தீய உணர்வுகள் விளைந்து கனியானால் “கலி” தீமை வரும்பொழுதெல்லாம் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் கனியாக்கினால் “கல்கி”

Kali kalki

தீய உணர்வுகள் விளைந்து கனியானால் “கலி” தீமை வரும்பொழுதெல்லாம் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் கனியாக்கினால் “கல்கி”

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் தீமை என்று கண்ட பின் நாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்.

இப்படித் தியானித்து நம் உடலுக்குள் எடுத்துக் கொள்ளும் பொழுது தன்னிச்சையாக (AUTOMATIC) என்ன செய்கின்றது? தீமைகளைப் பிளந்துவிட்டு அந்தத் தீமை செய்யும் உணர்வுகளைச் சூரியன் (காந்தப் புலனறிவுகள்) எடுத்துக் கொண்டு போகின்றது.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கவலையோ சங்கடமோ வெறுப்போ வேதனையோ

1.நம் உடலில் இப்படி எத்தனையோ வரும்.

2.அதுவெல்லாம் தன் சாப்பாட்டிற்காக ஏங்கும்.

3.அப்பொழுது அந்த உணர்ச்சிகள் உயிர் வழியாக கண்கள் கொண்டு இழுக்கும்.

4.அப்புறம் நமக்குள் ஆன்மாவிற்குள் வந்து சுவாசத்தின் வழியாக உடலுக்குள் போய்

5.அது தன் இனத்தை வளர்க்க முயற்சிக்கும்.

ஏனென்றால் கோபம் வெறுப்பு சலிப்பு ஆத்திரம் வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் வரும்போது “கலி…” ஆகிவிடுகின்றது. அப்பொழுது நல்ல சிந்தனை குறைக்கப்படுகின்றது.

வேதனை என்று வரும் போது நோயாகின்றது. நல்லதை நமக்குள் வலிமையாக்க முடியவில்லை. அதை மாற்ற வேண்டுமல்லவா…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

நமக்குள் மனக்கவலையோ மற்ற சங்கடமோ வந்தால் அந்த மாதிரி நேரத்தில் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று சொல்லிக் கொஞ்ச நேரம் ஏங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

“கண்களை மூடி” அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் எல்லாம் பெறவேண்டும் என்று உள்முகமாக உணர்வினைச் செலுத்தி உடலுக்குள் இணைக்க வேண்டும்.

இந்த மாதிரி எடுத்து நம் உடலில் சேர்த்துக் “கல்கி…” ஆக மாற்ற வேண்டும்.

ஆகவே கார்த்திகேயா.., தீமை என்ற நிலைகள் புகாதபடி சேனாதிபதி…, பாதுகாக்கக் கூடிய வலிமை இருக்கின்றது. அந்த  வலிமையின் துணை கொண்டு நாம் எதை இச்சைப்பட வேண்டும்?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். இது இச்சை. அந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது கிரியை.

சேர்க்கச் சேர்க்க அதனின் ஞானமாக நமக்குள் இயங்கத் தொடங்கும். இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. இந்த ஆறாவது அறிவு என்பது வலிமைமிக்க சக்தி “வள்ளி”.

இந்த வலிமை கொண்டு நாம் என்ன செய்கின்றோம்? தீமைகளை நீக்கக்கூடிய தகுதி பெறுகின்றோம். அப்போது அருள் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று உணர்வை எடுத்து அது உயிரிலே பட்டால் அந்த உணர்ச்சிகள் “தெய்வானை”.

1.அதாவது அந்த ஆணைப்படி நமக்குள் அருள் சக்திகள் சேரும்.

2.அந்தத் தெய்வமாக நாம் ஆணையிட்டு நமக்குள் தீமை புகாது பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இதைத்தான் கந்த புராணத்தில் ஞானிகள் தெளிவாக கூறியிருக்கின்றார்கள்.

நாம் இந்த உடலில் எத்தனை காலம் வாழ்கின்றோம்? வாழப் போகின்றோம்? நன்றாகச் சிந்தித்து பாருங்கள்.

“நான் நல்லது செய்தேனே…, எனக்குத் தீமை வருகின்றதே..,” என்று தான் எண்ணுகின்றோமே தவிர நல்லதை எண்ண முடியவில்லை.

ஏனென்றால் நாம் சுவாசித்த தீமையின் உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகி வளரும் பொழுது அந்தந்த நேரத்தில் “அதனுடைய பசிக்கு” அது எடுக்கின்றது.

அது வளர்ந்து தீமையைக் “கனியாக” ஆக்க முயற்சிக்கும். கனியாகிவிட்டால் மீண்டும் பல வித்துக்களாக தீமையின் விளைச்சலாக நமக்குள் ஆகிவிடும்.

அது கனியாவதற்கு முன் நாம் தடுத்துவிட்டால்…? அந்தத் தீமைகள் நமக்குள் விளையாது. தீமையின் விளைவுகள் தடைப்படுத்தப்படுகின்றது.

1.தீய உணர்வின் தன்மை நமக்குள் கனியாவதற்கு முன்

2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் ஒவ்வொன்றாக எடுத்து

3.நம் உடலுக்குள் வளர்த்து இதன் வழி கனியாகி

4.உயிர் என்ற உணர்வை முழுமையான கனியாக்க வேண்டும்

5.அது தான் கல்கி.

 

Leave a Reply