உலக மக்களை அருள் ஞானத்தின் பாதையில் அழைத்து வரும் அளவிற்கு “நீங்கள் தயாராக வேண்டும்”

உலக மக்களை அருள் ஞானத்தின் பாதையில் அழைத்து வரும் அளவிற்கு “நீங்கள் தயாராக வேண்டும்”

 

இந்த வாழ்க்கையில் உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து மீள வேண்டும் என்பதற்குத்தான் தியானம் செய்யும் முறைகளையும் ஆத்ம சுத்தி செய்யும் பயிற்சிகளையும் கொடுக்கின்றோம்.
1.இங்கே கொடுக்கப்படும் உபதேசங்களைத் திரும்பத் திரும்பப் படியுங்கள்
2.உங்களுக்குள் பதிய வைத்துக் கொள்ளுங்கள்
3.பொழுது போக்காகவே இதை வைத்துக் கொள்ளுங்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றி வாழுங்கள். எல்லோரும் நலம் பெற வேண்டும் என்று ஏங்குங்கள். அவர்கள் நலமாக வாழ்வதைக் கண்டு நீங்கள் மகிழுங்கள்.

ஆகவே… இதைப் போன்ற மகிழ்ச்சியின் தன்மையை உங்களுக்குள் வளர்த்து இருள் சூழா நிலை கொண்டு அடுத்து இந்த உடலை விட்டு அகன்றால்
1.துருவ நட்சத்திரத்தினைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக எப்படி ஆனார்களோ அதனுடன் நாம் அனைவரும் இணைவோம்.
2.இதை நாம் உறுதிப் படுத்திக்கொள்வோம்… நம்முடைய வாழ் நாள் அங்கே தான்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் சேமித்த செல்வம் எதுவுமே நம்முடன் வருவதில்லை… வரப் போவதுமில்லை. ஏன்…! நம் உடலே நம்முடன் வருவதில்லை.

உடலில் விளைய வைத்த உணர்வுகள் எதைக் கவர்ந்தோமோ அதன் வழி அங்கே தான் நம்மை அழைத்துச் செல்லும். நமக்குத் தீங்கு செய்தான் தீங்கு செய்தான் என்ற உணர்வை வளர்த்தோம் என்றால் மீண்டும் கீழே செல்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட்டு என்றுமே நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

ஆகவே, நீங்கள் எல்லோரும் அந்த அருள் ஒளியைப் பெருக்குதல் வேண்டும். நோய்களைப் போக்கும் ஆற்றல் பெற வேண்டும். விஷத் தன்மைகள் நமக்குள் புகாது தடுத்துப் பழகுதல் வேண்டும்.
1.நமக்குள் பெருக்கிய இந்த ஆற்றல்களை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்தல் வேண்டும்.
2.மற்றவர்கள் அதை ஏங்கிப் பெறும் போது அவர்களின் தீமைகளைப் போக்கும் நிலைகளுக்கு “நீங்கள் தயாராகுதல் வேண்டும்…”

அதன் வழி நாம் செய்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் அருள் ஒளிச் சுடரான அந்த மகரிஷிகளுடன் நாம் ஒன்றி வாழலாம்.

இந்த உடலின் ஆசைக்குப் பொருளுக்கும் புகழுக்கும் சென்றால் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் வந்து மீண்டும் நரகலோகத்தைச் சந்திக்கும் நிலை வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். நீங்கள் எல்லாம் “அருள் ஞானிகளாக உயர வேண்டும்…” என்பதே எமது தவம்.

என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது…
1.மக்கள் எல்லோரையும் அருள் வழியில் ஞானத்தின் பாதையில் அழைத்து வரும் அளவிற்கு நீங்கள் தயாராக வேண்டும்.
2.நான் ஒருவனே சொல்லிக் கொண்டிருக்க முடியாது… நீங்கள் அந்த நிலைக்கு வாருங்கள்.

இந்த உலகமும் காற்று மண்டலமும் நச்சுத் தன்மையிலிருந்து விடுபட வேண்டும். மக்களை அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழப் பழக்க வேண்டும்.

உங்களால் முடியும்… நிச்சயம் நீங்கள் செய்வீர்கள்…!

Leave a Reply