யாம் கொடுக்கும் சக்தியைப் பயன்படுத்தவில்லை என்றால் திருச்சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தும் பயனில்லை

யாம் கொடுக்கும் சக்தியைப் பயன்படுத்தவில்லை என்றால் திருச்சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தும் பயனில்லை

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் “எதிரியிடமிருந்து தப்ப வேண்டும்…” என்ற நிலையில் தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து மான் புலியைப் பார்த்து அதனின் வலுவை நுகர்ந்து; எலி பாம்பைப் பார்த்து அதனின் வலுவை நுகர்ந்து; பாம்பு கருடனைப் பார்த்து அதனின் வலுவை நுகர்ந்து; பரிணாம வளர்ச்சியாக அணுக்களில் மாற்றமாகி இப்படித்தான் நாம் மனிதனாக இன்று வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனாக வந்த பின் இந்த வாழ்க்கையில் தீமையான செயல்களைப் பார்த்த பின் அதை நுகர்ந்து உடலுக்குள் தீமையின் அணுக்களாக உருவாகாதபடி தப்பித்துக் கொள்ள ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுதல் வேண்டும்.

அதற்குத் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்தி அதைப் பெறச் செய்து கொண்டே இருக்கின்றேன் (ஞானகுரு).

அவ்வாறு
1.அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி… துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைக் கொடுத்தும்
2.அதை நீங்கள் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் இந்தத் திருச்சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தும் பயன் இல்லை

ஒவ்வொரு நொடியிலும் யாம் கொடுக்கும் சக்தியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். எத்தகைய நிலைகள் வந்தாலும் புருவ மத்தியிலே “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று “முதலில் அங்கே நிலை நிறுத்தப் பழக வேண்டும்…”

1.எப்படி… எவ்வளவு பெரிய நிலை இருந்தாலும்… அல்லது வந்தாலும் சரி…
2.அது வந்த அடுத்த கணமே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணிவிட்டு
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஒரு நிமிடமாவது எண்ணி அதை அங்கே தடைபடுத்திப் பழகுதல் வேண்டும்

ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் தாராளமாக வரும். இது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து… அடுத்து எந்த நல்லது நடக்க வேண்டுமோ அதை எண்ண வேண்டும்.

கோபப்பட்டவரைப் பார்த்திருந்தோம் என்றால் அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சேர்க்க வேண்டும்.

ஆக… அவன் வெளிப்படுத்திய கோப உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருளை இணைத்து நல்ல உணர்வாக மாற்ற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்து அது இரத்த நாளங்களில் பரவப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு இது நல்ல உணர்ச்சிகளை ஊட்டி நல்ல அணுக்களாக மாற்ற உதவும்.

இதைப் போன்ற பழக்கத்திற்கு நாம் அவசியம் வந்தாக வேண்டும்.

1.நம் குடும்பத்திலும் எந்தக் குறை வந்தாலும்… குறையாக நாம் எடுத்துக் கொள்ளாதபடி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலில் இதை எடுத்து மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

குடும்பத்தில் கணவன் மனைவியோ… குழந்தைகளோ… நம்முடன் பிறந்தவர்களோ… அல்லது யாராக இருந்தாலும் குறையாக எண்ணாதபடி… அந்த உயர்ந்த சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் எல்லோரும் போற்றும் நிலைக்கு அவர்கள் வளர வேண்டும் என்று இப்படி நாம் எடுத்துக் கொண்டே வந்தால் இந்த உணர்வு எல்லோருக்கும் கிடைக்கின்றது.

இப்படி நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு குணத்திலும் ஒவ்வொரு உணர்விலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டே வந்தால் இந்த அருள் வழி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களிலே சேர்க்கப்படுகின்றது.

இப்படிப் பெருக்கினால் இது தனுசுக்கோடி கடைசி நிலைகள் யாருடைய பகைமையும் இல்லாதபடி அந்த அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து “எல்லோருக்கும் நல்லதாக வேண்டும்” என்ற இந்த மூச்சுகளை நாம் வெளியிடுகின்றோம்.

யாருடைய தீமையும் நமக்குள் வராதபடி தடுத்து நம்மை நாம் காத்துக் கொள்கின்றோம். ஆகவே திருச்சபை அங்கத்தினர்கள் தலையாய கடமையாக இதைச் செயல்பட வேண்டும்

1.எந்த நிமிடத்தில் எந்த நேரத்தில் எவ்வளவு பெரிய நிலை வந்தாலும்
2.குடும்பத்தில் எதிர்பாராத கோபமோ வேதனையோ வந்தாலும்
3.எத்தகைய கடுமையான சிக்கல்கள் வந்தாலும்… அந்த மாதிரி நேரங்களில் எல்லாம்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பயன்படுத்தி அந்தத் தீமை நமக்குள் வ(ள)ராதபடி தடுத்து
5.நம் குடும்பத்திலும் சரி அல்லது புறநிலைகளிலும் சரி ஒன்று சேர்ந்து வாழும் நிலையாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் நுகரப்படும் போது அது நமக்குள் வளர்ந்து கொண்டே வரும். அதனின் பெருக்கம் எல்லா அணுக்களிலும் சேர்ந்து கொண்டே வரும். பேரொளியாக நாம் மாறலாம்.

Leave a Reply