மெய் ஞானிகள் மக்களுக்குக் கொடுத்த ஆலயத்தின் முக்கியமான தெய்வீகப் பண்பு

மெய் ஞானிகள் மக்களுக்குக் கொடுத்த ஆலயத்தின் முக்கியமான தெய்வீகப் பண்பு

 

1.நாம் கவர்வது (சுவாசிப்பது) எல்லாம் மணமாக மாறுகின்றது.
2.அந்த மணத்தை நுகரும் பொழுது அது உணர்வாக ஆகின்றது
3.அந்த உணர்வின் தன்மை தான் இயக்கம் ஆகின்றது
4.அந்த உணர்வின் தன்மை தான் செயலாகின்றது
5.அந்த உணர்வின் தன்மை தான் உடலாகின்றது என்ற நிலையைத் தெளிவாக்குவதற்குத்தான்
6.ஆலயத்திலிலுள்ள தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களையும் வைரக் கிரீடத்தையும் வைத்து
7.மலர் மாலைகளையும் பல ஔஷதங்களையும் வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களை மார்பில் அணிந்து காட்டி உள்ளார்கள் என்றால் அந்தத் தங்கம் எப்படி மங்காது இருக்கின்றதோ
1.அந்தத் தங்கத்தை போல என் மனம் மங்காது இருக்க வேண்டும்
2.இந்த ஆலயம் வருவோருக்கெல்லாம் அவர்கள் மனம் மங்காத நிலை பெற வேண்டும்
3.நாம் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் மனம் மங்காத நிலையில் வரவேண்டும்…
4.தங்கத்தைப் போல அவர்கள் மனங்கள் வளர வேண்டும் என்று எல்லோரையும் எண்ணும்படி செய்கிறார்கள்.

ரோட்டில் செல்லும் பொழுது ஒருவன் அடிபட்டுக் கீழே விழுகின்றான். அடப் பாவமே யார் பெற்ற பிள்ளயோ…? என்று உற்றுப் பார்க்கின்றோம். வேதனையான உணர்வை நுகர்கின்றோம்.

ஆனால் அவன் அடிபட்டிருந்தாலும் அவனை எண்ணும் பொழுது நம்மை அறியாமலே “அவன் உடல் நலம் பெற வேண்டும்” என்று எண்ணத்தை நமக்குள் தோற்றுவிக்க வேண்டும்…
1.உடனடியாக நல்ல உணர்வை எடுக்க வேண்டும் என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தனர்…
2.உயர்ந்த பண்புகளையும் எண்ணி எடுக்கும்படி செய்தனர் ஞானிகள்.

ஆலயத்தில் கனிகளை வைத்துக் காட்டியிருக்கின்றார்கள். கனிகளைப் பார்த்த பின் அதனின் சுவையை எண்ணி… அதை உட்கொள்ள வேண்டும் என்று எப்படி விரும்புகிறோமோ அதே போன்று அந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆண்டவனுக்குச் சுவை கொண்ட பொங்கலையும் படைத்து வைத்திருக்கின்றார்கள். பலவற்றையும் சேர்த்துச் சமைத்துச் சுவைமிக்க நிலையாக அந்தப் பொங்கலை உருவாக்கியது போன்று
1.வாழ்க்கையில் வரும் அனைத்து உணர்வுகளும் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளாக நமக்குள் விளைய வேண்டும்
2.எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் சுவை கொண்ட வாழ்க்கையாக வாழ வேண்டும் என்றும்.
3,இப்படி உயர்ந்த பண்புகளை எண்ணி எடுப்பதற்குத் தான் அங்கே பொங்கலை வைக்கும்படி காட்டுகின்றார்கள்.
4.பல பல சுவை கொண்ட பதார்த்தங்களையும் அங்கே வைக்கின்றார்கள்.

இது எல்லாம் துவைதம்… கண்ணுக்குப் புலப்படக் கூடியது. இதை வைத்துக் கண்ணுக்குப் புலப்படாத உயர்ந்த சக்திகளை எண்ணி எடுக்கும்படி செய்கிறார்கள் ஞானிகள்.

ஆகவே…
1.இபபடி ஆலயத்தில் ஞானிகளால் உருவாக்கப்பட்ட தெய்வீக நிலையை எண்ணி
2.நமக்குள் அந்தத் தெய்வ குணத்தை உருவாக்கக் கூடிய நிலையும்
3.நமக்குள் அதை உருபெறச் செய்யக்கூடிய நிலையையும்
4.நம் உடலுடன் இணைக்கக் கூடிய நிலையையும்
5.நம் சொல்லால் பிறருடைய நிலைகளை அருள் வழியில் இயக்கக்கூடிய சக்தியையும் பெறச் செய்வதற்குத்தான் ஆலயம்…!

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…! (ஞானகுரு).

Leave a Reply