைத்தன.

ஆனால் பிற்காலத்தவர்களோ இந்தக் காவியத் தொகுப்புகளை அவரவர் நலங்களுக்கேற்ப மாற்றியமைத்து உண்மைகளை மறைத்துவிட்டனர்.

இதன் நிலையாக இன்று மனித இனமே அழிந்து போகும் நிலைக்குப் பிரபஞ்சம் முழுவதும் விஷத் தன்மை கொண்டதாக மாறிவிட்டது. தான் சுகமாக வாழவேண்டும் என்ற உணர்வின் அறிவுகள் வளர்ந்து விட்டது.

தீமைகளை அடக்கி உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற இந்த மனிதச் சரீரத்தில் நாட்டாசையும், உடலாசையும், பொன்னாசையும், பெண்ணாசையும் கொண்ட உணர்வின் தன்மையை வளர்த்து மனித குலத்தைச் சீர்குலைத்து அழிக்கச் செய்யும் நிலைகளையே வளர்த்துள்ளனர்.

மனித குலத்தையே கூண்டோடு அழிக்கச் செய்யும் மிருக உணர்வுகள் புவியில் துரித நிலைகளில் இயங்கிக் கொண்டுள்ளது.

1.இந்தச் “சந்ததிக்குப்பின்”
2.பெரும் புயல்களை போன்று சூறாவளிகளைப் போன்று பெரும் நில நடுக்கங்களைப் போன்று உருவாகி
3.பெரும் பெரும் கட்டிடங்களே நொறுங்குவது போன்று மனித உணர்வின் தன்மை சீர்குலைந்து,
4.மனிதனுக்கு மனிதன் நொறுங்கி மடியும் தன்மையும் மனித இனமே கூண்டோடு அழியும் தன்மையும் வந்து கொண்டே இருக்கின்றது.

இது போன்ற தீமைகளிலிருந்து நாம் அனைவரும் மீளவேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள்வழியில் ஒவ்வொரு குடும்பத்திலும், கணவனும் மனைவியும் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து உயர்ந்த நிலைகளைத் தங்களுக்குள் உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகவே, ஒவ்வொரு நிமிடமும் பெண்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணி நாமும் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணினால் நமக்குள் உயர்வு தரும்.

ஏனென்றால் குறுகிய காலமே நமக்கு இருக்கின்றது.

இராமாயணத்தில் இராமன் நேரமாகிவிட்டது என்று இராமேஸ்வரத்தில் இதுவே கடைசி நிலை என்று மணலைக் குவித்துச் சிவலிங்கம் அமைத்துப் பூஜித்தார் என்று காண்பிக்கப்பட்டது.

ஏனென்றால் இராமன் என்ற எண்ணங்கள் இந்த மனித உடலில் கடைசி நிலையில் இருக்கின்றது.

ஆகவே  “நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்”  என்ற உணர்வை நமக்குள் கலந்துவிட்டால் கடைசி என்ற நிலைகள் வரும், “தனுசுகோடி”.

1நம்முடைய கடைசி எண்ணத்தின் நிலைகளாக
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனுசாக நமக்குள் உட்செலுத்தி,
3.தீமை என்ற நிலைகளை அகற்றி
4.உணர்வை ஒளி என்ற நிலைகளில் மாற்றி
5.இனிப் பிறவி இல்லை என்ற நிலைக்கு நாம் அனைவரும் செல்ல வேண்டும்.

Leave a Reply