நல்லது செய்பவர்களைக் காப்பாற்றி… நல்லதை ஓங்கச் செய்வது தான் தர்மம்

நல்லது செய்பவர்களைக் காப்பாற்றி… நல்லதை ஓங்கச் செய்வது தான் தர்மம்

 

யதார்த்தமாக நல்லதையே நாம் சொல்லிக் கொண்டு வருகிறோம் என்று சொன்னாலும் நம்மை ஏமாற்றுபவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

வீட்டில் பணமெல்லாம் நிறைய வைத்திருக்கின்றேன்.
1.இரவெல்லாம் கூடக் கதவைத் திறந்து வைத்திருப்பேன்… எதையும் பூட்டுவதில்லை என்று சொல்லி இருந்தால்
2.அடுத்தாற்படி அதைக் கேட்பவர்கள் ஓஹோ… அப்படியா… சரி…! என்று சொல்லிவிட்டு லேசாகத் தாராளமாக வந்து எடுப்பார்கள்.

நாம் யதார்த்தமாகச் சொல்கின்றோம். ஆனால் கபடு சூதில்லாதபடி சொல்கின்றோம். ஆனால் அதை மூடி மறைக்கவில்லை என்கிற போது என்ன செய்யும்…?

அவர்களிடம் நாம் தன்னை அறியாமலேயே…
1.எப்பொழுதெல்லாம் வீட்டில் இல்லாது வெளியிலே இருப்போம் என்றும் சொல்லியிருப்போம்
2.எங்கள் வீட்டிற்குள் யாரும் வந்து திருடுவதில்லை என்றும் நல்லதாகச் சொல்லியிருப்போம்.

அடுத்தாற்படி இதைக் கேட்டவுடனே நேராக வந்து எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.

இதே மாதிரித் தான் நான் பொய்யே சொல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…?

நான் பெரிய சாமியாராக இருக்கின்றேன். காட்டிற்குள் நான் தவம் இருந்து கொண்டிருக்கின்றேன். அந்தப் பாதையில் நல்லவர்களும் கெட்டவர்களும் வந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

திருடன் வருவதும் தெரிகின்றது. மற்றவர்கள் அவரவர்கள் வாழ்க்கைக்குச் செல்வதும் தெரிகிறது. அங்கே “பொய்யே சொல்ல மாட்டேன்…!” என்கிற வைராக்கியத்தில் நான் இருக்கின்றேன் என்று வைத்துக் கொள்வோம்,

அந்த வைராக்கியத்துடன் இருக்கும் பொழுது என்ன நடக்கிறது…?

நகை நட்டுகளுடன் குடும்பத்துடன் முன்னாடி வருகின்றார்கள். அவர்கள் வருவதைப் பார்த்தவுடனே “நீங்கள் எந்த ஊருக்குச் செல்கின்றீர்கள்…?” என்று கேட்கின்றேன்.

இன்ன ஊருக்குப் போகிறோம்… இந்தப் பாதையில் தான் போகிறோம் என்றும் சொல்கிறார்கள்.

சரி நல்லபடியாகச் சென்று வாருங்கள்…! என்று நான் ஆசிர்வாதமும் கொடுக்கின்றேன்.

இவர்கள் நகை போட்டு வந்ததைப் பார்த்துவிட்டு அடுத்தாற்படி ஒரு திருடன் வேகமாக வருகின்றான்.

வந்தவுடன் பார்க்கின்றான். நான் உட்கார்ந்திருக்கின்றேன். நான் தான் பொய்யே சொல்ல மாட்டேன் அல்லவா…!

சாமி…! இந்தப் பக்கம் ஒரு நான்கு ஐந்து பேர் போனார்களா…? எங்கே போகின்றார்கள்…? என்று என்னிடம் அவன் கேட்கிறான்.

1.இவன் திருடன் என்று எனக்குத் தெரிகிறது
2.அவன் கேட்பவர்கள் நகைகளை அணிந்து கொண்டு செல்கின்றார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
3.அப்போது… ஆமாம்… இந்தப் பாதையில்தான் செல்கின்றார்கள் என்று நான் சொன்னால் என்ன ஆகும்…?

இந்த இடத்தில் “நான் பொய்யே சொல்லக் கூடாது…” என்ற விரதத்தில் இருந்தேன் என்றால் நல்லவர்களைக் காப்பாற்ற முடியாதபடி ஆகி நேராகத் திருடனுக்கு வழி காட்டியது போல ஆகிவிடும்.

அவன் போனால் என்ன செய்வான்…?

அவர்கள் கழுத்தை அறுத்துவிட்டு போட்டிருக்கும் நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போய்விடுவான்.

1.நான் என் தர்மத்தைக் காப்பாற்ற நினைத்தாலும் அந்த நல்லவர்களை எப்பொழுது காப்பாற்றுவது…?
2.காப்பாற்ற முடியுமா…? இல்லை.

ஓரு பெரிய கட்டிடத்தை நாம் கட்டும்போது பொய்க்கால் வைத்துத் தான் சிமெண்ட்டைப் போடுகின்றோம். அந்தப் பொய்க்கால் இல்லை என்றால் நம்மால் சிமெண்ட்டை வைக்க முடியாது.

ஆகவே ஒரு நல்லது செய்ய வேண்டும் என்றால் எதிலுமே அந்த வலுவான எண்ணம் வேண்டும். ஆக…
1.விஷம் இல்லை என்றால் சூரியன் இயங்காது.
2.விஷம் இல்லை என்றால் எந்த அணுவும் இயங்காது.

விஷம் இருந்தால் தான் நெகட்டிவ் பாசிட்டிவ் ஒரு இயக்கச் சக்தியாக வரும். “கரண்ட்” அப்படி இல்லையென்றால் அது இயங்காது.

ஆகவே எல்லாவற்றிலுமே இயக்கத்தின் தன்மையை நாம் சமப்படுத்த வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி நடக்க வேண்டும் என்று ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள். இப்பொழுது அதைத் தான் உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

1.இதற்கு முன்னாடி எந்தத் துன்ப நிலைகள் இருந்தாலும் அதையெல்லாம் நீங்கள் நிறுத்திவிட்டு
2.மெய் ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் ஓங்கி வளரச் செய்வதற்குத்தான் இதை எல்லாம் சொல்வது (ஞானகுரு).

Leave a Reply