பண்டைய காலத்தில் ரிஷிகள் காட்டிற்குச் சென்று தவம் செய்தார்கள் என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

பண்டைய காலத்தில் ரிஷிகள் காட்டிற்குச் சென்று தவம் செய்தார்கள் என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

 

மனிதனுக்குள் இருக்கும் ஆறாவது அறிவின் தன்மை என்பது மிகவும் உயர்ந்த நிலைகள் கொண்டது.

அந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அன்று 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களும் சரி… மகரிஷிகளும் சரி… மனிதனுக்கு மனிதன் காத்திடும் நிலையாகவும்… உயர்ந்த பண்புகளை வளர்த்திடும் நிலையாகவும் இருந்தனர்.

பின் சிறுகச் சிறுக அரச குடும்பங்கள் என்று வரப்படும் போது மதங்களாகப் பிரிக்கப்பட்டு மற்ற மதத்தை வேதனைப்படச் செய்வதே அந்தந்த மதத்தின் வேலையாக இருந்தது.

1.ஏனென்றால் தன் மதத்தின் கடவுளைக் காத்துக் கொள்ள
2.மற்ற மதத்தவர்கள் ஏற்படுத்தும் கடவுளை… அவர்கள் முறையற்றுச் செய்கின்றனர் என்று
3.இவர்கள் அவர்களைச் சொல்வதும் அவர்கள் இவர்களைச் சொல்வதும்
4.வணங்கி வரும் அந்தத் தெய்வங்களை… “அவர்கள் கடவுளைச் சரியில்லை…” என்று ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வதும்
5.உண்மையின் நிலைகள் அனைத்தும் இப்படி மறைக்கப்பட்டுக் காலத்தால் வேதனை என்ற உணர்வுகளே அதிகமாக வளர்ந்து
6.ஒவ்வொரு மனிதனையும் வேதனைப்படும் நிலைகளுக்கே கொண்டு சென்றனர்.

அரசனால் உருவாக்கப்பட்ட மதங்களும் இனங்களும் மக்களைக் காக்க என்று சொல்லிச் சட்டங்களை இயற்றினாலும் அரசன் தான் வாழ இத்தகைய நிலைகளை உருவாக்கி… மனித உடலில் நஞ்சு கலந்த உணர்வுகளையே வெளிப்படுத்தும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டான்.

அப்படி வெளிப்படுத்தப்பட்ட வேதனையான உணர்வுகள் அனைத்தையும் சூரியன் தன் காந்த சக்தியால் கவர்ந்து இந்தப் பூமியில் நஞ்சு கலந்த நிலையாக வளர்ந்து உலகெங்கிலும் பரவி விட்டது.

புழுவிலிருந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் மனிதனின் ஆறாவது அறிவு (முருகன் – கார்த்திகேயா) என்பது பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்ற நிலைகளில்… ஒவ்வொரு அறிவும் ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொன்றையும் உருவாக்கும் ஆற்றல் பெற்றது.

1.அத்தகைய ஆற்றல் கொண்ட ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.தீய விளைவுகளை உருவாக்கும் செயலை மாற்றி
3.மனித உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மைகளை எல்லாம் உயிருடன் ஒன்றச் செய்து
4.ஒளியாக மாற்றிச் செல்லும் வழிகளைத் தான் அன்றைய மெய் ஞானிகள் காட்டினார்கள்.

இருந்தாலும் பின் வந்த அரசர்கள் மெய் ஞானிகள் கொடுத்த தத்துவங்களை மக்களுக்குக் கிடைக்கச் செய்யவில்லை.
1.தன் குடிமக்கள் அந்த மெய் ஞானிகளைப் பின்பற்றிச் சென்றாலும்
2.அவர்களை எல்லாம் தனக்கு எதிரியானவன் என்று பறைசாற்றி
3.அவர்களை வாழவிடாது செய்து ஒதுக்கித் தள்ளி விட்டனர்.

அவ்வாறு ஒதுக்கப்பட்டவர்கள் நாட்டு மத்தியில் வாழ்வதற்குப் பதில் காட்டிற்குள் சென்று… தான் கண்டுணர்ந்த அந்த மெய் உணர்வின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் பருகி… இந்த உடலையே ஒளியாக மாற்றி… அழியாத நிலைகள் கொண்டு விண் சென்றடைந்தவர்கள் சப்தரிஷி மண்டலங்களில் பல பேர் உண்டு.

அரசர்களால் துன்புறுத்தப்பட்ட மத நிலைகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள இவ்வாறு சென்றவர்கள் தான் பல பேர்.

Leave a Reply