குருவிடம் யாம் அனுபவபூர்வமாகப் பெற்ற “உயர்ந்த சக்தி”

குருவிடம் யாம் அனுபவபூர்வமாகப் பெற்ற “உயர்ந்த சக்தி”

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் அனுபவம் பெறுவதற்காக யாம் (ஞானகுரு) கன்னியாகுமரியில் இருந்து வடக்கே சைனா பார்டர் வரை சென்று வந்தது தான்.

என் கால்களிலே எத்தனையோ ஆணிகள் உண்டு. இமயமலையின் மீது செல்ல வேண்டுமென்றால் வெறும் கோவணத் துணியுடன் தான் செல்ல வேண்டும்.
1.குருநாதர் சொன்ன முறைப்படி அவர் எதை எண்ணும்படி சொன்னாரோ
2.அதை எண்ணிக் கொண்டுதான் அங்கே செல்ல வேண்டும்.

நடந்து செல்லும் வழியில் ஒரு சுடு தண்ணீர் குளம் இருந்தது. அங்கே சூடு கதகதப்பாக இருந்ததால் அந்த இடத்திலே அமர்ந்து குருநாதர் சொன்னதைச் செய்யலாம்…! என்று நினைக்கின்றேன்.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கின்றார். நீ இங்கே குளிர் காய வரவில்லை… குளிர் அடிக்கும் இடத்திலே போய் உட்கார்…! என்றார்.

விண்ணுலக ஆற்றல் அனைத்தையும் நினைவு கொண்டு எடுத்துக் கொண்டிருந்தேன்.
1.ஒரு முக்கியமான ஒன்றைச் சொன்னார்…
2.அதை நீ எண்ணும் போது இன்ன நிலை இருக்கும். உனக்குக் குளிர் வராது உன்னைப் பாதிக்காது
3.அதே சமயத்தில் உன் நினைவுகள் அனைத்தும் விண்ணை நோக்கிச் செல்லும்… துருவ நட்சத்திரத்துடன் உன்னை இணைக்கும்
4.அன்று அகஸ்தியன் எவ்வாறு நஞ்சினை ஒடுக்கினானோ அந்த சக்தி உனக்குள் பெருகும்
5.உன் உணர்வின் தன்மை உயர்த்த இது உதவும் என்று சில முறைகளைச் சொன்னார்.

அவ்வாறு செய்து கொண்டிருந்தேன்..!

ஆனால் முதலில் நடந்து செல்லும்போது அது சைனா பார்டராக இருப்பதால் அங்கு இருப்பவர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகின்றார்கள் என்னென்னமோ சொல்கிறார்கள்…! எனக்கு ஒன்றும் புரியவில்லை… கண்களை இறுக்கி மூடி விட்டேன்.

நடந்து செல்லும் போது காலை வைத்தால் முழங்கால் வரை உள்ளே செல்கின்றது. பனி முழுமையாக உறையாமல் இறுகலாக இல்லாதபடி கால் உள்ளே செல்லும்படியாக பொல பொல என்று இருக்கின்றது. கால் எல்லாம் கடு..கடு.. என்று இருக்கின்றது.

1.அத்தகைய பனிக்குள் கால் அதிக நேரம் இருந்தால் உணர்ச்சியற்றுப் போகும்
2.உன் கால் அழுகிப் போய்விடும் என்று ஏற்கனவே குருநாதர் சொல்லி இருக்கின்றார்.

அங்கே எப்படிச் சென்றாலும் என் உணர்வு குரு கொடுத்த சக்தியை மறந்து செயல்படும் பொழுது கடுகடுப்பு அதிகம் ஆகிவிட்டது. கடுகடுப்பு அதிகமான பின் என் நினைவுகள் எப்படி வருகிறது…?

இப்படி ஆகிவிட்டதே… ஊரை விட்டு இங்கு வந்து விட்டோமே… என் பையன் அவன் என்ன செய்கிறானோ…? என்று நினைவு வந்து விட்டது. உடனே என் இருதயம் குளிரினால் கிர்… என்று இறைய ஆரம்பிக்கின்றது. சரி… இதோடு எல்லாம் முடிந்துவிடும் போலிருக்கின்றது என்ற எண்ணம் தான் வருகின்றது.

உடலின் பற்று வரும் பொழுது அந்த இடத்தில் இத்தனை இம்சைகளும் வருகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்து காக்கப்பட வேண்டும் என்றால்
1.குரு சொன்ன நினைவை எடுக்க வேண்டும்
2.உன்னைக் காக்க வேண்டும் என்றால் நீ அந்த உயர்ந்த சக்தியை எடுத்தே ஆக வேண்டும்.
3.உயர்ந்த சக்தியைப் பெற்றால் தான் உன் குழந்தையைக் காக்க முடியும்
4.உடலில் காக்கும் உணர்வு இருக்கின்றது… அதைச் செயல்படுத்த வேண்டும் என்றால் உயர்ந்த சக்தி எடுக்க
5.இந்த உடல் தேவை…! என்று இப்படி உபதேசிக்கின்றார்.

குருவை எண்ணி அவர் கொடுத்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

உலக மக்கள் அனைவரும் எத்தனையோ வகையில் சிக்குண்டுள்ளனர்.. வேதனையில் உழன்று கொண்டுள்ளனர். அதிலிருந்து மீட்ட “அந்த அருள் ஞானிகள் உணர்வை எல்லோரும் பெற வேண்டும்…” என்று எண்ணும்படி சொன்னார்.

விண்ணை நோக்கி ஏங்கி அந்தச் சப்தரிஷி மண்டலங்களை ஊற்றுப் பார்த்து… இருளை மாய்த்து உணர்வை ஒளியாக மாற்றிடும் அந்த உணர்வை நுகரும் பொழுது இங்கே இருள் மறைகின்றது.

இந்த இடத்திலே
1.எல்லோருக்கும் சேர்த்து வேதனைப்படுவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று நீ எண்ணு.
2.உன் பிள்ளைக்கு மட்டும் என்று தனித்துக் கேட்காதே…! என்று குருநாதர் சொன்னார்.

பாச உணர்வுகள் என்னை எப்படி இயக்குகிறது என்பதை உணர்த்துகின்றார். பழனியில் அங்கே காட்சி தெரிகின்றது வீட்டில் என் பையன் ரோட்டின் முச்சந்தியில் உட்கார்ந்து நானா… நானா… (நைனா) என்று என்னைச் சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

அவனுக்கு மூலம்…! இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கின்றது இமயமலையில் இருந்து பார்த்தால் எனக்கு எப்படி இருக்கும்…? குரு அனைத்தையும் குரு காண்பிக்கின்றார்.

ஆக அவன் வேதனைப்படுவதை எண்ணும் பொழுது தான் எனக்குள் இருள் சூழச் செய்கிறது… இருதயம் இறைய ஆரம்பித்தது. அப்போது என் பையனைக் காக்கும் எண்ணமே எனக்கு வரவில்லை.

அவனை எண்ணி வேதனைப்படும் நிலையில் அந்த வேதனை என்ற நஞ்சு உன்னை எப்படிச் செயலற்றதாக மாற்றுகின்றது…? ஆதை மாற்ற நீ என்ன செய்ய வேண்டும்…? இந்த உணர்வின் இயக்கங்களில் இருந்து நீ எவ்வாறு மீள வேண்டும்…? என்ற உண்மையை இமயமலையில் வைத்து அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

உங்களிடம் இப்போது லேசாகச் சொல்லுகிறேன்… நீங்கள் அமர்ந்த இடத்திலிருந்து தெரிந்து கொள்கின்றீர்கள்.
1.ஆனால் இதைக் கேட்டுவிட்டு அந்தப் பக்கம் சென்ற பின் மறந்து விடுகின்றீர்கள்
2.சாமி என்ன சொன்னார் தெரியவில்லையே…! என்று விட்டு விடுகின்றீர்கள்.

குருநாதர் என்னைக் கடுமையான கஷ்டங்களுக்கு உள்ளாக்கித் தான் இந்தப் பேருண்மைகளை உணர்த்தினார்.
1.என்னால் மறக்காது…
2.குரு காண்பித்த அந்த உயர்ந்த சக்தியை எடுக்க முடிகின்றது.

கஷ்டப்பபட்டுப் பெற்ற அந்த உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன். ஆனாலும் சாமி பிரமாதமாகப் பேசுகிறார்… இதை என்ன என்று சொல்வது…! என்று பெருமை பேசி விட்டுச் சென்று விடுகிறார்கள்.

உபதேசத்தைக் கேட்டு விட்டு வீட்டிற்குச் சென்றால் அங்கிருக்கக் கூடிய சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி பக்கத்து வீட்டுக்காரர் இவ்வாறு செய்கின்றார் என் அப்பா இப்படிச் சொல்கிறார்… என் பிள்ளை இப்படிச் செய்கின்றான்… எனக்கு ஒரே கஷ்டமாக இருக்கிறது என்ற உணர்வுகள் தான் உங்களுக்குள் வருகின்றது.

அதை எல்லாம் மாற்றுவதற்கு தான் இந்த உண்மைகளை உங்களுக்கு தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம். நீங்கள் எங்கு சென்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் யாம் சொல்லிக் கொடுத்த பக்குவம் கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.பார்க்கும் அனைவரையும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வேன்
3.எங்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும்
4.என்னை பார்க்கும் அனைவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து வாழ வேண்டும்
5.அவர்கள் குடும்பங்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும்
6.என்னைப் பார்க்கும் பொழுதும் என்னை நினைக்கும் பொழுதும் அவர்களுக்குள் நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று
7.இப்படித்தான் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது என்பதை அந்த பனிப்பாறைகளுக்கு மத்தியிலே எனக்கு குருநாதர் அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

நீங்கள் இங்கிருந்தே அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும். குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களை அறியாத இருங்கள் நீங்க வேண்டும். மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும். அனைவருக்கும் இது கிடைக்க வேண்டும் என்று
1.ஏகோபித்து நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன்.
2.குரு இட்ட ஆணைப்படி இதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

Leave a Reply