நரகாசுரன் என்பவன் யார்…!

நரகாசுரன் என்பவன் யார்…!

 

ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணத்தை எண்ணும் பொழுது அதை நமது கண் கவர்ந்து ஆன்மாவாக மாற்றி சுவாசிக்கச் செய்து அது நம் உயிரிலே பட்டு இயக்கப்படும் பொழுது ஓ… என்று பிரணவமாக்கி ம்… என்று நம் உடலாக ஆகிறது.
1.அது தான் இந்திரன். இந்திரன் என்றால் விந்து என்று பொருள்.
2.அது நமக்குள் கருவாகி உருவாகும் சக்தியாக அது உருப்பெறுகிறது.

நாம் எண்ணியதைச் சுவாசிக்கப்படும் போது நமது உயிர் அதை இயக்குகின்றது. உயிருக்குள் எப்பொழுதும் துடிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் வெப்பம் உருவாகிக் கொண்டே உள்ளது.

உயிர் ஈசன் என்றால் துடிப்பினால் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. ஆகவே அந்த இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பம் (விஷ்ணு) சுவாசித்த உணர்வுக்கு வரம் கொடுத்து விட்டான் என்று பொருள்.

அசுரன் எனக்கு எதிலுமே இறப்பு வரக்கூடாது என்ற நிலையில் அவன் விஷ்ணுவிடம் வரம் வாங்கிக் கொண்டான். எதிலேயுமே இறப்பில்லாத நிலைகள் என்றால் அதனின் உட்பொருள் என்ன…?

ஒருவன் நல்ல செயல்களைச் செயல்படுத்துகின்றான். இருப்பினும் பிறிதொருவர் வேதனைப்படுவதைப் பார்க்க நேருகிறது. அவனின் கண்களான கண்ணன் “அவன் வேதனைப்படுகிறான்” என்ற உண்மையை உணர்த்துகின்றது.

ஆனால் கண் பார்த்து அவன் உடலிலிருந்து வரக்கூடிய வேதனையான உணர்வைச் சுவாசிக்கும்போது அந்த நேரத்தில் விஷ்ணுவான உயிர் வரம் கொடுத்து விடுகின்றான்.

வேதனைப்படுகிறார் என்ற நிலைகளில் வரம் கொடுத்த பின் அந்த வேதனை உடலுக்குள் போன பின் இந்த இந்திரலோகத்திற்குள் நல்ல செயல்கள் செயல்படுத்துவதை அது தடுக்கின்றது.

பால் நிறையச் சத்து உள்ளது தான். இருந்தாலும் அதில் சிறிதளவு விஷம் கலந்து விட்டால் குடிப்போரை மயங்கச் செய்கிறது. ஆக இந்த அசுரன் என்பது விஷம்.

1.ஒருவன் வேதனைப்படுவதைக் கண்கள் காட்டி
2.அதில் இருந்து காப்பாற்றும் உணர்வின் செயலைக் கண் நமக்குக் காட்டினாலும்
3.அந்த நல்ல செயல்களின் வழிகளிலேயே உள் புகுந்து அசுர சக்தி நமக்குள் வந்து விடுகின்றது.

ஒருவர் வேதனைப்படுவதை நாம் பார்த்து அதை நுகர்ந்து அவருக்கு உடனே உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் அந்த எண்ணத்தால் நம் உயிர் வரம் கொடுத்து விடுகின்றது விஷ்ணு.

அந்த வேதனை நம் உடலுக்குள் சென்றபின் அவர்கள் எத்தகைய வேதனைப்பட்டார்களோ அதே உணர்வுகளை நம் உடல் முழுவதற்கும் தூண்டச் செய்கின்றது.

1.வேதனைப்பட்டவர் அவர்…!
2.ஆனால் நாம் நன்மை செய்யப் போக அந்த நன்மையின் உணர்வுக்குள்
3.அவர் பட்ட வேதனை ஊடுருவி நமக்குள் வந்து நல்ல குணங்களைச் செயல்படுத்தாதபடி
4.நம் உடலான இந்திரலோகத்தில் அந்த அசுர சக்திகள் செயல்படுகின்றது

இதைப் போல் நாம் எந்தக் காரியங்களைச் செய்தாலும் அதிலே கெட்டதை நீக்க நாம் முயற்சிக்கின்றோம்… புற நிலையில்…!

ஆனாலும் “கெட்டது” என்று உணர்ந்து கொண்ட பின்
1.அந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் சுவாசிக்கும் பொழுது
2.உயிரான விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான்.
3.உடலுக்குள் அந்த அசுர சக்தி செயல்பட ஆரம்பித்து விடுகின்றது.

நமது வாழ்க்கையில் நம்மை அறியாத நிலையில் அசுர சக்திகள் இப்படித் தான் புகுந்து விடுகிறது.

நல்லவர்கள் அனைவருமே பிறர் துயரப்படுவதை எண்ணி அவர்கள் துயரைத் துடைக்கத் தான் எண்ணுகின்றோம். ஆனால் அவர்கள் படும் துயரமான உணர்வுகள் வெளிப்படுவதை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

துயரப்படுபவர்களைப் பார்த்து அவர்கள் உடலிலிருந்து வெளி வரும் துயரமான அந்த உணர்வலைகளைக் கண் கவர்ந்து ஆன்மாவாக மாற்றி உயிரான ஈசனிடம் அதை ஒப்படைக்கின்றது.

1.ஈசன் அதை நமக்குள் உணர்த்தும் போது அந்த நல்ல காரியங்களைச் செய்தாலும்
2.அதனுடன் தீய விளைவுகளும் நமக்குள் சேர்ந்து விடுகின்றது.
3.அந்த அசுரனை வீழ்த்தும் வழி இல்லாது அது வளர்ந்து விடுகிறது என்பதைத் தான் “நரகாசுரன்” என்று காட்டுகின்றார்கள்.

Leave a Reply