உயிரையும் குருவையும் எண்ண வேண்டிய முறை

உயிரையும் குருவையும் எண்ண வேண்டிய முறை

 

ஒவ்வொரு நிமிடமும் நம் குருவான உயிரை ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று எண்ண வேண்டும். காரணம் நம் குருநாதர் பெயரும் அது தான்.
1.அவர் தனக்குள் அந்த உயிரின் நிலைகள் ஒன்றி
2.அந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவாக்கி
3.குருவின் நிலைகள் கொண்டு மெய் உணர்வின் சக்தியைப் பெற்றார்.

அதனால் ஈஸ்வரா குருதேவா…!

அவர் பெயர் ஈஸ்வரா என்று வரும் பொழுது எனக்கு (ஞானகுரு) அந்த உணர்வின் தன்மையைக் கொடுத்ததனால்
1.ஈஸ்வரா குருதேவா என்று என் உயிரை நான் எண்ணினாலும்
2.என் குருவை நான் எண்ணினாலும் இரண்டும் ஒன்று தான்.

குருவாக இருந்து அந்த உணர்வின் தன்மையைப் படைக்கப்படும் பொழுது அது உடலாக உருவாகின்றது ஆகவே ஈஸ்வரா குருதேவா என்பது உயிரின் இயக்கம் ஈசன் ஆகிறது.

நமக்குள் உருவாக்கிக் (சிருஷ்டி) கொண்டிருக்கும் அந்த ஈசனின் துணை கொண்டு நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி விண் செல்வதே குருநாதர் காட்டிய மெய் வழி.

அவர் காட்டிய அருள் வழியில் இந்த உலகத்திற்கு வழிகாட்டிகளாக நாம் வளர வேண்டும். நாம் விடும் மூச்சின் அலைகள் பிறரின் துன்பத்தை மாய்க்கக்கூடிய நிலைகளாகப் படர வேண்டும்.

1.நம் சொல்லின் நிலைகள் பிறரை இன்பத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சியின் உணர்வாக உருவாக்கி
2.மற்றவரை இருள் சூழச் செய்யும் விஷத்தை மாய்த்து
3,ஒளிச் சுடராகப் பெறும் அந்தத் தகுதியைப் பெறச் செய்ய வேண்டும்

எனக்குள் (ஞானகுரு) பல இன்னல்களோ அல்லல்களோ வந்தாலும் அதனின் நிலைகள் எனக்குள் சேராத வண்ணம் மெய் ஒளியின் தன்மையை எவ்வாறு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று குருநாதர் உபதேசித்து உணர்த்தினார்.

1.அவர் எனக்கு எப்படி அந்த ஆற்றலைப் பெறும் சந்தர்ப்பமாக அதைப் பதிவு செய்தாரோ
2.அவர் சொன்ன வழியில் அரைத் தொடர்ந்து அந்த உணர்வின் தன்மையை நான் நினைக்கப்படும் பொழுது
3.அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் படைக்கப்படுகிறது.
4.அதிலே விளைந்த உணர்வின் சத்தைத் தான் ஞான வித்தாக உங்களுக்குள் செலுத்துகின்றேன்.

வயலைப் பண்படுத்தி அதற்குள் நல்ல விதைகளை விதைத்த பின் அந்த விதையின் தன்மை காற்றிலிருந்து தன் சக்தியை எடுத்துச் செழித்து வளர்கிறது.

அதைப்போல மெய் ஒளியைப் பெறும் தகுதியை நீங்களும் பெற வேண்டும். குருநாதர் அருளிய அந்த அருள் சக்திகளை நாம் எல்லோரும் பெறுவோமேயானால் விஞ்ஞான அழிவில் இருந்து நாம் மீட்டி மெய் ஞானத்தின் வழிகளில் நாம் செல்ல முடியும்.

எதுவாக இருந்தாலும் இயற்கையின் நிலைகள் இனம் இனத்துடன் தான் சேர்க்கும். மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அந்த இனத்துடன் நாம் இணைந்து… அந்த ஆற்றலைப் பெற்று
2.அவர்கள் எங்கே விண் சென்றார்களோ அங்கே செல்ல முடியும்.

ஆகவே…
1.குருநாதர் அருளிய ஆற்றல்மிக்க சக்தி எனக்கு மட்டும் சொந்தமல்ல. நம் அனைவருக்குமே சொந்தம்.
2.ஒன்றில்லாமல் ஒன்றில்லை. ஒன்றுடன் ஒன்று இணைந்து தான் செயல்படுகிறது.

நீர் சிறு துளியாக விழுந்தால் பூமிக்குள் பட்டு ஈர்க்கப்பட்டு விடுகின்றது. ஆனால் பெரும் துளிகள் ஒன்றாகச் சேர்ந்து மழையாகப் பொழியும் பொழுது பெரும் வெள்ளமாகப் பாய்ந்து அனைத்தும் சேர்ந்து வலுக் கொண்டதாகக் குப்பை கூளம் செத்தைகள் அனைத்தையும் அடித்துச் செல்கிறது.

அதைப் போல நாம் அனைவரும் அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வு கொண்டு ஒரே உணர்வாக ஓ…ம் ஈஸ்வரா… என்ற உணர்வின் குரலை எழுப்பப்படும் பொழுது பெரும் வெள்ளமாக அருள் சக்திகள் நமக்கு முன் குவியும்.
1.அதன் மூலம் நம்மை அறியாமல் ஆட்டிப்படைக்கும் உணர்வுகளையும்
2.இருள் சூழச் செய்யும் உணர்வின் தன்மைகளையும் மாய்த்திட முடியும்.

மெய் ஞானிகளின் அருள் ஒளிகள் பெரும் வெள்ளமாகப் பாயும் போது மெய் வழியில் மெய் ஒளியைப் பெறும் அந்த ஆற்றல் மிகுந்த சக்தியை நாம் அனைவருமே பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும். நமக்குள் ஆற்றல் மிகுந்த சக்தி உண்டு. இந்த மனித உடலில் இருந்துதான் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்.

அத்தகைய நிலைகளை நாம் அனைவரும் நிச்சயம் பெறுவோம்…!

Leave a Reply