தீமையை நீக்கிய அனுபவங்கள் இல்லையென்றால் தியானத்தைச் செய்து பலனில்லை

தீமையை நீக்கிய அனுபவங்கள் இல்லையென்றால் தியானத்தைச் செய்து பலனில்லை

 

படித்ததை மட்டும் வைத்துக் கொண்டு இன்ஜினியர் வேலை பார்த்தால் அவர் காரியத்திற்கு ஆகாது. அனுபவ சித்தி அவசியம் வேண்டும்.

அதைப் போன்று தான் யாம் சொன்னதை எல்லாம் வெறும் பாடமாக வைத்துக் கொண்டு “சாமி சொன்னார்…!” என்று மட்டும் எண்ணக் கூடாது.

உபதேசிப்பதை எல்லாம் முதலில் ஆழமாகப் பதிவு செய்து ஞாபகத்தில் வைத்து… அதை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்திலே குறைபாடுகள் எப்படி வருகின்றது…? என்று அறிந்திடும் அந்த அனுபவம் வேண்டும்.
2.யாம் சொன்னதை எடுத்துப் பயன்படுத்தி அந்தக் குறைகளை மாற்றி அமைக்கக்கூடிய அனுபவம் பெற வேண்டும்.
3.”எது வந்தாலும்” அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து… நல்லதாக வேண்டும் என்று அதைத் தூய்மைப்படுத்தி…
4.அப்படித் தூய்மையாக்கிய அனுபவங்கள் கட்டாயம் வேண்டும்.

படித்துப் பட்டம் பெற்ற இன்ஜினியர் என்றாலும் அனுபவம் இல்லை என்றால் படித்த பாடத்தால் பலன் இல்லை. மருத்துவர்களாக வருபவர்கள் முதலிலே மருத்துவம் பற்றியதை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்கின்றார்கள்.

படித்த படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு “நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது…” அவர்களுக்கு அனுபவத்திற்கு என்று தனியாகப் பயிற்சி கொடுப்பார்கள்.

ஏனென்றால் ஒருவருக்கு ஒரு நோய் இருக்கிறது என்றால் படித்ததன் பிரகாரம் மட்டும் மருந்து கொடுக்க முடியாது. காரணம்…
1.அவர் உடலில் மற்றொரு உபாதை இருக்கும்…
2.அதற்கு இந்த மருந்து எதிர்ப்பதம் ஆகிவிடும்.

அதாவது ஒருவருக்கு ஆஸ்த்மாவும் இருக்கும்… இரத்தக் கொதிப்பும் இருக்கும். ஆஸ்துமாவுக்கு மருந்து கொடுத்தால் இரத்தக் கொதிப்புக்கு ஆகாது. இரத்தக் கொதிப்புக்கு மருந்து கொடுத்தால் ஆஸ்துமாவுக்கு ஒத்துக் கொள்ளாது.

மீண்டும் அவருக்கு நோய் அதிகமாகும்… வேதனையாகி பாதிப்புகள் அதிகமாகும்.

ஆனால் இது இரண்டையும் சமப்படுத்தும் நிலையாக
1.அதற்கு எப்படிப்பட்ட மருந்து கொடுக்க வேண்டும்…? என்று அந்த மருத்துவர் சிந்தனை செய்து
2.தன்னுடைய அனுபவத்தால் செயல்படுத்தி இரண்டையும் சீராக்கினால் தான் அவரை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.

ஆனால் “இன்ன நோய்க்கு… இன்ன மருந்து தான்” கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். அந்த ஆஸ்துமாவிற்கு என்று அவர் தனித்து மருந்து கொடுத்தால் சீராக வராது இரத்தக் கொதிப்புக்குக் குளிர்ச்சியான நிலை உருவாக்கும்படி செய்தால் ஆஸ்துமாவுக்கு அதிகமாகிவிடும். கர்…புர்… என்று இழுத்துக் கொண்டிருக்கும்.

அப்பொழுது எந்த நோயை நீக்குவது…?

ஆகவே அனுபவரீதியிலே இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று சிந்தித்து
1.ஆஸ்துமாவுக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த உஷ்ணத்தை மேலே ஏற்றி
2.அதனுடன் இரத்தக் கொதிப்பிற்கு குளிர்ச்சிக்குண்டானதைக் கொடுத்துச் சமப்படுத்திக் கொண்டு வந்தால் இரண்டும் சமமாகும்.
3.ஆஸ்துமாவையும் குறைக்கும்… இரத்தக் கொதிப்பையும் குறைக்கும்.

ஆனால் சமப்படுத்த முடியாத மருந்தைக் கொடுத்தால் அது வேலையாகாது. குளிர்ச்சியைக் கொடுத்துத்தான் கொதிப்பை அடக்க முடியும். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமான செயலாக்கங்கள் வரும். அதனுடைய செயலாக்கங்களை அறிந்து அனுபவரீதியிலே கொண்டு வர வேண்டும்.

அதற்குத்தான்…
1.எம்முடைய (ஞானகுரு) அனுபவத்தை உபதேச வாயிலாக உங்களிடம் சொல்கின்றேன்.
2.அனுபவத்தைச் சொல்லி எந்த நிமிடத்தில்… அந்தக் குறைகள் எப்படி உங்களை இயக்குகின்றது…? என்றும்
3.அதை மாற்றி அமைக்க ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை எண்ணி அருள் சக்திகளை அங்கே நிலை நிறுத்தி
4.உங்கள் உடலுக்குள் அதை வலுவாக்க வேண்டும் என்று வாக்கினால் அதைப் பதிவு செய்கிறேன்.

அந்தப் பதிவை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். இப்படி நான் சொன்னதை எல்லாம் நீங்கள் கடைப்பிடித்து…
1.நான் செய்தேன் என்று செயல்படுத்தி அனுபவபூர்வமாக ஒவ்வொன்றாக்க் கொண்டு வந்தால்
2.அதன் வழி தான் இதை மாற்றியமைக்கக்கூடிய நிலையைக் கொண்டு வர முடியும்.

தொழிற்சாலையிலும் சரி… ஒரு இயந்திரத்தைச் சீராக்குவதிலும் சரி… அதைப் பற்றி அனுபவரீதியாகத் தெரிந்த பிட்டர்கள் (FITTER) இருப்பார்கள். படித்தவர்களைக் காட்டிலும் அவர்கள் அனுபவ அறிவு கொண்டவர்கள்.

ஆனால் இன்ஜினியரோ நான் சொன்னபடி செய்ய வேண்டும் என்று சொல்லலாம். அதன்படி செய்தும் விடலாம் ஆனால் அந்த இயந்திரம் வேலை செய்யும் போது அங்கே தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது.

தேய்மானம் ஆகும் போது அங்கிருக்கும் பிட்டருக்கு அதை பற்றி அனுபவம் இருக்கிறது. இந்த இடத்தில் சாய்வாக இருக்கின்றது… சமமாக்கி நேராக்கினால் தேய்மானம் ஆகாது… சரியாகிவிடும் என்று அவன் சொல்கிறான்.

ஆனால் படித்தவன் நான் சொல்கின்றேன்..! பிட்டர் நீ இந்த மாதிரிச் சொல்கிறாயே என்று இஞ்சினியர் சொன்னால் சரியாக வருமா…?

சில பேர் இப்படித்தான் நான் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கின்றேன்… தியானம் எல்லாம் கற்றுக் கொண்டிருக்கின்றேன். குண்டலினி யோகா செய்திருக்கின்றேன் என்றெல்லாம் சொல்வார்கள்.

1.ஆனால் “அந்த நுணுக்கம்…” எதிலிருந்து வருகின்றது…? என்று இல்லாதபடி சொன்ன பாடத்தை ஒப்படைக்கின்றார்கள்.
2.எப்படி மாற்றிக் கொண்டு வருவது…? என்பதை ஒதுக்கி அதை விட்டு விடுகிறார்கள்.

படித்தவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். படிக்காதவர்கள் தியானத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது நான் எத்தனையோ படித்திருக்கின்றேன் எனக்கு எல்லாம் தெரியும் என்னிடம் வந்து நீ சொல்கின்றாயா…? என்று சொல்வார்கள்.

இப்படிச் சொன்னால்
1.படிக்காதவர் கண்டுபிடித்துச் சொன்னதை
2.படித்தவர் அறிய முடியாது போய்விடும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

(அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சிகள் கொண்டு செய்தோம் என்றால் அது பக்குவமாகும்).

வீட்டில் வடை சுடுவார்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொண்டு நாமும் சொல்லலாம் அட.. அடுப்பில் சட்டியை வைத்து எண்ணை காய்ச்சுகிறார்கள்… மாவைத் தட்டிப் போடுகிறார்கள்… அவ்வளவு தான்…! என்றும் நினைக்கலாம்.

தண்ணீரைத் தெளித்து அவர்கள் எண்ணையின் சூட்டைக் கணிப்பார்கள் அது சுய்… என்று சப்தமிடும். ஓ… இவ்வளவுதானா…! என்று இவர்களும் அதே போன்று செய்து பார்க்கும் போது சுய்… என்று சப்தமிடும்.

1.ஆனால் அந்தச் சப்தத்தின் வித்தியாசங்கள் அவர்களுக்குத் தெரியும்
2.எந்த அளவிற்கு எண்ணெய் காய்ந்திருக்கிறது என்று…!

அதற்குத் தகுந்தது போன்று அவர்கள் மாவை பிசைந்து கொண்டே இருப்பார்கள். அல்லது மற்ற வேலை செய்வார்கள் அதற்குப்பின் இந்த வடையைப் போடுவார்கள். சமமாக அவர்கள் 10 வடையைப் போட்டர்கள் என்றால் அந்தப் பத்திற்கும் சூடு சரியாக இருக்கும். வெந்து சீராக வரும்… ருசியாகவும் இருக்கும்.

ஆனால் புதிதாக வடை சுடுபவர்கள் தட்டிப் போட்டால் ரெண்டு அல்லது மூன்று வடையைப் போட்டதும் எண்னையிலிருக்கும் சூட்டை எல்லாம் அது எடுத்துக் கொள்ளும். அடுத்து வடையைத் தட்டிப் போட்டால் சரியாக வேகாது. எண்ணை எல்லாம் மாவிற்குள் புகுந்து விடும்… எண்ணெய் காணாது போய்விடும்.

ஆனால் அனுபவம் பெற்றவர்கள் சுட்டுப் போட்டால் வடையில் எண்ணெய் இல்லை… வடை மொறு மொறு என்று ருசியாக இருக்கிறது.

ஆனால் அவர்கள் சுட்டதில் எண்ணை இருக்கிறது. மாவாக இருக்கிறது என்று சூட்டைக் கூட்டினால் மேலே கருகிவிடும். ஐய்யய்யோ கருகிவிட்டதே என்று எடுத்தால் இந்தப் பக்குவம் தவறும் போது என்ன ஆகிறது…? சாப்பிட்டால் ருசி இல்லை.

காரணம் அந்தப் பக்குவம் தெரிய வேண்டும்…!

ஆக எதுவுமே… ஒரு சிறியதாக இருந்தாலும் எல்லாவற்றிலும் அந்தப் பக்குவம் வேண்டும்
1.ஆன்மீகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம் என்றால் “பக்குவ நிலை பெறுவதற்குத் தான்” உணர்வுகளை அனுபவித்துச் சொல்கின்றோம்.
2.எம்மைப் போன்று நீங்களும் அனுபவரீதியில் தியானத்தை எடுத்து வளர்ந்தால் “உங்களைக் காப்பதற்கு உங்கள் எண்ணம் உதவும்…”

Leave a Reply