உதவி செய்கிறோம் என்றாலும் அது நமக்கு உபத்திரவமாக ஆகிவிடக் கூடாது

உதவி செய்கிறோம் என்றாலும் அது நமக்கு உபத்திரவமாக ஆகிவிடக் கூடாது

 

யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தத் தியானத்தை கணவன் மனைவி எடுத்து… இருவரும் ஒன்று சேர்ந்து வாழக்கூடிய பக்குவத்தையும்… குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கக்கூடிய நிலைகளையும்… குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற நிலைகளையும்… நீங்கள் அனைவரும் வழி நடத்திக் காட்ட வேண்டும். மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஆனால்
1.கேட்காதவருக்குச் சொன்னீர்கள் என்றால் அங்கே வெறுப்பு தான் வரும்
2.உங்களை அணுகி வருவோருக்குத் தான் சொல்லிப் பழக வேண்டும்.

அணுகி வராதவருக்கு இந்தக் கருத்துக்களைச் சொன்னோம் என்றால் உங்களை அசுத்தமான நிலைகளில் பேசத் தொடங்கிவிடுவார்கள்.

பாலுக்குள் காபித் தூளையும் இனிப்பையும் போட்டால் நன்றாக இருக்கும். ஆனால் அதிலே விஷத்தைப் போட்டுக் குடித்தால் எப்படி இருக்கும்…?

சிலருடைய உணர்வுகள் அப்படி இருக்கும்.

அந்த மாதிரி இருந்தாலும்… அவர்களும் நல்ல நிலைகள் பெற வேண்டும் என்று நாம் தியானித்து அவர்கள் பொருளறியும் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நாளடைவில் அவர்களுடன் பேச்சு வேறு வகையில் தொடரப்படும் போது அவர்கள் திருந்தி வாழும் அல்லது சிந்திக்கச் செய்யும் தன்மைகள் அவர்களுக்குல் ஏற்படும்.

இதை எல்லாம் நம் மனித வாழ்க்கையில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதே போன்று உயர்ந்த மனிதர்களாக இருப்பார்கள். எல்லோருக்கும் உதவியும் செய்திருப்பார்கள். ஆனால் உதவி செய்த நிலையில் உதவி பெற்றவர் சந்தர்ப்பத்தில் இறந்து விடுகிறார்.

அந்தக் கடைசி நேரத்தில்…
1.”இன்னார் தான் எனக்கு உதவி செய்தார்…” என்ற எண்ணத்தில் அந்த ஆன்மா பிரிந்தால்
2.உதவி செய்தவருக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்…? என்ற எண்ணத்துடன் பிரிந்தால்
3.உதவி செய்தவருடைய உடலுக்குள் இந்த ஆன்மா வந்துவிடுகின்றது.

ஆனால் அவர் தவறு செய்யவில்லை… உதவி தான் செய்தார்.

ஆகவே அந்த மாதிரி உதவி செய்தாலும் உடலை விட்டுப் பிரியும் ஆன்மா உடலுக்குள் வராது தடுக்க வேண்டும் என்றால் உதவி எப்படிச் செய்ய வேண்டும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும் எந்த உதவி வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் செய்யலாம்.

உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா… என்று எண்ணி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் என்று உடலுக்குள் பாய்ச்சி விட்டு
3.யாருக்கு உதவி செய்கிறோமோ அவர்கள் உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
4.அந்தக் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று சொல்லி
5.இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்… நீங்கள் நலம் பெறுவீர்கள்… என்ற அருள் உணர்வினை வாக்காகக் கொடுக்க வேண்டும்.

அதே சமயத்தில் அவர் வேதனைப்படுவதை எண்ணி நாம் எடுத்துக் கொண்டால் அந்த வேதனைக்கு வலிமை அதிகம்… நம்மையும் வேதனைக்குள்ளாக்கிவிடும்.

ஆனால் அதை எல்லாம் அடக்கியவன் மகரிஷி.
1.அதை நாம் எடுத்துப் பழக்கப்படுத்தி
2.இதைச் சொல்லித் தான் நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

அடுத்தவருக்கு உதவி செய்யும் முன் இதை முதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்றாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு நமக்குள் மகரிஷிகளின் உணர்வை வலுவாக ஏற்றிக் கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்து அவரின் நோயைப் பற்றிக் கேட்டறிந்த பின் அவரின் உணர்ச்சிகள் நம்மைத் தாக்காதபடி மேலே சொன்ன மாதிரி எடுத்து அதைச் சமப்படுத்த வேண்டும்.

அதற்குப் பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி நோயாளியின் உடலில் படர வேண்டும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி அவர் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானங்களில் இவ்வாறு செய்து அவருடைய நோய்களை நீக்கவும் அவர்கள் குடும்பத்தில் மன பலம் பெறச் செய்யவும் இதைப் போன்ற ஒரு நிலைக்கு வரவேண்டும்.

நாம் ஒவ்வொருவருமே இத்தகைய ஒரு பழக்கத்திற்கு அவசியம் வரவேண்டும்.

Leave a Reply