“பிடிக்காதவர்கள்… எப்படா இறப்பார்கள்…?” என்று நினைக்கலாமா…!

Astral life

“பிடிக்காதவர்கள்… எப்படா இறப்பார்கள்” என்று நினைக்கலாமா…! 

குருநாதர் இட்ட கட்டளைப்படி யாம் திருத்தணியில் மலைக்குச் செல்லும் பொழுது ஒருவர் எம்மைச் சந்தித்தார்.

நான் ஒரு விவசாயி, இங்கிருந்து பத்தாவது மைலில் எங்கள் கிராமம் இருக்கிறது. என் மனைவிக்கு ஒன்றரை வருட காலமாக எழுந்து உட்காரவோ நடக்கவோ முடியவில்லை.

என்ன நோய் என்று தெரியவில்லை? எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை என்று கூறினார்.

சாமி.., நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து “என் மனைவியின் நோயைப் போக்கி நடக்க வைக்க வேண்டும்” என்று கண்களில் நீர் ததும்ப எம்மை ஊருக்குக் கூப்பிட்டார்.

யாம் இங்கு தியானத்திலிருந்துவிட்டு அதன் பிறகுதான் எங்கும் வர முடியும் என்றோம்.

தாங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ அதுவரைக்கும் இங்கேயே இருந்து தங்களை அழைத்துக் கொண்டு போகிறோம் என்றார் அவர்.

விவசாயியைக் கூட்டிக்கொண்டு திருத்தணி மலைமீது ஏறிச் சென்றேன். குருதேவர் கூறிய இடத்தை அடைந்தவுடன் அவரை நான்கு நாள் கழித்து வரும்படிச் சொல்லிவிட்டு குருதேவர் குறிப்பிட்ட இடத்தில் தியானத்தில் அமர்ந்து கொண்டேன்.

யாம் இங்கிருக்கிறோம் என்று ஊரில் யாரிடமும் தெரியப்படுத்தக்கூடாது என்று சொல்லி அனுப்பிவிட்டோம்.

யாம் தியானத்தில் இருந்த 4 நாள்களிலும், பல நிலைகள் காட்சிகளாகத் தெரிந்து கொண்டிருந்தன. யாம் காட்சிகளாகப் பார்த்த பல நிலைகளுக்கும், குருதேவர் விளக்கி உபதேசித்து அருளிவிட்டு நாளை வரும் விவசாயியின் ஊருக்குச் செல்லும்படிக் கூறிவிட்டு மறைந்து விட்டார்.

நான்காம் நாள் யாம் இருக்கும் இடத்திற்கு விவசாயி வந்து என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

விவசாயின் மனைவி வாத நோயால் கை கால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்.

அன்று இரவு தியானத்தில் அமர்ந்தேன். அது சமயம் காட்சியாக விவசாயியின் “தாயார்..,” வாத நோயுடன் கை கால் வராமல் படுக்கையிலிருந்து கொண்டு வேதனையுடன் பல முறை மருமகளைக் (விவசாயின் “மனைவியை”) கூப்பிட்டார்கள்.

அப்பொழுது மருமகள்.., “சனியன் தொலைய மாட்டேனென்கிறதே”, என்று முனங்கிக் கொண்டே மாமியாரைப் பார்க்க அருகில் வந்தார்.

“ஒரு பக்கமாக எனக்குக் கைகால்கள் வலிக்கின்றது, என்னை அந்தப் பக்கம் கொஞ்சம் புரட்டிவிடு” என்றார்கள்.

மருமகளோ “நீ செத்தால்தான்… எனக்கு விடிவு காலம் வரும்” என்று சொல்லிக் கொண்டே வேண்டா வெறுப்புடன் மாமியாரை ஒரு பக்கமாகப் புரட்டிவிட்டார்.

இதைக் கண்டு மாமியார் வேதனையுடன் இப்படியெல்லாம் ஏசுகிறாயே.., “முருகா…!” என்று சொல்லி வேதனையுடன் பெருமூச்சு விட்டார்கள்.

மருமகளுக்குக் கோபம் வந்து என்ன…! இப்படியெல்லாம் பேசுகிறாய்…! என்று ஏச மாமியாரும் வேதனையுடன் பேசினார்கள்.

1.மருமகள் கோபத்துடன் ஏசிய உணர்வலைகள்
2.மாமியாரின் இரத்தத்தில் கலப்பது காட்சியாகத் தெரிந்தது.
3.இதைப் போன்று மாமியார் சாபமிட்டு ஏசிய உணர்வலைகள் மருமகளின் உணர்வுகளில் உந்தப்பட்டு
4.மருமகளின் இரத்தத்தில் கலப்பதும் காட்சியாகத் தெரிந்தது.

மேற்கூறியவாறு ஒருவருக்கொருவர் பல மாதங்களாக நினைத்தும் ஏசியும் பேசிக் கொண்ட உணர்வலைகள் ஒருவருக்கொருவர் படர்கின்றது.

அதாவது
1.மருமகள் மாமியாரை நினைத்து ஏசிய உணர்வலைகள்
2.மாமியாரின் உடலில் வினைகளாக விளைகின்றன.
3.மாமியார் மருமகளை நினைத்துச் சாபமிட்டுப் பேசிய உணர்வலைகள்
4.மருமகளின் உடலில் வினைகளாக விளைகின்றன.

வேதனை உணர்வுடன் “மருமகளை எண்ணியவாறே…” மாமியாரின் உயிராத்மா உடலைவிட்டுப் பிரிந்து சென்றது.

மாமியார் “எப்பொழுது… இறக்குமோ…?” என்ற வேதனையுடன் ஏங்கி இருக்கும் நிலையில் மாமியார் இறந்ததைப் பார்த்தவுடன் மாமியாரின் உயிராத்மா “மருமகளின் சுவாசத்தின் ஈர்ப்புக்குச் சென்று” இரத்தத்தில் கலந்துவிடுகின்றது.

1.சில நாட்களில் மருமகளின் உடலில் மாமியாரின் உயிராத்மா இயங்கத் தொடங்கி
2.மாமியார் எந்த நோயால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்களோ,
3.அதே வேதனையை மருமகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலைகள்
4.இவை எனக்குக் காட்சியாகத் தெரிந்து கொண்டிருந்தது.

அது சமயம் குருதேவர் காட்சி கொடுத்து இதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டுவிட்டு அதற்குச் சில வழிமுறைகளை உணர்த்தி உபதேசித்தார்கள். பிறகு தியானத்தைக் கலைத்துவிட்டேன்.

விவசாயின் மனைவியிடம் நீங்களும் உங்கள் மாமியாரும் அடிக்கடிக் கோபித்துக் கொள்வீர்களா? என்று கேட்டேன்.

“ஆம்..,” என்று ஒப்புக் கொண்டார்கள்.

யாம் சொல்கிறபடி செய்தால் நோய் தீரும் என்றேன்.

தாங்கள் எப்படிச் செய்யச் சொல்கின்றீர்களோ அதன்படி நாங்கள் செய்கிறோம் என்றார்கள்.

விவசாயின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தியானத்தில் அமரச் செய்தேன்.

தியானமிருந்து கண்களைத் திறந்தவுடன்
1.விவசாயின் தாயாரின் பெயரைச் சொல்லி
2.அவர் உயிராத்மா மகரிஷிகளின் அருள் ஒளியால் புனிதம் பெற வேண்டும் என்று
3.குடும்பத்தில் உள்ள அனைவரையும் குருதேவர் உணர்த்திய வழியில், சொல்ல வைத்தோம்.

இவ்வாறு பத்து நாள்கள் தியானமிருந்து சொல்ல வைத்ததனால், விவசாயின் மனைவி 10 நாள்களில் மெள்ள மெள்ள எழுந்து நடக்கலானார்.

விவசாயின் குடும்பத்தில் அனைவரும் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள். விவசாயின் மனைவி இனி நான் “யாரையும் மனம் நோகும்படிப் பேச மாட்டேன்…” என்று வேண்டிக் கொண்டார்.

தொடர்ந்து நீங்கள் தியானம் செய்தால் உங்களை அறியாது வரும், கோபம் குரோதம் பயம் நீங்கி உங்கள் குடும்பத்தில் நலமும் வளமும் பெற்று வாழ்வீர்கள் என்று யாம் ஆசீர்வதித்தோம்.

இது நடந்த நிகழ்ச்சி.

 

Leave a Reply