யாம் உங்களுக்குக் கொடுக்கும் வாக்கு

யாம் உங்களுக்குக் கொடுக்கும் வாக்கு

 

எல்லோருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று யாம் (ஞானகுரு) பூரண ஆசீர்வாதம் கொடுக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலமாக வேண்டும் பிள்ளைக்குத் திருமணமாக வேண்டும் தொழில் சீராக வேண்டும் என்று
1.உங்களுக்கு எது நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அதை மனதில் எண்ணி ஆசி பெறுங்கள்.
2.சிந்தனைகளைச் சிதற விட்டுப் பல பல கோரிக்கைகளை வைக்காதீர்கள்.

எம்மிடம் வருகின்றீர்கள் என்றால்… என் பிள்ளைக்குத் திருமணம் நடக்க வேண்டும் அது எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் அதற்கு ஆசீர்வாதம் வேண்டும் என்று மனதில் எண்ணி இப்படிக் கேளுங்கள். “அதைக் கொடுத்து விடலாம்…”

அடுத்த முறை வரும் பொழுது இன்னொன்றை நீங்கள் கேட்கலாம்…!

ஆனால் ஒன்றைக் கொடுத்த பின் மொத்தமாக எல்லாத்தையும் கேட்க ஆரம்பித்துச் சொல்ல ஆரம்பித்தால்
1.என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
2.குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது
3.சம்பாதிக்கிற பணம் செலவழிந்து கொண்டிருக்கின்றது
4.வியாபாரம் நஷ்டமாகிக் கொண்டே வருகின்றது என்று இப்படி வரிசையில் அடுக்கிக் கொண்டே போவார்கள்.

நான் எதற்கு ஆசி கொடுப்பது… எதற்குப் பதில் சொல்வது…?

எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஆசி கேளுங்கள் அதே போல் எங்கள் தொழில் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். அதற்கு நல்ல ஆசி வேண்டும் என்று கேளுங்கள்.

இது எல்லாம் வாக்கு தான்…!

திட்டியவர்களைப் பதிவு செய்கின்றோம் திருப்பி எண்ணும் பொழுது “திட்டினான்… திட்டினான்…” என்று வருகிறது.

நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாக்காகப் பதிவு செய்கின்றேன்.
1.அதைத் திரும்ப நீங்கள் எண்ணினீர்கள் என்றால்
2.அதே மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குள் வேலை செய்யும்
3.ஏனென்றால் நான் சதா தியானம் இருந்து கொண்டே இருக்கின்றேன்

ஒருவர் ஒரு தரம் திட்டிவிட்டார் என்றாலும் அடுத்து அதை யாரிடம் சொன்னாலும் மீண்டும் மீண்டும் சொல்லி திட்டிக் கொண்டே இருப்பார். அந்த அலைகளை அவர் பரப்பிக் கொண்டே இருப்பார்.

பதிலுக்கு நீங்களும் அவர்களை அடிக்கடி நினைத்துத் திட்டிக் கொண்டே இருப்பீர்கள். நீங்களும் இந்த எண்ணத்தை பரப்பிக் கொண்டே இருப்பீர்கள்
1.அவருடைய நினைப்பு உங்களிடம் வளர்கின்றது
2.இரண்டும் கலந்து பேசிக் கொண்டே இருக்கும்.

இதே போன்றுதான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று “எந்தெந்த வகையிலோ தந்திரமாக உங்களுக்குள் நுழைய வைக்கின்றேன்…”

அதைப் பெற வேண்டும் என்று திரும்ப எண்ணி விட்டீர்கள் என்றால் அதை நீங்கள் பெருக்கிக் கொள்கின்றீர்கள் உங்களிடம் கோபப்படச் செய்யும் உணர்வுகள் வெளிப்படுவதை அது கொஞ்சம் அடக்குகிறது.

உங்கள் சொல்லே உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.

1.எந்த எந்த வகையிலோ உங்களுக்குத் தெரியாமலே கஷ்டம் எப்படி வருகின்றதோ அதே போலத்தான்
2.உங்களுக்குத் தெரியாமலேயே கஷ்டத்தை நீக்க கூடிய சக்தியை கொடுக்கின்றோம்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள் யாரைப் பார்த்தாலும் “உங்கள் பார்வையால் அவர்கள் கஷ்டம் விலக வேண்டும்…” என்ற நிலைக்கு வளர வேண்டும்.

அந்தச் சக்தியைத் தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்… பரப்புகின்றேன்…!

ஆகையினால் கூடுமான வரையில் அடுத்தவருடைய கஷ்டங்களையோ குறைகளையோ எடுத்துப் பேசாதீர்கள். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய குறைகள் நீங்க வேண்டும் என்று எண்ணிப் பழகுங்கள்.

எங்கேயாவது ஏதாவது குறை நடந்தது என்றால் அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று எண்ணுங்கள். ஏனென்றால்
1.முந்திப் பதிவு செய்த குறையான உணர்வுகள் இருக்கும்
2.அது எல்லாம் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவர்கள் மனது நிறைவு பெற வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.இதைத்தான் நாம் சொல்ல வேண்டும்… பெருக்க வேண்டும்.

குறையைக் கண்டு… பார்த்து… பேசி… அதையே வளர்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படியே விட்டு விட்டால் அந்தக் குறை நமக்குள் வளர்ந்து கொண்டே வரும் குறையை இயக்குவதற்குண்டான தூண்டுதலாக நமக்குள் வளர்ந்துவிடும்.

இது போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி என்று வளர்த்துக் கொண்டே வர வேண்டும் நீங்கள் அனைவரும் அதைப் பெறுவீர்கள் என்று பிரார்த்தனை செய்கின்றேன் (ஞானகுரு).

Leave a Reply