மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் உருவாக்கச் செய்வது தான் இந்தத் தியானப் பயிற்சியின் முக்கிய நோக்கம் – ஞானகுரு

மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் உருவாக்கச் செய்வது தான் இந்தத் தியானப் பயிற்சியின் முக்கிய நோக்கம் – ஞானகுரு

 

அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து நம் உடலுக்குள் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும். அதைத் தான் “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…” என்று சொல்வது.

சந்தர்ப்பத்தால் இணைவது எதுவாக இருந்தாலும் அது பிரம்மம் தான். ஆனால் அந்த மெய் ஞானியின் உணர்வை நமக்குள் இணைத்து அதை உருவாக்க தெரிந்து கொண்டால் கார்த்திகேயா…!

அதாவது புறத்திலே பார்க்கும் போது
1.தீமை என்று ஒன்றைத் தெரிந்து கொள்கின்றோம்…
2.அந்தத் தீமையை அகற்றத் தெரிந்து கொள்கின்றோம்…
3.ஆனால் தீமையை அகற்றும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் உருவாக்க வேண்டும்…
4.அது நம்மால் முடியும் என்ற நிலைக்கு வரவேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்து இணைத்து தீமையை அகற்றும் சக்தியாக நமக்குள் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும். இது மிகவும் முக்கியமானது.

அதனால்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய்…! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.

சந்தர்ப்பத்தால் தீமைகளைக் கேட்க நேர்ந்தாலும்… அது நம் ஆன்மாவில் மோதி இயக்கினாலும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று இதை இணைத்து உருவாக்க வேண்டும்.

1.பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்கள் எல்லாம் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட நிலைகளை எண்ணிப் பார்க்கின்றது.
2.அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வினைத் தான் தனக்குள் உருப் பெறச் செய்கின்றது.

அதனுடைய சந்தர்ப்பம் இப்படி உருப்பெறும் பொழுது அது வளர்ச்சியாகி அந்த உடலை விட்டு அகன்ற பின் அந்த வலிமையான உடலுக்குள் சென்று பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

ஆனால் நாம் தீமை செய்வோரின் உணர்வை எடுத்துக் கொண்ட பின்… தீமை செய்வோரையே எண்ணி… அந்தத் தீமை நமக்குள் வலிமையாக வளர்ந்து விட்டால் அது நம்மைத் தேய் பிறையாக மாறுகின்றது.

அப்படித் தேய்பிறையாக மாறாதடி நாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை மாற்றி நமக்குள் உருவாக்க வேண்டும்.

ஏனென்றால்…
1.நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதன் வழி தான் நம் உயிர் அதை உருவாக்குகின்றது…
2.அணுவாக உருவாக்குகின்றது உணர்வின் சத்தைப் பதியச் செய்கின்றது.
3.அதையே மீண்டும் எண்ணும் பொழுது கடவுளாக நின்று அந்த வழியிலேயே நமக்குள் உருவாக்குகின்றது.

ஆகவே நாம் எண்ணியது எதுவோ உயிர் அது உருவாக்குகின்றது. உருவாக்கியதை… மீண்டும் அந்த எண்ணத்தை வலு சேர்க்கும் போது அந்த வளர்ச்சி நமக்குள் பெறுகின்றது. இது எல்லாவற்றுக்கும் பொதுவானது தான்.

அதே போல் தான் யாம் கொடுக்கும் அருள் உபதேசங்களை ஒரு தடவைப் பதிவாக்கி விட்டு அதற்குப் பின் அப்படியே விட்டு விட்டால் மீண்டும் அதற்கு உணவு கிடைக்க வேண்டுமல்லவா…!

1.நேற்று சாப்பிட்டால் இன்று ஏன் சாப்பிட வேண்டும் இன்று விட்டு விட்டால் என்ன ஆகும்…?
2.அது போல் தான் தியானம் இருந்தோம்… ஆத்ம சுத்தியும் செய்தோம்…
3.மீண்டும் மீண்டும் அதை எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும்…? என்று விட்டுவிட்டால்
4.சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமை நமக்குள் வலுவாகி விடும்.
5.கொடுத்த சக்தியை வளர்ப்பது தடையாகிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து எமக்கு (ஞானகுரு) அனுபவமாகக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

உங்களுக்கு மீண்டும் மீண்டும் அந்த அருள் ஞான உணர்வுகளை இங்கே ஊட்டிக் கொண்டிருப்பதன் நோக்கமே… உங்களை நீங்கள் காத்து… இந்த உலகையும் காத்திடும் அரும் பெரும் சக்திகளாக வளர வேண்டும் என்பதற்குத் தான்…!

Leave a Reply