அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பேரானந்த நிலை அடைவதற்கு குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்

அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பேரானந்த நிலை அடைவதற்கு குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்

 

எனக்குள் (ஞானகுரு) இருளச் செய்து கொண்டிருக்கும் உணர்வுகளை நான் அறிந்திடும் வண்ணமாக குருநாதர்… அவருக்குள் அறிந்திடும் சக்தியாக வளர்த்துக் கொண்ட உயர்ந்த உணர்வுகளைச் சொல்வாக்காக எனக்குள் பதிவு செய்தார்.

அவர் கொடுக்கும் அந்த அருள் சக்திகள் எவ்வாறு இயங்குகின்றது என்று எனக்கு உணர்த்தி… அந்த அருள் ஞான வித்துக்களை எனக்குள் குருநாதர் விளையச் செய்திருந்தாலும்
1.என்னுடைய மனித வாழ்க்கையில் நான் ஏற்கனவே வளர்த்துக் கொண்ட உணர்வுகள்
2.அவர் கொடுத்த அருள் சக்தியை நான் அறிய முடியாது இயக்கி
3.மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கே மங்கச் செய்து கொண்டு வந்தது.

காரணம்… ஒரு பொருளுடன் நஞ்சு இணைந்து விட்டால் மீண்டும் அதில் எந்தப் பொருளைப் போட்டாலும் அதுவும் நஞ்சின் செயலாகவே மாறிக் கொண்டிருக்கும் என்பதை உணர்த்துவதற்காக எனக்குப் பல அனுபவங்களைக் கொடுத்தார்.

என்னுடைய இந்த மனித வாழ்க்கையில்
1.நான் வளர்த்துக் கொண்ட ஆசைகள் கொண்டும்
2.எனக்குள் மதிப்பைத் தேட வேண்டும் என்ற உணர்வுகள் கொண்டும்
3.சுய கௌரவத்தை மனதில் வைத்துக் கொண்டும் நான் இயக்கப்படும் போது
4.அடுத்தவர்கள் என்னை ஏளனமாகப் பேசுகின்றனர்
5.பைத்தியக்காரனுடன் (ஈஸ்வரபட்டர்) சுற்றிக் கொண்டிருக்கிறான்
6.பிழைக்கத் தெரியாதவன் என்று இழிவான பேச்சுகளாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நான் எங்கே போனாலும் சரி… என் நண்பனே என்னால் அவன் சௌகரியப்பட்டிருந்தாலும் கூட “பைத்தியக்காரன்…” என்று என் கண் முன்னாடியே என்னைப் பேசுகிறான்.

தெரிந்தவர்கள் என்று ஒரு கடையிலே போய் உட்கார்ந்தாலும் கூட பைத்தியத்துடன் சுற்றிக் கொண்டிருக்கின்றாய்… நீயும் ஒரு பைத்தியம்… நீ இங்கே உட்கார்ந்தால் தரித்திரம் பிடித்துவிடும்… போ…! என்று விரட்டி விட்ட நண்பர்களும் உண்டு.

குருநாதரோ… மிகப்பெரிய சக்திகளை எனக்குக் காட்டி அது எவ்வாறெல்லாம் விளைகிறது…? என்ற நிலையையும் பல அற்புதங்களையும் என்னையே செய்யச் சொல்கிறார். அற்புதங்களை என்னை நேரடியாகவேக் காணச் செய்கிறார்.

அதை எல்லாம் செய்து “பொருளை அறியும் ஆற்றலும்…” அறிந்தபின் அது உருபெற்று அதனால் வாழ்க்கைக்கு எவ்வளவு லாபங்கள் (பணம்) வரும் என்று இந்த உடலின் தன்மையிலேயும் ஆசையை ஊட்டுகிறார்.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருள் ஆற்றலைப் பெற்று இந்த உடலில் வந்த இருளை நீக்கிப் “பெரும் செல்வமான பேரானந்த நிலைகள் எவ்வாறு பெறலாம்…?” என்ற நிலையைக் குருநாதர் காட்டினாலும்
1.அவர் கொடுக்கும் சக்திகளை வைத்து
2.இந்த மனித வாழ்க்கையில் என்னை நீங்கள் மதிக்க வேண்டும்
3.எல்லோரும் என்னைப் போற்ற வேண்டும்… என்னைச் செல்வந்தனாக மதிக்க வேண்டும்
4.எனக்குள் பெரும் சக்தி இருக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் தான் எனக்கு அதிகமாக வந்தது

ஆக… ஒரு பக்கம் பேரும் வரும்… புகழும் வரும்… காசும் வரும்… மகிழ்ச்சியும் ஊட்டுவார். ஆனால் என் வீட்டிற்குள் வந்தால் கடும் தரித்திர நிலையைக் காட்டுவார்.

அப்போது தான் ஒன்றைச் சொல்வார்…!

எதன் வழிகளிலே நீ தேடினாலும் அது இருள் சூழ்ந்த நிலைக்கே இந்த உடலின் பற்றுக்கே வருகிறது. உடலின் பற்றுக்கு வந்தால் நான் கொடுத்த பெரும் சக்திகள் மறைந்து விடும். இருளைப் போக்கும் நிலையை அறுத்துவிடும் என்றார்.

அதே நேரத்தில் இன்னொன்றையும் காட்டுகின்றார் குருநாதர்.

பூமியில் இருந்து மனிதனாகப் பிறந்த நீ
1.இந்த உடலை விட்டு எவ்வாறு வெளியே செல்ல வேண்டும்…?
2.சென்றபின் எந்த நிலையில் நீ நிலைத்திருக்க வேண்டும்…? என்று அதையும் ஒரு பக்கம் காட்டுகின்றார்.

அதாவது…
1.உடலை விட்டுப் பிரியச் செய்கிறார்…
2.ஒளியின் சுடரைக் காட்டுகின்றார்…
3.ஒளியின் சுடராக ஆனபின் அது எந்த நிலையில் இருக்கும்…? என்று
4.இந்த உடலை விட்டுச் சென்றபின் அதையும் நிலைத்துக் காட்டுகின்றார்.

ஒரு பக்கம் ஆசையை ஊட்டுகின்றார். மற்றொரு பக்கம் துன்பத்தையும் கொடுக்கின்றார். இதில் என்ன செய்வதென்றே ஒன்றும் புரியவில்லை.

குருநாதர் பித்தனைப் போன்று இருந்த மாதிரி
1.இதைப் பிடிப்பதா… அல்லது அதைப் பிடிப்பதா…!
2.அல்லது அவர் சொன்னதைப் பிடிப்பதா…? என்ற நிலை எனக்கு வருகின்றது.

அவர் கொடுக்கும் சக்திகளை நான் சரி வரப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல சந்தர்ப்பங்களில் இப்படி அனுபவத்தைக் காட்டி எனக்குள் தெளிந்து தெரியும்படி செய்தார்.

அதிலே முழுமை பெற்ற உணர்வுகளை… உயிருடன் ஒன்றி ஒளியாகப் பெறும் ஆற்றலைத் தான் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

Leave a Reply