இராமாயணத்தில் பரதன் தன் தாயிடம் “அன்றே கொன்றிருந்தால்” என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

இராமாயணத்தில் பரதன் தன் தாயிடம் “அன்றே கொன்றிருந்தால்” என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

 

ஒவ்வொரு நொடியிலேயும் எப்பொழுது நமக்குத் தீமை என்று தெரிகிறதோ அது நமக்குள் வராது தடுக்க
1.தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றே ஆக வேண்டும்.
2.அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தோம் என்றால் அதை அடக்கிவிடும்.

பருப்பை வேக வைத்தால் முளைக்காது… சதுர்த்தி…! தீவினையின் உணர்வுகள் நமக்குள் வளராதபடி அப்போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எதைக் (தீமைகளை) கண்ணிலே பார்த்தோமோ அடுத்த நொடியே அதனுடன் சேர்க்கப்படும் பொழுது அதை அடக்கி துருவ நட்சத்திரத்தின் சக்தி முன்னாடி வரும்.

1.கண் பார்வை ஒன்று தான் (தீமையை நுகர்ந்ததும்… தீமையை நீக்க நுகர்வதும்)
2.ஆனால் அடுத்த கணம் கொண்டு வரும் பொழுது அடுத்த வரிசையில் வருகின்றது
3.அடுத்த வரிசையில் வரப்படும்போது எதிலே பதிவானதோ அதிலேயே சேர்த்துப் பதிவாகின்றது.

அதைத்தான் என்று இராமாயணத்தில் தசரதச் சக்கரவர்த்தி மறைவுக்குப் பின்… இராமன் காட்டிற்குச் சென்ற பின்… பரதன் தன் தாயிடம் “அன்றே கொன்றிருந்தால்” எங்கள் சாம்ராஜ்யத்தில் இத்தகைய தீமை வந்திருக்காது…! என்று சொல்கின்றார்.

ஆகவே அந்த அருள் உணர்வை நமக்குள் பதிவாக்கி தீமைகள் வளராதபடி உடனே செயல்படுத்த வேண்டும்.

ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்படுகின்றோம். இன்ன நோய் என்றும் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இரத்தத்தில் அதைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்… அந்த நிமிடமே…!

இல்லை என்றால் முன் பகுதி போவது (வேதனையும் நோயும்) முன்னாடி போகும்.
1.உடலில் உள்ள மற்ற தீமையான அணுக்களுக்கு உணவாகப் போய்ச் சேரும்… அந்த உணர்ச்சிகள் அதிகமாகும்.
2.நல்லதை எண்ண விடாது நம்மைத் தடுத்துக் கொண்டே இருக்கும்.

அதனால் தான் அடுத்த கணமே அப்போதே அன்றே கொன்றிருந்தால் என்று பரதன் சொல்வதாக இராமாயணம் காட்டுகின்றது.

சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ கோபமோ ஆத்திரமோ வந்தால்
1.அடுத்த கணமே பிரேக் போட்ட மாதிரி
2.அவைகளை நிறுத்த வேண்டும்.

ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும. அதைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நோயுற்றவரின் உடலில் படர வேண்டும். அவர்கள் உடல் நோய் நீங்க வேண்டும். அவர் உடல் நலம் பெற வேண்டும். அவர் நல்லவராக வேண்டும். குடும்பத்தில் உயர்ந்த நிலை பெற வேண்டும். மலரைப் போன்ற மணம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எத்தனை வேண்டுமென்றாலும் அடுத்து நல்லதுகளைச் சொல்லலாம்.

உதாரணமாக ரோட்டில் செல்கிறறோம். இரண்டு பேர் காரசாரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்… சண்டை போடுகிறார்கள்…!

பார்த்தவுடனே நமக்கும் அந்த ஆத்திரம் வருகிறது… இப்படிப் பேசுகிறார்களே என்று கொதிப்பு வருகிறது.

அதை உடனே அப்போதே நிறுத்த வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அதை எண்ணி எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பின் அந்த இரண்டு பேரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் அந்த சக்தி அருள் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்
1.அவரிடம் சொல்லக் கூடாது
2.உங்கள் மனதிலே உடலிலே அந்தத் தீமை உருவாகதபடி தடுத்துப் பழக வேண்டும்.

ஆனால் இப்படிச் செய்யவில்லை என்றால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் இந்த ஆத்திரம் வரும்.
1.அந்த உணர்வு கருவாகி விட்டது என்றால் அணுவாகிவிடும்
2.அணுவின் தன்மை அடைந்தால் மலமாகிறது… மலம் நம் உடலாக மாறிவிடும்.
3.அதனின் வளர்ச்சி அதிகமானால் இரத்தக் கொதிப்பாக உடலில் மாறும்.

இதை எல்லாம் தடுத்துப் பழக வேண்டும் என்பதற்காகத் தான் உங்களைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

Leave a Reply