இறந்தார்கள் என்றால் சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கின்றோம்… சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை ஆற்றிலே கரைக்கின்றோம்… ஏன்…?

இறந்தார்கள் என்றால் சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கின்றோம்… சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை ஆற்றிலே கரைக்கின்றோம்… ஏன்…?

 

களிமண்ணால் விநாயகர் சிலையைச் செய்து… பின் அதைப் பூஜித்து ஒன்பது நாட்கள் கழித்து ஆற்றிலே கொண்டு போய்க் கரைத்து விடுவார்கள்.

ஏனென்றால் களிமண்ணால் விநாயகர் சிலையைச் செய்து… அதை வைத்துப் பூஜித்து விட்டுக் கடைசியில் நீரிலே கரைக்க வேண்டும். இது தான் விநாயகர் சதுர்த்தி என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

ஆக… சதுர்த்தி என்றாலே “என்ன…?” என்று புரியாத நிலையில் தான் நாம் இன்று இருக்கின்றோம்.
1.மனித வாழ்க்கையில் இனி பிறவியில்லா நிலை அடையும் கடைசி நிலை தான் விநாயகர் சதுர்த்தி என்பது
2.தீமைகள் நமக்குள் எவை இருப்பினும் அவைகளை நீக்கி நாம் நமது ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவது தான் இந்த நிலை.

ஒரு பருப்பை (மண்ணிலே விளைந்ததை) வேக வைத்தால் அது மீண்டும் முளைக்குமா…? வேக வைத்த பொருள் ஒரு போதும் முளைக்காது.

மனிதனாக நாம் வளர்ந்து வந்த நிலைகளிலில் நம் உடலிலே எத்தனையோ விதமான தீய வினைகள் உண்டு.
1.அந்தத் தீயவினைகளை நமக்குள் வளர்க்காது தடுப்பது எப்படி…?
2.தீமைகள் விளையாது தடுக்க வேண்டும் என்றால் விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்…?
3.என்ன செய்தால் நம் உடலில் இருக்கும் தீவினைகள் வளராது தடுக்க முடியும்…? என்று
4.அதை எல்லாம் நமக்கு நினைவுபடுத்தும் நாள் தான் விநாயகர் சதுர்த்தி.

நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…? துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்து நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.

அதிகாலையில் நான்கு மணிக்கு எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நாங்கள் பார்த்த குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும் அவர்கள் நோயிலிருந்து விடுபட வேண்டும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் தொழில் வளம் பெருக வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று இப்படி எல்லோரும் சொன்னால் என்ன ஆகும்…?

1.சூரியன் இந்த தீய வினைகளை எல்லாம் இழுத்துக் கொண்டு ஓடியே போய்விடும்
2.பரமாத்மா (காற்று மண்டலம்) தூய்மை அடைந்து விடும்… நம் ஆன்மா சுத்தமாகும்… நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் சுத்தமாகும்.

ஒரு வருடம் முழுவதும் நாம் பிறருடைய குறைகளைக் கேட்டுணர்ந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்த பின் அதை நம் உடலிலிருந்து கரைத்திடல் வேண்டும்.

அதற்காகத்தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் உருவத்தை உருவாக்கி… தான் வளர்ந்த நிலையை நினைவில் கொண்டு… அறியாது சேர்ந்த தீமைகளைக் கரைத்துவிடும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சாஸ்திரங்களில் இது உண்மை…!

எப்படிக் களிமண்ணில் செய்து நாம் கடலில் கொண்டு கரைக்கின்றோமோ இதே போல மனிதனின் உடலில் விளைந்த இந்தத் தீமைகளைக் கரைத்திடல் வேண்டும்.
1.அதாவது சிலையை அங்கே கரைப்பது போல்
2.மீண்டும் மீண்டும் நாம் இந்தப் பூமியில் இன்னொரு உடல் பெறாதபடி
3.உடல் பெறும் உணர்வுகளைக் (உடலை) கரைக்க வேண்டும்.

விநாயகர் சிலையைக் கரைக்கின்றோம். இறந்தார்கள் என்றால் சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கின்றோம்.
1.ஆனால் உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கின்றோமா…?
2.வேகா நிலை அடைய முற்படுகின்றோமா…?

சாதாரண மக்களும் தீமையிலிருந்து விடுபடுவதற்கு… உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதற்கு இவ்வளவு அழகான நிலைகளில் ஞானிகள் நமக்கு வடித்துக் கொடுத்திருக்கிறார்கள். “நாம் யாராவது அந்த ஞானிகளை மதிக்கின்றோமா…?”

Leave a Reply