தியானத்தின் மூலம் மெய் ஞானிகளுடன் “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்” (சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல்)

Spiritual contact.jpg

தியானத்தின் மூலம் மெய் ஞானிகளுடன் “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்” (சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல்) 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளியது போன்று அவர் அருளை நீங்களும் பெறவேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஏங்கிப் பெற இப்பொழுது ஏங்கித் தியானிப்போம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான  அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிப் பெறுங்கள்.

கண்களைத் திறந்தே தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கவும்.

இப்பொழுது நமது குரு அருளும் அவர் கண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குக் காட்சியாகவும் கிடைக்கலாம்.

கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து ஏங்கும் பொழுது குரு அருளால் பெறப்பட்ட அந்த ஆன்மாவை நீங்கள் உணர முடியும். காட்சியாகவும் பார்க்க முடியும்.

நமது குரு அருளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இப்போது உங்கள் சுவாசித்திற்குள் வரும். உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் நல்ல உணர்ச்சிகள்  உருவாகும்.

உங்கள் இரத்த நாளங்களில் அந்த அரும்பெரும் சக்தி உடல் முழுவதும் அது சுழன்று வரும் அந்த உணர்ச்சிகள் உங்களில் தோன்றும்.

உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்துங்கள். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியான அந்த அரும்பெரும் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தி
2.இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
3.உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் குரு அருளும் உங்கள் உடலுக்குள்
1.இயங்கிக் கொண்டிருப்பதை
2.இயக்கிக் கொண்டிருப்பதை உணர முடியும்.

உங்கள் ஆன்மாவில் இப்போது அவருடைய உணர்வுகள் காட்சியாகவும் வரலாம். சொல்லாகவும் வரலாம்.

1.ஒலி ஒளி என்ற நிலையில் காற்றிலிருந்து வரும் அலைகளை
2.டிவி யில் எப்படிக் கவர்ந்து படமாகப் பார்க்கின்றோமோ
3.ஒலியாகக் கேட்கின்றோமோ இதைப்போல
4.உங்கள் ஆன்மாவில் படர்ந்திருப்பதை நீங்கள் நுகரப்படும்போது
5.அந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு
6.காட்சியாகவும் உணர்வாகவும் அறிய முடியும்.

யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைப் பதிவாக்கி அந்த நினைவுடன் இவ்வாறு ஏங்கித் தியானித்து வரும் பொழுது உங்கள் ஆன்மாவில் மகரிஷிகளின் அருள் ஒளிகள் பெருகத் தொடங்கும்.

ஒளி அலைகள் பெருகும்பொழுது உங்கள் சுவாசத்தில் கலந்து உயிரிலே படும்பொழுது அந்த உணர்ச்சிகள் தோன்றும். அதன் துணை கொண்டு அந்த ஞானிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும்.

விண்ணிலிருந்து கணப்பொழுதில் அவர்களின் அருள் சக்திகளைப் பெற முடியும். (சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல்)

Leave a Reply