நம் உயிருடன் ஒன்றி… ஞானகுருவுடன் ஒன்றி… ஈஸ்வரபட்டருடன் ஒன்றி… உணர்வை ஒளியாக மாற்றிடும் தியானப் பயிற்சி

நம் உயிருடன் ஒன்றி… ஞானகுருவுடன் ஒன்றி… ஈஸ்வரபட்டருடன் ஒன்றி… உணர்வை ஒளியாக மாற்றிடும் தியானப் பயிற்சி

 

ஓ…ம் ஈஸ்வரா…! என்று எண்ணும் போது புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ண வேண்டும். குருதேவா என்கின்ற போது உடலுக்குள் இருக்கும் அனைத்து குணத்திற்கும் நம் உயிரே “குரு…” என்ற நிலைகளில் மதித்துப் பழக வேண்டும்

1. ஈசனாக இருப்பதும் உயிரே
2. விஷ்ணுவாக இருப்பதும் உயிரே
3. கடவுளாக இருப்பதும் நமது உயிரே
4. பிரம்மமாக இருப்பதும் உயிரே.
5. நாம் எண்ணியது எதுவோ அதைச் சிருஷ்டிப்பதும் நம் உயிரே,
6. எண்ணத்தால் கவர்ந்த உணர்வினைத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்வதும் “உயிரே”.
7. ஆன்மாவின் நிலைகள் அது உறையும்போது கடவுளாக உள் நின்று அதை உறையச் செய்யும் செயலாகச் செயல்படும் நிலைகளும் “உயிரே”.
8. நாம் எண்ணியது எதுவோ அதை உடலாக்குகின்றது நம் உயிர்
9. நாம் எண்ணியது எதுவோ அந்தச் சக்தியாக உள் நின்று மீண்டும் நம்மை இயக்குகின்றது.
10. நாம் எண்ணியதை ஆண்டு கொண்டிருப்பதும் ஆண்டவனாக இருப்பதும் நம் “உயிரே”.
11. நாம் எதை எண்ணுகின்றோமோ அதை வைத்து… அடுத்து…, “அவன் ஆட்சியும் நம்மை ஆளுவதும் அவனே”.

ஆகவே ஓம் ஈஸ்வரா குருதேவா என்கின்ற போது நம் உயிரின் இயக்கத்தைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். மந்திரம் சொல்கிற மாதிரிச் சொல்ல வேண்டியதில்லை.

ஈஸ்வரா என்றாலே புருவ மத்தியில் நம் உயிரைத்தான் நினைவில் கொள்ள வேண்டும். ஈசன் எங்கேயோ இருந்து நம்மை இயக்குகின்றான் என்று வெளியிலே தேட வேண்டியதில்லை. வெளியிலே நினைவு செல்ல வேண்டியதில்லை.

குரு என்றால் உடலில் உள்ள அனைத்திற்கும் குருவே அவன் தான். ஏனென்றால் உயிர் ஒளியாகப் பெற்றவன். குரு ஒளியாக இருக்கின்றான். அந்த ஒளியின் நிலை பெற வேண்டும் என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எண்ணினால் குருவை நாம் மதிக்கின்றோம் என்று பொருள்.

உயிரின் உணர்வின் தன்மை கொண்டு அழியா ஒளிச் சரீரம் பெற்ற அருள் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்றால் நாம் உயிரை அவசியம் மதித்துப் பழக வேண்டும். ஞானிகள் உணர்த்தியபடி அதை நாம் பின்பற்ற வேண்டும்.

இப்படி ஒவ்வொருவரும் அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா என்று திரும்பத் திரும்பச் சொல்வது. அதே போல் எண்ணியதை.., எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்.., நம் உயிர் தான் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

பேசுவதற்கு முன் “மைக்கைச் (MIC)” சரி செய்து வைத்துக் கொள்கின்றோம். அது சரியாக இருந்தால்தான் பேசுவதை அது கிரகித்து ஒலியைப் பெருக்கிக் காட்ட முடியும்.

இதைப் போலத்தான் “ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் அடிக்கடி எண்ணினால் தான் நம் உயிரின் இயக்கம் உயிர் வழி சுவாசமாக அமையும்.

ஏனென்றால் இந்த உலகத் தொடர்பு கொண்ட மற்ற உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது அந்த நிலைகள் நமக்குள் இயங்காதவண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும் நம்முடைய எண்ண ஏக்க அலைகள் ஞானிகளின் உணர்வுகளை எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கும் ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணினால் தான் அது மிகவும் ஏதுவாக இருக்கும்.

“எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு. அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு மெய் ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.

விண்ணுலகில் உள்ள ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் உயிரிலே புருவ மத்தியிலே எண்ணும் போது அவர்கள் ஈர்ப்புக்குள் நாம் செல்கிறோம். அதைக் கவரும் ஆற்றலும் பெறுகின்றோம்.

ஆகவே புருவ மத்தியிலிருக்கும்… நம் உயிரை” எந்த அளவிற்கு அதிகமாக எண்ணுகின்றோமோ அந்த அளவிற்கு இயக்கச் சக்தியின் ஆற்றலைப் பெற்று எண்ணிய சக்தியைப் பெற முடியும். ஞானிகள் அவ்வாறு பெற்றுத்தான் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகி துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உயிர் வழி நாம் சுவாசித்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும். ஒளியின் சரீரம் பெற முடியும். அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் ஒன்றிட முடியும். சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையலாம்.

1. நம் உயிரும் ஒரு நட்சத்திரம் தான். இருபத்தியேழு நட்சத்திரங்களின் எதிர் நிலையான மோதல்கள் தான் “இயக்கச் சக்திக்கே…” மூல காரணமாகும் என்று கண்டுணர்ந்து வெளிப்படுத்திய அகஸ்தியரின் அருள் சக்திகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
2. இருபத்தியேழு நட்சத்திரங்களின் விஷத்தன்மைகள் ஒன்றுக்கொன்று மோதும் நிலைகளில் வான மண்டலங்களின் இயக்கங்களையும் பூமிக்குள் வரும் போது பாறைகளாகவும் மண்களாகவும் வைரங்களாகவும் அதனதன் ஈர்ப்பால் என்னென்ன மாற்றங்கள் ஆகின்றது என்று அகஸ்தியன் கண்டுணர்ந்த அருள் சக்திகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
3. எங்களுக்குள் பதிவான ஞானகுரு உபதேசித்த அருள் உணர்வுகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் எங்களுக்குள் நினைவுக்கு வந்து எங்கள் நினைவாற்றல் விண்ணிலே.., மேல் நோக்கிச் சென்று மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
4. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் தீமைகளை அகற்ற வேண்டும் என்ற வலுவான எண்ணம் எங்களுக்குள் ஓங்கி வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
5. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வ்ழியில் எங்கள் உயிரை இயக்கி அதன் வழி மெய் ஞானிகளின் உணர்வுகளை ஜீவனாக்கி எங்கள் உணர்வுகள் அனைத்திடும் ஒளியாக மாறிட அருள்வாய் ஈஸ்வரா
6. புருவ மத்தி வழியாக அருள் உணர்வைப் பெறும் பாதையை உயிர் வழி சுவாசமாகக் காட்டிய ஞானகுருவின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
7. புறக்கண்ணால் பார்க்கும் அசுத்த உணர்வுகளைச் சுவாசிக்காதபடி அகக்கண்ணின் வழி கூடிய நினைவு கொண்டு கார்த்திகேயா என்ற நிலையில் தீமைகளை அகற்றி ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
8. எங்கள் வாழ்க்கையில் கோபம் வரும்போதெல்லாம் மகரிஷிகளின் ஒளியை நாங்கள் பெற்று கோபத்தைத் தணித்து எங்களுக்குள் தெளிவு பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.
9. துன்பம் வரும் பொழுது “இப்படி ஆகின்றதே.., இப்படி ஆகிவிட்டதே..,” என்பதை எண்ணாமல் அந்தச் சமயத்தில் “அதிலிருந்து விடுபடும் உணர்வை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
10. 1வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற்று துன்பத்திலிருந்து மீண்டிடும்.., “உபாயமும் ஞானமும்..,” தக்க தருணத்தில் எங்களுக்குள் உதயமாகிட அருள்வாய் ஈஸ்வரா
11. தீமைகள் என்று வரும் போது “உன் நினைவு தான்…” எங்களுக்கு வர வேண்டும் ஈஸ்வரா. அந்தச் சமயத்தில் தீமைகளை நாங்கள் நுகராது நல்ல வினைகளை நற்சக்திகளை மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் நுகரும் சக்தியாக வர வேண்டும் ஈஸ்வரா…!
12. மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி எங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளைக் குறைத்துப் பழக அருள்வாய் ஈஸ்வரா
13. இருளை அகற்றி ஒளியாக இருக்கும் உன் அருளைப் பெற என் நினைவுகள் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைக்கின்றேன் ஈஸ்வரா…!
14. ஞானகுரு கொடுக்கும் சக்தியின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளியான அணுக்கள் எங்கள் உடலிலே உற்பத்தியாகிட அருள்வாய் ஈஸ்வரா
15. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி புருவ மத்தியிலிருக்கும் “உயிருடன் ஒன்றி..,” அந்த வாசல் வழியாக அதாவது சொர்க்கவாசலாக இருக்கும் அதன் வழி விண்ணுலகம் செல்லும் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
16. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய அந்த அருள் வழிப்படி இதை எல்லாம் நாங்கள் பின்பற்றி விஞ்ஞான உலகின் தீமைகளிலிருந்து விடுபட்டு இந்த மனித உடலிலேயே முழுமையான நிலைகள் அடைந்து உலகைக் காத்திடும் ஞானிகளாக நாங்கள் உருவாகிட அருள்வாய் ஈஸ்வரா.

ஆகவே அருள் உணர்வைப் பெருக்கினால் நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் பார்க்க முடியும் பார்க்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக வரும் என்றும் அந்த அகண்ட அண்டத்துடன் (2000 சூரியக் குடும்பம்) தொடர்பு கொண்ட உணர்வையும் நம்மால் உணர முடியும் என்றும் அதன் வழியில் நாம் எங்கே போக வேண்டும்…! என்ற உணர்வு வரும் என்பதையும் அதை வைத்து நாம் செல்ல வேண்டிய சப்தரிஷி மண்டல எல்லையை நிச்சயம் அடைய முடியும் என்றும் ஞானகுரு நமக்கு வழிகாட்டுகின்றார்கள். நாம் அதன் வழி செல்வோம்.

Leave a Reply