கண்களை மூடி இருந்தாலும் சரி… அல்லது திறந்திருந்தாலும் சரி… நம் நினைவுகள் துருவ நட்சத்திரத்தின் பால் செல்ல வேண்டும்

கண்களை மூடி இருந்தாலும் சரி… அல்லது திறந்திருந்தாலும் சரி… நம் நினைவுகள் துருவ நட்சத்திரத்தின் பால் செல்ல வேண்டும்

 

காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் எப்பொழுது விழிப்பு வருகிறதோ அப்போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று குறைந்தபட்சம் பத்து நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரையாவது எடுக்க வேண்டும்.
1.கண் விழித்து இருந்தாலும் சரி… கண்களை மூடி இருந்தாலும் சரி…
2.கண்ணின் நினைவலைகள் புருவ மத்தியில் வரவேண்டும் (முக்கியம்)
3.உயிர் வழி தான் நாம் உடலுக்குள் அனுப்ப வேண்டும்.

காரணம்… நாம் வெளியிலே பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த… உணர்வுகள் அனைத்தும் ஆன்மாவாக இருக்கின்றது… நல்ல எண்ணங்களை எண்ண விடாது. ஏனென்றால் நாம் எத்தனை பேருடைய தீமைகளைப் பார்த்தோமோ அதற்கெல்லாம் வலு அதிகம்.

பாலிலே பாதாமைப் போட்டாலும் மற்ற பொருள்களைப் போட்டாலும்… சிறிதளவு விஷத்தைப் போட்டு விட்டால் பாதாமிற்கும் சக்தி இல்லை… பாலுக்கும் சக்தி இல்லை.

அதே போல் அதில் சிறிதளவு காரத்தைப் போட்டுவிட்டால் அதனுடைய சுவைகளை அறிய முடியாது. காரத்தின் சுவை தான் முன்னணியில் இருக்கும். உப்பின் தன்மை இணைத்து விட்டால் அந்த உப்பின் தன்மை முன்னணியில் வந்து விடும்.

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பிறரிடம் கோபப்பட்டது ஆத்திரப்பட்டது வேதனைப்பட்டது சலிப்புப்பட்டது எல்லாமே நம் ஆன்மாவில் வந்துவிடுகிறது.

அதையெல்லாம் மாற்றி அமைக்க அதிகாலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும். அந்தச் சக்திகள் கூடிய பின் உடலிலிருந்து வரக்கூடிய மணம் நம் கேட்டறிந்த தீமைகளை ஆன்மாவிலிருந்து அப்புறப்படுத்தும் நிலையாக வரும்.

1.காரணம் மகரிஷிகள் அருள் சக்தியை உடலுக்குள் கூட்டும் போது
2.ஆன்மாவில் இருக்கும் தீமை செய்யும் உணர்வுகளின் பிடிப்பு அற்றுப் போய்விடும்… ஆன்மாவிலே நிற்காது.
3.அப்போது கஷ்டமான எண்ணங்கள் நமக்குள் வராது

இதை நாம் பழகிக் கொண்டால் மிகவும் நல்லது.

வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களைக் கேட்கப்படும் போதோ அல்லது விபத்தைப் பற்றி அறிய நேரும் பொழுதோ வேதனைப்பட்டுக் கொண்டிருப்போரை அவர்களைக் கண் கொண்டு பார்க்கும் பொழுதோ அது எல்லாம் பதிவாகி விடுகிறது.

அது எல்லாம் ஒரு வித்தாக மாறிவிடுகிறது. மீண்டும் அதை நுகரப்படும் பொழுது அணுவாக மாறுகின்றது. உடலிலே உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக அதே (விபத்து வேதனை) உணர்வலைகளைத் தனக்குள் கவர்ந்து தன் இனத்தை வளர்க்கத் தொடங்குகிறது.

அது வளரத் தொடங்கி விட்டால் நம் ஆன்மாவாக மாறுகின்றது
1.எத்தகைய உணர்வாக இருந்தாலும் அது நம் உயிரிலே படும் போது தான் நம்மை இயக்கும்.
2.நல்லவனாக்குவதும்… கெட்டவனாக்குவதும்… அல்லது நோயாக மாறுவதும் இது போன்று தான்.

இதைப் போன்ற நிலைகளை நாம் தூய்மைப்படுத்த அதிகாலையில் விழித்தவுடனே துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுக்க வேண்டும்.

1.உட்கார்ந்து தான் இதைச் செயல்படுத்த வேண்டும் என்று இல்லை
2.எழுந்து உட்கார வசதியாக உள்ளவர்கள் அப்படிச் செய்யலாம்.
3.படுக்கையில் விழிப்பு வந்த பின்… நேராகத் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
5.புருவ மத்தியில் எண்ணி உடலுக்குள் உள்முகமாக உடல் முழுமைக்கும் செலுத்துங்கள்.
6.உள்முகமாகச் செலுத்தச் செலுத்த ஆன்மாவில் இருக்கும் தீமைகளை அதை நீக்கிக் கொண்டே இருக்கும்.

தினசரி நீரை ஊற்றி உடல் அழுக்கை எப்படிப் போக்குகின்றோமோ அதைப் போல நம் ஆன்மாவில் பட்ட தீமைகளை நீக்க அந்த மகரிஷியின் அருள் சக்தியை நம் உடலுக்குள் அவ்வப்போது செலுத்த வேண்டும்.

அது வலுப் பெற்றால் தான்… உடலுக்குள் வலுவானால் தான்… தீமைகளை நீக்க முடியும். எப்படியும் உங்களுக்குள் அதை வலுவாக்க வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

Leave a Reply