உபதேசம் செய்வது அர்த்தமாகவில்லை…! என்று சொல்கிறார்கள்

உபதேசம் செய்வது அர்த்தமாகவில்லை…! என்று சொல்கிறார்கள்

 

சாமி (ஞானகுரு) இந்நேரம் வரை உபதேசம் செய்தார்…
1.எனக்கு அர்த்தம் தெரியவில்லையே…! என்று இருக்கவே வேண்டாம்.
2.”என்ன உபதேசிக்கிறார்…” என்று கேட்டுப் பதிவாக்கிக் கொண்டிருந்தால் மட்டும் போதும்.

ஒரு டேப்பிற்கு ஒன்றுமே தெரியாது. அதில் உள்ள நாடாவில் தான் முலாம் பூசப்பட்டு இருக்கின்றது. ஆனால் பேசுவது எல்லாம் அதிலே பதிவாகின்றது. வேறு எண்ணம் அதற்கு இல்லை.

உதாரணமாக சிறிய குழந்தைகளுக்கு “அங்கே செல்ல வேண்டும்… இங்கே போக வேண்டும்…” என்ற எண்ணங்கள் இல்லை.

ஒரு பாடல் நன்றாக இருக்கிறது என்றால் குழந்தை அதைச் சும்மா கவனித்துக் கொண்டே இருந்தால் போதும். அதே பாட்டை அதே மெட்டில் அந்தக் குழந்தை பாடத் தொடங்கும்

ஆனால் பெரியவர்கள் ஆயிரம் தடவை கேட்டாலும்… அந்தப் பாடலை அதே மெட்டைப் பாட முடிகிறதா…? என்றால் இல்லை. ஏனென்றால் பல எண்ணங்கள் நமக்குள் இருக்கின்றது.

பல ஆயிரம் புத்தகங்களைப் படித்துக் கொண்டு வந்து
1.நாம் இத்தனை புத்தகங்களைப் படித்து இருக்கின்றோம்… சாமி சொல்வது அர்த்தமில்லை…! என்று
2.படித்த நிலைக்கு ஒப்பிட்டுப் பார்த்தால் நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகாது.

ஆகவே அந்த மெய் ஒளியின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்து… நாம் அந்த வழியில் பெற வேண்டுமென்று ஏக்கத்துடன் இருந்தால் இது பதிவாகும்.

அந்தப் பதிவான நிலைகள் கொண்டு மீண்டும் தியானத்தில் எண்ணி எடுத்தால்
1.படித்துக் கொண்டு வந்த அனைத்திற்கும் விடைகளை உங்கள் உள்ளத்திலிருந்து கொடுக்கும்
2.இந்த தியானத்தை முறைப்படி எடுத்தால் படித்தது அனைத்தையும் நீங்கள் அர்த்தம் தெரிந்து கொள்வீர்கள்.

காவியங்களைப் பற்றி எல்லாம் உங்களுக்குச் சிறுகச் சிறுகத் தான் பதிவு செய்து கொண்டு வருகின்றேன். சில நேரம் முழுவதும் சொல்கின்றேன்…. சில நேரம் சுருக்கமாகச் சொல்கிறேன்.

முழுவதும் சொன்னாலும் கிரகிக்கும் சக்தி உங்களிடம் இல்லை… கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னாலும் கிரகிக்கும் சக்தி இல்லை.

இராமாயணமும் மகாபாரதமும் பல மொழிகளில் பாடல்களாகத் தான் எழுதி வைத்திருக்கின்றார்கள். திருவள்ளுவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

அவர்கள் சொல்வதெல்லாம் படித்துவிட்டு அர்த்தமாகிறது என்று எப்படிச் சொல்கிறார்கள்…! என்று தெரியவில்லை. அர்த்தம் தெரிந்து எல்லோருக்கும் தெரிவதில்லை.

குழந்தைப் பருவத்தில் ஒன்றாம் வகுப்பில் பாடம் படிக்கிறோம். தெரிந்து கொண்ட பாடத்தை அங்கே பள்ளியில் சொல்லிக் கொடுப்பதில்லை.

அந்த வகுப்பில் படித்த பின்பு அடுத்த வகுப்பிற்குச் என்றால் ஏற்கனவே தெரிந்த ஒன்றாவது வகுப்புப் பாடத்தை அவர்கள் சொல்லித் தருவதில்லை.

இப்படி ஒவ்வொரு வகுப்பிலும் கற்றுக் கொடுத்துத் தேர்ந்த பின்புதான் அடுத்த நிலைக்குப் போகின்றோம். இப்படி வரிசையாகப் போய்ப் பனிரெண்டாம் கிளாஸ் வரை போகின்றோம்.

அத்தனையும் படித்தாலும் அதற்குப் பின் இன்ஜினியருக்கு போகிறாயா…? மருத்துவத்திற்குப் போகிறாயா…? என்று கேட்கின்றார்கள். படித்ததற்குத் தகுந்த மாதிரித் தேர்வு வைத்து டாக்டராகவோ இன்ஜினியராகவோ செல்லலாம் என்று அங்கே பிரிக்கின்றார்கள்.

பிரித்த பிற்பாடு அப்புறம் படித்துத் தான் கல்லூரியில் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர படிக்காமல் அதைத் தெரிந்து கொள்ள முடியாது.

1.நான் பல புத்தகங்களை ஏற்கனவே படித்திருக்கிறேன் என்று படித்த நிலையைச் சொல்லிக் கொண்டு
2.கல்லூரிப் பாடத்தைப் படிக்க வேண்டும் என்று இல்லாதபடி
3.“இச்ச்….” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டால் அந்தப் பாட நிலை ஏறாது.

கல்லூரரிப் படிப்பைச் சீராகப் படித்துப் பதிவாக்கி அந்த உணர்வின் சக்தியை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அங்கே தேர்வாக முடியும்.

சிலர் நிறையப் படித்து விட்டு வந்து…
1.என்னமோ இந்தச் சாமி சொல்கிறார்…
2.வேண்டுமென்றால் கேட்டு விட்டுப் போவோம் என்ற நிலையில் இருக்கின்றனர்.
3.படித்த நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்படித்தான் வரும்.

ஏனென்றால் இந்த வாழ்க்கை… இந்த இயற்கை… எப்படி நிகழ்ந்து கொடுக்கிறது…? என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது தான் முக்கியம்.

ஆகவே…
1.“குழந்தை உள்ளங்களாக” இருந்து
2.அந்த மெய் ஒளியைப் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் இருந்தால்
3.யாம் உபதேசிக்கும் அனைத்தும் நிச்சயம் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும்.

Leave a Reply