உயிருடன் ஒன்றி என்றும் ஒளி என்ற உணர்வுகளை உருவாக்கும் நிலை தான் கல்கி

உயிருடன் ஒன்றி என்றும் ஒளி என்ற உணர்வுகளை உருவாக்கும் நிலை தான் கல்கி

 

இந்த உடலில் சிறிது காலமே நாம் வாழ்கிறோம். நமக்கு இந்த உடலும் சொந்தமில்லை. இதிலே தேடிய செல்வமும் சொந்தமில்லை. காரணம்…
1.செல்வத்தைத் தேடிய பின் உடலில் முதுமை அடையப்படும் போது கவலையும் வேதனையும் தான் வருகிறது.
2.தன் பையன் என்ன செய்யப் போகின்றான்..?
3.இவ்வளவு பொருளையும் விட்டுவிட்டுச் செல்கிறேன்… என்ன ஆகப் போகிறதோ…? என்ற
4.இந்த உணர்வின் பற்று தான் வருகிறது… அந்த நினைவுடனே இந்த உயிர் உடலை விட்டுச் செல்கிறது.

பின் யார் மேல் எந்தப் பற்று வருகிறதோ மீண்டும் பிறவிக்கே வருகிறது. இவரின் உடல் கூட வருகிறதா என்றால் இல்லை.
1.இவர் தேடிய ஆசையின் உணர்வே கூடச் செல்கிறது.
2.அந்த உணர்வு கொண்டு தான் அடுத்த உடலாக மாற்றுகிறது
3.மீண்டும் அதிலே வேதனையைத் தான் தேடுகிறது.

ஆகவே நாம் இப்போது ஆசையின் நிமித்தம் கலியில் சிக்கி மீண்டும் உடல் நிலையே பெறுகின்றோம்.

இதிலிருந்து விடுபடும் நிலையாக இந்த உடலில் நல்ல நினைவு இருக்கும் போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதன் உணர்வின் தன்மை கொண்டு நாம் பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

நாம் பல கோடி உடல்களில் சேர்த்துக் கொண்ட “கார்த்திகேயா…” எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் அறிவு… தீமை என்ற நிலைகள் புகாதபடி தணித்துக் கொள்ளும் சக்தி தான் ஆறாவது அறிவு.

1.தீமை என்று தெரிந்து கொண்ட பின் “வள்ளி…” அந்த வலிமையான சக்தியின் துணை கொண்டு
2.வலிமை பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உயிரிலே படும் போது
3.அது தெய்வ ஆணையாகத் தீமைகளை நீக்கும் உணர்ச்சிகளாக உடலுக்குள் வருகிறது.

ஆக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால் நம் உயிரிலே அது கிரியையாகி அந்த ஞானத்தின் வழி நம் வாழ்க்கையை அமைக்கின்றது.

நாம் பெற்ற இச்சைகள் நம் உடலில் கிரியையாகி அந்த ஞானத்தின் வழியாக நம் வாழ்க்கை அமைந்து உயிருடன் ஒன்றிய ஒளியாகப் பிறவி இல்லா நிலை அடைவதே கல்கி… கடைசி நிலை.

உடல் என்ற ஆசை வராதபடி என்றுமே இந்த உயிர் எல்லா உலகையும் காட்டுவதற்கு எல்லா உணர்வையும் ஊட்டியது. ஆகையினால் அந்த உயிரைப் போன்று உணர்வின் ஒளியாக நாம் மாறுதல் வேண்டும்.

1.நாம் உயிருடன் என்றுமே ஒன்றி ஒளியான நிலை பெற வேண்டும்
2.உடலான நிலைகள் மாறி அந்த ஒளியான நிலைகள் பெற வேண்டும் என்பது தான் நம் குரு காட்டிய அருள் வழி.

அதனால் அதை நாம் உருவாக்குவோம் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).

இதைப் படிப்போர் அனைவரும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற்று… இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி… மெய்ப் பொருளைக் காணும் அருள் சக்தி பெற்று… கலியை அகற்றிக் கல்கியாக மாறி… ஆனந்த நிலை பெற்று… என்றும் ஏகாந்த நிலை பெற எல்லா மகரிஷிகளையும் வேண்டிக் கொள்கிறேன்.

Leave a Reply