அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமாக நாம் செய்ய வேண்டியது

அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமாக நாம் செய்ய வேண்டியது

 

பாசத்தால் குடும்பத்தில் பிள்ளைகளுக்கு என்று எவ்வளவோ செய்வோம் “என் பையன் எப்படி வருவான் தெரியுமா…? என்று…!”

ஆனால் அவனுடைய சந்தர்ப்பம் கெட்டவர்களோடு பழக நேரும் பொழுது அவர்கள் உணர்வெல்லாம் சேர்ந்தபின் சில தவறான வேலைகளை அவன் செய்ய ஆரம்பிப்பான்.

1.சில வீடுகளில் பார்த்தால் ஒரே பிள்ளை என்று வைத்திருப்பார்கள்.
2.ஆனால்… அவனுடைய செயலைப் பார்த்தாலே தெரியும்… அவன் இஷ்டத்திற்குச் செயல்பட்டுக் கொண்டிருப்பான்.

டேய் கண்ணு இப்படிச் செய்யடா… அப்படிச் செய்யாதடா…! என்று அவனை மிகவும் கெஞ்சுவார்கள்… எதுவாக இருந்தாலும் அதை நயமாகத்தான் சொல்வார்கள்.

அவனும் உம்.. உம்.. சரி… சரி…! என்றே சொல்வான்.

ஆனால் அடுத்து அவனுக்குள் அந்த விஷத்தின் தன்மை அவனுடைய சேர்க்கையால் (அவனுடன் பழகுபவர்கள்) வந்து விட்டால் மீண்டும் தவறைத் தான் செய்வான். இதைத் தெரிந்து ரொம்ப ஏதாவது ஆகிவிட்டால் உடனே வீட்டிலே கோபித்துக் கொண்டு வெளியே சென்று விடுவான்.

அது போன்ற சந்தர்ப்பத்திலே நல்ல வழிகளை அவனுக்குச் சொல்லக்கூடிய நிலை இல்லாது போய் விடுகின்றது. அவன் கோபித்து வெளியே சென்ற பின் இவர்கள் தாய் தந்தையர்கள் மிகவும் வேதனைப்படுவார்கள்.

செல்வங்கள் கோடி இருப்பினும் அவர்களால் அடுத்து அந்தச் செல்வத்தை நாட முடியாது. குழந்தையோ விலகிப் போய்க் கொண்டிருப்பான். என் தாய் தந்தை என் மீது கோபித்து விட்டார்கள்… என்னை மறுத்து விட்டார்கள்… என்று சோறும் தண்ணீரும் இல்லாமல் வாடிக் கொண்டிருப்பான்.

செல்லமாகக் குழந்தைகளை வளர்க்கக்கூடிய குடும்பத்தில் இதைப் பார்க்கலாம்…!

இதை மாற்றி அமைக்க என்ன செய்ய வேண்டும்…?

செல்வத்தையே (எண்ணிக் கொண்டிருப்பதை) மறந்து
1.எதுவாக இருந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
2.அருள் ஞானச் செல்வம் பெற வேண்டும் என்றும் இந்த உணர்வின் தன்மை கூட்டி விட்டால்
3.அந்தக் குழந்தையை நாம் சீர்படுத்த முடியும் (வீட்டை விட்டு வெளியில் செல்ல மாட்டான்).
4.அவனும் செல்வத்தை மறப்பான்… அருள் ஞானச் செல்வத்தை வளர்த்திடும் நிலையாக வருவான்.
5.ஏனென்றால் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

என்னமோ சாமி சொல்கின்றார்… ஏதோ கேட்டோம்… சாமி நன்றாகச் சொன்னார்…! என்று சாதாரணமாக எண்ணி விடாதீர்கள்…!

மற்றவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுப் பதிவாக்கிக் கொண்ட பின் எல்லோரும் சொல்வது மாதிரித் தான் “இந்தச் சாமியும் சொல்கின்றார்…” என்று சொல்லி வேதனையைத் தான் வளர்த்துக் கொள்கின்றார்கள்.

யாம் சொல்லக்கூடியதை ஆர்வமாகக் கேட்டாலும் அதில் உள்ள தத்துவங்களை எண்ணினாலும் அடுத்தாற்போல் பிறரின் உணர்வுகளைக் கலந்து கொண்ட பின் அவர் சொல்லும் குறையை வளர்த்து “இப்படிச் சொல்லி விட்டாரே…!” என்று எண்ணினால் அதைத் தான் வளர்க்க முடியும்.
1.அந்த வேதனைகள் வளர்ந்து விட்டால்
2.நான் கொடுத்த ஞான சக்தி அந்த நஞ்சுக்குள் மறைந்து விடுகின்றது

ஆனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் மன உறுதி கொண்டு வேதனையை எடுக்காது மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று தானும் பெற வேண்டும்… தன்னைச் சார்ந்தவர்களும் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

“இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம்…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் குடும்பம் முழுவதும் அது படர வேண்டும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பெற வேண்டும் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணி “அந்த உணர்வோடு நாம் உறங்கச் செல்ல வேண்டும்…”

மற்றவர்களுக்கு நீங்கள் ஆர்வத்தில் நல்லதைச் சொன்னாலும் கூட மற்றவர்கள் கேட்கவில்லை என்றால் அந்த உணர்வு மாறத்தான் செய்யும் அந்தச் சந்தர்ப்பத்தில் குறையைத் தான் வளர்த்துக் கொள்வோம்.

நல்லதைச் சொல்ல வேண்டும் என்று நினைப்போம்… ஆனால் அந்த எண்ணத்திற்கு மாறாக வேதனையை எடுத்த பின் நல்ல குணங்கள் இங்கே மறையத் தொடங்குகிறது.

1.இப்படி ஒரு நான்கு பேரிடம் சொல்லிவிட்டு எதிர்மறையானால் நமக்குள்ளேயே அந்தக் கலக்கம் வந்து விடுகின்றது.
2.சாமி ஆத்ம சுத்தி செய்யச் சொன்னார் என்பதையே விட்டுவிடுவீர்கள்
3.என்ன வாழ்க்கை…? என்ன நல்லதைச் சொன்னாலும் இப்படித்தான் இருக்கின்றது என்று
4.தனக்குள்ளேயே எதிரிகளை தேடிக் கொள்வார்கள்…!

இப்படித் தான் நாம் இருக்கின்றோம்.

இதைப் போன்று வராது தடுக்க வேண்டும் என்றால் நமது வாழ்க்கையில் எப்போதுமே…
1.அன்றாடம் நாம் சந்தித்தோர் அனைவருக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று
3.இரவில் உறங்கும் முன்னும் சரி… காலையில் எழுந்தவுடனும் சரி… இது போன்று எண்ணிக் கொண்டு வாருங்கள்.
4.வேறு எதுவும் எண்ண முடியவில்லை என்றாலும் இதை நீங்கள் ஒரு சுருக்கமாக வைத்துக் கொண்டாலே போதுமானது
5.இந்த நினைவினை அதிகமாக வளர்த்துக் கொண்டால் ஆன்மாவிலே இது உணர்வு வலுவாகும்
6.நீங்கள் எடுத்துக் கொண்ட இந்த எண்ணம் உங்களைக் காக்கும்.

நம் வாழ்க்கையில் உங்களுக்கு வேண்டாதவர்களோ எதிரிகளோ இருந்தால் அவர்கள் சிரமப்பட்டால் “அப்படித்தான் வேண்டும்…” என்று அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாதீர்கள்.

அதே போன்று உங்கள் வேண்டியவர்களுக்கு ஏதாவது கெடுதல் ஆகிவிட்டால் “ஐயோ கஷ்டம் வந்துவிட்டதே… என்று வேதனைப்படாதீர்கள்…!” தன் பிள்ளை “சொன்னபடி கேட்கவில்லையே…” என்று வேதனைப்படாதீர்கள்…!

இதெல்லாம் மிகவும் முக்கியமானது…!

எனென்றால் வேதனை என்றாலே நஞ்சு…! எவ்வளவு சுவை மிக்க ஒரு சத்துள்ள பதார்த்தமாக நாம் உருவாக்கினாலும் அதிலே ஒரு துளி நஞ்சு பட்டால்… அதை உட்கொண்டால் நம்மை மயங்கச் செய்து நினைவை இழக்கச் செய்து விடுகிறது.

அது போலத் தான்
1.தன் பிள்ளைகளோ உறவினர்களோ அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்துத் தானும் வேதனைப்படுவதோ…
2.தனக்கு வேண்டாதவர்கள் வேதனைப்படுவதைக் கண்டு அதை ரசிப்பதோ…
3.இவையெல்லாம் நம் நல்ல குணங்களை முழுமையாக விழுங்கிவிடும்
4.பின் நல்லதைத் தேடிப் பிடிப்பதே மிகவும் கஷ்டமாகிவிடும்.

அதற்குத்தான் தீமை என்று தெரிந்தாலே “அடுத்த கணம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்…” என்று சொல்கிறோம். ஆத்ம சுத்தியின் மூலம் எடுத்துக் கொண்ட வலுவான உணர்வு கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ள முடியும்…!

Leave a Reply