எனக்கு வந்த தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது… உலக மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்

எனக்கு வந்த தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது… உலக மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்

 

எந்தச் செல்வமும் நம்மைக் காப்பது இல்லை. எந்த உயர்ந்த குணமும் நம்மைக் காப்பதில்லை.
1.அருள் மகரிஷியின் அருள் சக்தியின் துணை கொண்டு தான்
2.அந்த உயர்ந்த குணங்களை நாம் காத்திடல் வேண்டும்.
3.உலகைக் காத்திடும் உணர்வு வரவேண்டும்
4.உலகைக் காத்திடும் உணர்வுகள் நம்மில் விளைய வேண்டும்.

நாம் வெளியிட்ட உணர்வுகள் இந்தக் காற்றிலே பரவ வேண்டும். இதனின் துணை கொண்டு வந்தால் தான் இந்தப் பூமியும் சுகம் பெறும்… நம் உடலும் சுகம் பெறும்… நம் உணர்வும் சுகம் பெறும்…!

ஆகவே மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் இதைப் பெறுவோம் என்று உறுதி கொள்ளுங்கள்.

உலகில் நடக்கும் அசம்பாவிதங்கள் இன்று எத்தனையோ… சொல்ல முடியாது. பத்திரிக்கையை வாங்கிப் படித்தால் அல்லது டி.வி.யைப் பார்த்தால் உலகில் நடக்கும் அந்தத் தீமைகள் எதுவோ அதைக் கண்ணுற்று பார்க்க நேர்கிறது.

அந்த உணர்வின் தன்மைகளை எல்லாம் நமக்குள் பதிவு செய்து “அந்த நினைவினைக் கொண்டே தான்” உலகில் இன்று நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்.

ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் அடுத்த சில நொடிகளுக்குள் அது உலகம் முழுவதும் பரவும் அளவிற்கு விஞ்ஞான அறிவு வந்துவிட்டது.
1.இங்கே நடக்கும் செயல்களை அங்கே பார்க்கின்றோம்…
2.அங்கே நடக்கும் செயல்களை இங்கே பார்க்கின்றோம்.

நாம் பார்த்து… கேட்டு… உணர்ந்து வெளிப்படும் இதைப் போன்ற உணர்வலைகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து உலகெங்கிலும் தீமையை விளைவிக்கும் உணர்வுகளாகப் பரவச் செய்து கொண்டிருக்கின்றது.

இத்தகைய வேளையில் யாம் உபதேசமாகக் கொடுக்கும் இந்த உணர்வின் துணை கொண்டு பத்திரிகையையோ டிவியையோ பார்த்தாலும்
1.அதற்கு பின் ஒரு நிமிடமாவது ஒதுக்கி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்து
3.உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்… உடனே தூய்மைப்படுத்துங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி உலகம் முழுவதும் படர வேண்டும் என்ற ஏக்கத்தின் உணர்வலைகளைப் படரச் செய்யுங்கள்.

நாளை நடப்பது அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரது உணர்வுகளிலும் ஊடுருவ வேண்டும். தீமைகள் மறைந்து விட வேண்டும்.

மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் உலகம் எங்கும் பரவ வேண்டும். உலக மக்களைக் காத்திட வேண்டும் என்ற இந்த உணர்வுகளை அனைவரும் ஒருங்கிணைந்து பரப்புங்கள்.

1.நாம் விடும் மூச்சலைகள் வீண் அல்ல
2.நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள்ளும் தீமையை நீக்கிடும் உணர்வாக விளைகின்றது
3.மற்றவரின் தீமையைப் போக்கும் சக்தியாகவும் வளர்கிறது.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமையைக் கேட்டுணர்ந்தாலும் இப்போது கொடுக்கும் அருள் சக்தியின் துணை கொண்டு அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று பல முறை சொல்லுங்கள்.

வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை வரும் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும்… துயர்பட்ட நிலைகள் இருந்தாலும்… வேதனைகள் எது இருந்தாலும் அதை எல்லாம் கொடுக்கும் சக்தியை வைத்து மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு முன் அறியாது சேர்ந்த நம் உடலில் பல நோய்கள் இருக்கும். பல இன்னல்கள் இருக்கும். அந்த நோய்கள் இருப்பினும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அது என் உடல் முழுவதும் படரவேண்டும் என் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகள் நீங்க வேண்டும். தீய வினையால் வந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று இதை எண்ணிச் செய்யுங்கள்.

நோய்களை மறக்க இதைச் செய்யுங்கள் அந்த மகரிஷிகள் சக்தியைப் பற்றுடன் பற்றுங்கள்.

1.எனக்கு வந்த தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது…
2.உலக மக்களைக் காத்திட வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.

ஒவ்வொருவரும் இதைச் செய்வோம் என்றால் இந்த உலகில் உள்ள தீமைகள் மாறும். தீமையை அகற்றும் உணர்வுகள் நமக்குள் விளைய விளைய… கல்கி என்ற பத்தாவது நிலையான ஒளி நிலை அடைகின்றோம்.

ஒளியாக விளைந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலை விட்டு நாம் அகன்றால் தீமையற்ற உலகில் நாம் வாழ்ந்திட முடியும். இங்கேயும் வாழ்ந்திட முடியும். தீமைகள் நாடாத நிலைகள் கொண்டு நிச்சயம் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

Leave a Reply