கண்ணன் கீதா உபதேசம் செய்கிறான்… அதன்படி நடக்கின்றோமா…?

கண்ணன் கீதா உபதேசம் செய்கிறான்… அதன்படி நடக்கின்றோமா…?

 

உதாரணமாக நாம் ஒரு ஜவுளி வியாபாரத்திற்கு செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம் முதல் நாள் கடைகளுக்குச் சென்று சாம்பில் (SAMPLE) காண்பித்து அதை வைத்து “ஆர்டர்” எடுக்கின்றோம்.

சரக்கு நன்றாக இருக்கிறது. ஆகவே காண்பித்த சாம்பில் பிரகாரம் இத்தனை பண்டல் சரக்கைக் கொண்டு வந்து கொடுங்கள்…! என்று கேட்கின்றார்கள்.

ஆர்டர் பிரகாரம் மறு நாள் நாம் சரக்கைக் கொண்டு செல்கிறோம். ஆனால் நம் நினைவுகள் எங்கே இருக்கின்றது…?
1.ஆர்டர் கொடுத்த கடைக்காரரிடம் இருக்கின்றது.
2.இவ்வளவு விற்றால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்று அந்த மகிழ்ச்சியான சிந்தனையிலே சென்று கொண்டிருக்கின்றோம்.

மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது… ரோட்டிலே நாம் கடந்து செல்லும் பாதையிலே… ஒரு கண்ணாடி பாட்டில் உடைந்து எண்ணை எல்லாம் சிதறிக் கிடக்கிறது… அதைப் பார்த்து விடுகிறோம்.

பார்த்தவுடன்… “காலில் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்…! என்று நமக்குள் பதட்டமாகி… அறிவு கெட்ட நாய்கள்…! இப்படி நடுரோட்டில் பாட்டிலை உடைத்து போட்டுவிட்டுச் சென்று விட்டார்களே…” என்று பேச ஆரம்பிக்கின்றோம்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஏனென்றால் பார்த்தவுடன் அந்த உணர்வு என்ன செய்கிறது…? காலில் குத்தி இருந்தால் என்ன ஆயிருக்கும்…! என்று அந்த வேகம் வருகிறது.

ஆனால் தாண்டி விட்டோம்… காலில் அடிபடவில்லை…! இருந்தாலும் அதைப் பார்த்த மாத்திரத்தில் “உலகமே கெட்டு விட்டது…! நடு ரோட்டில் பாட்டிலைப் போட்டு உடைத்திருக்கின்றான் பார்…!” என்று சொல்ல ஆரம்பிக்கின்றோம்.

1.அந்த இடத்தில் நம் கண்கள் “இது கெட்டது…!” என்று உணர்த்துகின்றது.
2.அதைத் தான் கண்கள் (கண்ணன்) உபதேசம் செய்கிறான் என்று காட்டுகிறார்கள் (கீதா உபதேசம்).

எண்னணெய் சிந்தியிருக்கிறது… கண்ணாடி காலில் குத்திவிடும். அதனால் அதை ஒதுக்கி ஓரமாகப் போட்டுவிட்டு யார் அவ்வாறு செய்தார்களோ அவர்களுக்குப் பரிகாரமாக நல்லது வர வேண்டும் என்று எண்ணினால் “இது நல்ல சிந்தனை…”

ஆனால் அதற்குப் பதிலாக “அறிவு கெட்டதனமாகப் போட்டிருக்கின்றார்கள் பார்…!” என்று சொன்னால் என்ன ஆகும்…?
1.கெட்டதை நீக்கச் சொல்லித் தான் கண்ணன் (கண்கள்) வழிகாட்டுகிறது.
2.ஆனால் கெட்டதைத் தான் (அறிவு கெட்டதனமாகச் செய்தார்கள் என்று) நாம் எடுத்துக் கொள்கின்றோம்.
3.வியாபாரத்தை எண்ணி மகிழ்ச்சியாகச் செல்லும் பொழுது “காலில் குத்தியிருந்தால் நம் காரியம் தடைப்பட்டிருக்குமே…” என்று இதைத்தான் நினைக்கின்றோம்.

ஆனால் அந்தக் கெட்டதை நீக்குவதற்கு மனது வருகின்றதா…! கீதையிலே கண்ணன் இதை எல்லாம் தெளிவாகச் சொல்கிறான்.

எப்படி…?

அவன் (பாட்டிலைப் போட்டவன்) அயோக்கியத்தனம் செய்தான் என்ற எண்ணத்தை நாம் எடுக்கும் போது உதைக்க ஆரம்பிக்கின்றான். அரச தண்டனையாக நமக்குள் மாறுகின்றது (உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சி).

பொதுவாக நாம் எடுத்துக் கொண்ட குணத்தின் தன்மை நல்ல குணமாக இருந்து ஆட்சி செய்கின்றது. இருந்தாலும்…
1.இந்தச் சந்தர்ப்பம் எடுத்துக் கொண்ட எண்ணம் நீ இப்படியா செய்கின்றாய்…? என்று
2.“அது நோயாக மாறுவதற்கு” “அரச தண்டனையாக” அமைந்து விடுகிறது.

எடுத்த எண்ணம் அரசனாக ஆனாலும் அதை இயக்கக்கூடியது குரு… “குருக்ஷேத்திரம்” என்று காட்டுகின்றார்கள். இங்கே அந்தக் கேட்டதை நினைக்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை என்னை இயக்குகிறது என்றால் ஈஸ்வரா…! குருக்ஷேத்திரத்தில் உயிரை எண்ணி அவனிடம் (நல்லதை) கேட்க வேண்டும்.

கண்ணன் என்ன செய்கின்றான்…?
1.உனக்குள் அனைத்தையும் இயக்கும் உயிர் குருவாக இருக்கின்றான்
2.அவனிடத்தில் நீ முறையிடு…!

கண்ணின் உணர்வின் இயக்க நிலைகளை அன்று வியாசகர் இப்படித் தெளிவாக உணர்த்தி உள்ளான்.

குருக்ஷேத்திரப் போரில் ஈஸ்வரா என்று எண்ணும் பொழுது அந்தத் தீமை உள்ளே புகாதபடி தடைப்படுத்தப்படுகின்றது. ஈசன் அதைத் தடைப்படுத்துகின்றான்.

நாளைக்கு இந்தத் தவறு நடக்காதபடி
1.அவனுக்கு (பாட்டிலை உடைத்தவன்) நல்ல சிந்தனைகள் வரவேண்டும் என்று இங்கே நிலை நிறுத்தினால்
2.குருக்ஷேத்திரப் போரில் இது அரசனாக வந்து விடுகிறது.
3.அப்போது தீமைகள் உள்ளே புகாதபடி அந்தத் தீமைக்குத் தண்டனை கொடுத்து விடுகின்றான்.

ஆனால் அதற்குப் பதிலாக நாம் இங்கிருந்து “அறிவு கெட்டதனமாகச் செய்கிறான்…!” என்று சாபமிட்டு அவனை எண்ணும் பொழுது இந்த உணர்வு அரசாட்சியாகி நல்லதைக் கெடுக்கின்றது.

1.நான் சொல்கிறேன்… நீ அயோக்கியத்தனம் செய்து விட்டாய்…! என்று
2.உடலுக்குள் அது நோயாக மாற்றி விடுகின்றது… தண்டனை ஆகிவிடுகிறது.
3.நம் நல்ல குணங்கள் என்ன ஆகிறது…? வெறுப்பின் தன்மையாக மாறும் போது “நல்லது எல்லாம் அழிகின்றது…”
3.ஆகவே அந்தத் தீமைகளை வடிகட்டுவதற்கு மெய் ஞானிகள் உணர்வைச் சேர்க்க வேண்டும் என்று தான் கீதாச்சாரத்தில் சொன்னது.

நம் கண் எவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது…! என்று அதனுடைய உணர்வின் இயக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எண்ணியதை (கண்கள்) அலைகளாக மாற்றுகின்றான்… அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் சேர்க்கின்றான். இந்த உணர்வின் இயக்கமே அது.

ஆனால் எண்ணியதை உயிர் பிரம்மமாக இருக்கின்றான் உருவான ஒவ்வொன்றுக்கும் அவனே வழி காட்டுகின்றான். உணர்வின் தன்மையை அவனே பிரம்மனாக இருந்து சிருஷ்டிக்கின்றான். எடுத்துக் கொண்ட மணம் ஞானமாக இருந்து இயக்குகின்றது சரஸ்வதி…!

எடுத்துக் கொண்ட உணர்வின் நாதம்… எந்தக் குணத்தின் தன்மை உணர்வானதோ இயல்பான அந்த நாதம்…
1.அது இனிமையான நாதங்களாக இருந்தால் ஆனந்தமாகத் தலையை அசைக்கச் செய்கிறது.
2.ஆனால் படபடா…! கடபுடா…! என்று ஒரே சத்தமாக இருந்தால் என்ன ஏது என்று அதிர்வாகி எரிச்சலாகி முறைக்கின்றோம்.
3.எந்த வேகத்தின் உணர்வு நாதமானதோ அந்த உணர்வு நம்மை இயக்குகின்றது… வீணையின் நாதம்.

அதனால் தான் சரஸ்வதிக்கு இங்கே வீணையைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள். நாம் எந்த உணர்வின் தன்மை சுவாசித்து உராயச் செய்கின்றோமோ அந்த நாதத்தின் சுருதியே நம்மை இயக்கும்.

ஏனென்றால்
1.குருவின் ஆணைப்படி தான் இதையெல்லாம் உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம்
2.நீங்கள் தெளிவானால் உங்களுடைய மூச்சு மற்றவர்களின் கெட்டதை எல்லாம் நீக்கும்.
3.நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சு உங்கள் நோயைப் போக்க வேண்டும். அதற்காக வேண்டித் தான் இதைப் பதிவாக்குகின்றோம்.

விஞ்ஞான உலகில் நாளை வரக்கூடிய விஷமான உணர்வுகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்க முடியும். “அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்” (ஞானகுரு).

பாட்டில் உடைந்ததைப் பார்த்துத் திட்டி விட்டு அதை ஓரமாகவும் ஒதுக்கிப் போடாதபடி அப்படியே அந்த உணர்வுடன் நாம் கடைக்குச் செல்கிறோம்.

கொண்டு போன சரக்கை அவரிடம் சிரித்துக் கொண்டே காட்டுகின்றோம். ஆனால் எந்த வேகத்தை வரும் வழியில் எடுத்தேனோ எனக்கு முன்னாடி அது (ஆன்மாவிலே) இருக்கின்றது.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…!

இங்கே பாட்டில் உடைத்தவனை “அயோக்கியன்…” என்று சொல்லித் திட்டிய உணர்வு ஆன்மாவில் முன்னணியில் இருப்பதால்… துணியை எடுத்து அந்த உணர்வுடன் சொல்லப்படும் பொழுது என்ன ஆகிறது…?

என் உணர்வு பட்டவுடனே… கடைக்காரர் துணியைப் பார்க்கின்றார் பார்க்கப்படும் பொழுது
1.இங்கே ரோட்டில் எப்படி நாம் வெறுத்து பேசினோமோ
2.அவருடைய கண் இந்த வெளிப்படும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
3.அந்த அலைகள் இயக்கி நான் சொன்ன நல்ல உணர்வுடன் கலந்து அவரை இயக்குகின்றது.
4.என்னங்க…? நேற்று ஒரு சரக்கைக் காண்பித்தீர்கள். இன்று வேறு சரக்காகக் கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்று கேட்க ஆரம்பிப்பார்.

ஆனால் சாம்பிள் காண்பித்ததும் கொண்டு போன துணியும் இரண்டும் ஒரே துணி தான்…!

அது தான் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. மணி ஓசையைக் கேட்டவுடன் யானை வருகிறது என்ற உணர்வு இயக்கி நாம் ஒதுங்கிக் கொள்கிறோம்.

அது போல்
1.நம்முடைய எண்ணம் அவருக்குள் முன்னாடியே பாய்ந்து
2.அந்தக் கெடுதலான எண்ணம் நம் சரக்கை அவருக்கு மட்டமாகக் காண்பித்து விடுகிறது… வியாபாரம் போய்விடுகிறது.

நாம் என்ன நினைப்போம்…? நேற்று சரக்கைக் கொண்டு வரச் சொன்னான்.. கொண்டு வந்த பின் இந்த மனுஷன் வேண்டாம் என்று இன்றைக்குச் சொல்கிறான்…!
1.ஆக என்னுடைய உணர்வு தான் அங்கே அவனை அவ்வாறு பேச வைக்கின்றது என்பதை
2.நாம் ஏற்றுக் கொள்வதற்கு இல்லை.

இது எல்லாம் இயற்கை…!

குருக்ஷேத்திரப் போர்…! என்ற நிலையில் இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி ஆத்ம சுத்தி செய்து அதைத் துடைத்து விட்டு… “அவர்களுக்கு நாளை நல்லது நடக்கட்டும்…” என்று அங்கே சொல்லிவிட்டு தீமையை அப்புறப்படுத்தி விட்டு நாம் செல்ல வேண்டும்…!

ஆகவே… ஒன்பதாவது அவதாரத்தில் இப்போது இருக்கின்றோம். அடுத்து “கல்கி அவதாரம்…” என்றால் உயிரின் தன்மை ஒளி கொண்டு விஷத்தின் தன்மையை நீக்கி… நிலையாக நின்று ஒளியின் சரீரமாகப் பறந்து செல்வது (குதிரை மீது) கல்கி…!
1.உணர்வின் தன்மை வேகத்தின் துடிப்பு கொண்டு எதிலே இருக்கின்றதோ
2.வாளை வைத்துக் குதிரையைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
3.ஒளியின் சரீரமாகச் செல்லும் “கல்கி அவதாரத்தின் வேகங்கள் வேறு…”

பத்தாவது நிலை அடையப்படும் பொழுது ஒளியின் தன்மையாகக் கல்கி அவதாரமாகப் போகின்றோம். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply