உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைவோம்… என்றுமே ஏகாந்தமாக வாழ்வோம்

உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைவோம்… என்றுமே ஏகாந்தமாக வாழ்வோம்

 

தீமையான உணர்வுகள் நமக்குள் புகுந்தால் அதை மடியச் செய்யும் சக்தியாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும். அதை நீங்கள் எளிதில் பெறலாம்.

நான் (ஞானகுரு) சிரமப்பட்டேன்… பார்த்தேன்… குருநாதர் அருளால் எல்லாவற்றையும் தெரிய முடிந்தது.
1.தீமையான உணர்வுகள் எனக்குள் எப்படிச் செயல்படுகிறது…? என்று முதலில் காட்டினார்.
2.பின் அந்தத் தீமையை நீக்கும் வழியையும் காட்டினார்.

அதைப் போன்றுதான் வாழ்க்கையில் நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உங்கள் உடலுக்குள் எவ்வாறு இயங்குகிறது…? என்பதை உணர முடியும்.

தீமை என்று உணர்ந்தவுடனே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து அதை மாற்றிக் கொள்ளும் சக்தி உங்களுக்கு வர வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் பெறக் கூடிய தகுதிக்குத் தான் இதை ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

உதாரணமாக…
1.செல்ஃபோன்களில் எதை எதையெல்லாம் பதிவு செய்கின்றோமோ அதை மீண்டும் திரும்பப் பார்க்க முடிகின்றது….
2.பதிவானதை இன்னொருவருக்குச் செலுத்தவும் முடிகின்றது.

இதைப் போன்றுதான் கேட்ட… பார்த்த உணர்வுகள் எல்லாமே நம் உடலில் எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

தீமை என்று பதிவானால் அந்த உணர்வு தனித்து இயங்காதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதற்கு அருகிலேயே இதைப் பதிவாக்க வேண்டும்.

காரணம்… துருவ நட்சத்திரத்தின் சக்தி அதைக் காட்டிலும் வலுவானது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுத்துக் கொண்ட பின் அடுத்து
1.அவன் நல்லவனாக வேண்டும் நல்லது செய்ய வேண்டும்
2.நல் வழி வர வேண்டும்… உலகம் நலம் பெற வேண்டும் என்று
3.நாம் இதைப் பதிவாக்கிக் கொண்டால் அதைச் சுற்றி “பெரிய வட்டமாக…” மாறிவிடுகின்றது.

ஒரு குழம்பை வைக்கிறோம் என்றால் பல பொருட்களைச் சேர்க்கின்றோம். அதில் எந்தப் பொருள் அதிகமோ அதன் சுவை தான் முன்னணியில் வருகின்றது.

இதைப் போன்று அந்த அருள் ஞானிகள் உணர்வை நாம் சிந்திக்கும் உணர்வுகளுக்குள் கலந்து விட்டால்… சிந்தித்துச் செயல்படும் சக்தியாக வளரத் தொடங்கும்.

உங்கள் அனுபவத்தில் நீங்கள் இதைப் பார்க்கலாம்.

இரவில் படுத்துத் தூங்கும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயே உறங்கச் செல்லுங்கள்.

காலையில் எழுந்ததும்… கண் விழித்ததும் இதே நிலைகளைச் செயல்படுத்துங்கள். அதற்குப் பின் மற்ற காரியங்களைச் செயல்படுத்துங்கள்.

எந்தக் காரியத்தை ஆரம்பிக்கும் முன்பும் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் சுருக்கமாக இப்படிச் சொல்லிக் கொண்டு வரலாம்.

1.வெளியில் செல்லும் பொழுதும்
2.தொழிலுக்குச் செல்லும் பொழுதும்
3.வீட்டிற்கு வந்தாலும் அமைதியாக இருக்கும் போதும் இதைச் செய்யலாம்
4.எந்தச் சந்தர்ப்பத்திலும் அருள் உணர்வைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.
5.காற்று மண்டலத்தில் விஷத் தன்மைகள் நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.
6.பேரின்ப வாழ்க்கையாக உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மையாக நாம் மாறுவோம்.

மனிதனாகத் தோன்றிய பின் உயிர் என்ற நிலையில் அனைத்தையும் அறிந்திடும் உணர்வு கொண்டால் கார்த்திகேயா… அந்த வெளிச்சத்தின் உணர்வாக மதி கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்.

ஆகவே ஒளி என்ற மதி கொண்டு நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும். அதைப் பெற்று உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை நாம் அடைவோம்… என்றுமே ஏகாந்தமாக வாழ்வோம்.

Leave a Reply